கூடலூர், அக். 1- ‘சபரிமலைக்கு நடந்து செல்லும் அய்யப்ப பக்தர்களுக்காக விரிவான காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்,’ என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் அவர் கூறிய தாவது:
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியான மெய்நிகர் வரிசை (Virtual Queue) முறையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக விரிவான காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கரு நாடகா மாநில காவல்துறை அதிகாரிக ளுடன் கேரள காவல்துறை அதிகாரிகள் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள காவல்துறையினர் பக்தர்களிடம் நட்புடன் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர தேவைகளை சமாளிக்க விரைவு அதிரடிப்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் சேவைகள் உறுதி செய்யப்படும். முக்கிய வழித்தடங்களில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நிலக்கல், ஜக்குபள்ளம் பகுதியில் 400 முதல் 500 வாகனங்கள் வரை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் பொருத்தப்படும் கண்காணிப்புக் கேமரா, காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். சன்னிதானம், பம்பையில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் விவரங்கள் காவல்துறை மூலம் சரிபார்க்கப்படும். பம்பை ஆற்றில் துணிகளை விட்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
