சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவது திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறதா?
தகவல் அறியும் உரிமை மூலம் சட்டம் – ஒழுங்கு விவரங்களைப் பெறுவதற்கு விலக்கு அளிப்பதா?
ஆட்சியை நடத்துவது யார்? மக்கள் எழுப்பும் கேள்வி!
தகவல் அறியும் உரிமை மூலம் சட்டம் – ஒழுங்கு விவரங்களைப் பெறுவதற்கு விலக்கு அளிப்பதா?
ஆட்சியை நடத்துவது யார்? மக்கள் எழுப்பும் கேள்வி!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அறிக்கை
- சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவது திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறதா? தகவல் அறியும் உரிமை மூலம் சட்டம் – ஒழுங்கு விவரங்களைப் பெறுவதற்கு விலக்கு அளிப்பதா? ஆட்சியை நடத்துவது யார்? மக்கள் எழுப்பும் கேள்வி!
- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- பிரிட்டிஷ் அரசு அனுமதி மறுத்ததால்…
- மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கல்வி வள்ளல் காமராஜர்!
- முட்டை, வாழைப்பழம் வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்!
- பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
- முட்டை வழங்குவது திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறதா?
- கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- தகவல் பெறும் உரிமைச் சட்டம்
- கண்டனத்திற்குரியதாகும்!
- தகவல் அறியும் உரிமையை தமிழ்நாடு அரசாணை மறுக்கிறது!
- 6 மணிநேரத்தில் அரசு ஆணையைத் திரும்பப் பெற்ற த.வெ.க. அரசு!
சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவது திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறதா? தகவல் அறியும் உரிமை மூலம் சட்டம் – ஒழுங்கு விவரங்களைப் பெறுவதற்கு விலக்கு அளிப்பதா? எதிர்ப்புக் கிளம்பியதும், அரசாணையைத் திரும்பப் பெற்ற த.வெ.க. அரசு! ஆட்சியை நடத்துவது யார் என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களைப் பள்ளியில் பெருமளவில் சேர்ப்பதற்காகவும், ஏழை – எளிய மாணவர்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும், நீதிக்கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான சர். பிட்டி. தியாகராயர் அவர்கள், சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்த போது, 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில் பின்னர் மேலும் நான்கு பள்ளிகள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அய்ந்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் அரசு அனுமதி மறுத்ததால்…
1923 இல் 811 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை 1925 இல் 1,671 ஆக உயர்ந்தது. இருப்பி னும், தொடக்கக் கல்வி நிதியிலிருந்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கான செலவை மேற்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதி மறுத்ததால், 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியுடன் இத்திட்டம் முடிவுக்கு வந்தது.
மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய
கல்வி வள்ளல் காமராஜர்!
கல்வி வள்ளல் காமராஜர்!
அதன் பின்னர், குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ராஜாஜியை ஒழித்து, தந்தை பெரியாரால் முதலமைச்சராக்கப்பட்டு, ராஜாஜி மூடிய 6,000 பள்ளிக் கூடங்களைத் திறந்தது மட்டுமல்லாமல், மேலும் 6,000 பள்ளிகளைத் திறந்த காரணத்தால், கல்வி வள்ளல் என்று போற்றப்பட்ட காமராஜர், 1957 ஆம் ஆண்டில், அப்போதைய சென்னை மாநிலம் முழுக்க, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கல்வியாளரும், பெரியார் நெறியாளருமான நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் கல்வித் துறைப் பொறுப்பாளராக இருந்து இதனைச் செயல்படுத்தினார். அதற்குப் பெரிதும் தனியாரின் உதவிகளையே அரசு நாடியிருந்தது.
பின்னர் 1982 இல், அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர். அரசின் நிதியிலேயே தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுத் திட்டத்தை அறிவித்து, அதே ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி வைத்தார்.
முட்டை, வாழைப்பழம் வழங்கினார்
முத்தமிழறிஞர் கலைஞர்!
முத்தமிழறிஞர் கலைஞர்!
‘சத்துணவு என்பது திட்டத்தின் பெயரில் மட்டும் இருந்தால் போதாது’ என்று கருதிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 1989 ஆம் ஆண்டில், சத்துணவில் இரு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்க வகை செய்தார். பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த சூழலில், 1998 முதல் வாரத்திற்கு ஒருமுறை முட்டை வழங்க ஆணையிட்டார். அடுத்து ஆட்சிக்கு வந்தபோது 2007 ஆம் ஆண்டில், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு, வாரத்தின் அய்ந்து நாட்களும் முட்டை வழங்கவும், அதிலும் பேதம் பாராமல், முட்டை சாப்பிடும் பழக்கமில்லாத மாணவர்களுக்காக வாழைப்பழம் வழங்கவும் வகை செய்தார் கலைஞர். பின்னர் ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலத்தில் கலவை சோறுகள் வழங்க வகை செய்யப்பட்டது. இவையெல்லாம் மதிய உணவுக்கான திட்டங்கள் (Mid-Day Meals).
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய ‘திராவிட மாடல்’
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆனால், பள்ளிக்கு வரும் இக் காலக் குழந்தைகள், பெரிதும் காலை உணவு அருந்தாமல் வருவதால், அவர்கள் சோர்வாகவே இருப்பதை அறிந்து, முதல் முறையாக ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களாவார்கள். அத் திட்டத்திற்குப் பெயர் சூட்டும் போதுகூட, பொதுவான அளவில் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’ என்றே பெயர் சூட்டினார். பின்னர் அதனை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியது தி.மு.க. அரசு.
தற்போது, ஆளும் த.வெ.க. அரசு எட்டாம் வகுப்பு வரை இதனை விரிவுபடுத்தியுள்ளது, வரவேற்கத்தக்கது. மேலும், இத் திட்டத்திற்குக் ‘காமராசர் காலை உணவுத் திட்டம்’ என்று பெயர் மாற்றியுள்ளது. காலை உணவுத் திட்டம் என்பதை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முத்துவேல் கருணநிதி ஸ்டாலின் அவர்கள்தான் என்பதைப் பெயர் மாற்றங்களால் மறைத்துவிடமுடியாது. காலத்தால் அது நிலைத்து நிற்கும்.
முட்டை வழங்குவது திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறதா?
அதே நேரத்தில் திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், நெல்லை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை. அரசுப் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளில் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை என்கிறார்கள் ஆசிரியப் பெருமக்கள். முட்டை வழங்கலில் தட்டுப்பாடா? இல்லை முட்டை வழங்குவது திட்டமிட்டுத் தவிர்க்கப்படுகிறதா?
ஏற்கெனவே ‘அக்ஷயப் பாத்ரா’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று சொல்லி, இஸ்கான் அமைப்பு பூண்டு, வெங்காயம் இல்லாத ‘சைவ’ உணவை வழங்குகிறோம் என்று நுழைந்தபோது, கடும் எதிர்ப்பை நாம் தெரிவித்தோம். பின்னர் அத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அத்தகைய முயற்சிகள் பின்னணியில் இருக்கின்றனவா என்னும் சந்தேகம் பொதுவானவர்களுக்கு எழுந்துள்ளது.
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை உடனடி யாக இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இத்தகைய சூழல் ஒரு போதும் தொடரக் கூடாது. பள்ளிக் குழந்தைகளின் உணவு விவகாரத்தில் குழப்பமோ, சிக்கலோ, தடங்கலோ இருப்பதை அனுமதிக்க முடியாது. இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை அரசு வெளிப்படுத்தி, உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது, அரசில் என்ன நடக்கிறது என்பதைக் குடிமக்கள் அறிந்துகொள்ளும் உரிமையை வழங்கியது 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும். காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளுள் முக்கியமானது இது. பல்வேறு முக்கியமான தகவல்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்ததில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால், அதன் வீரியத்தைக் குறைக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து, பல துறைகளை அதிலிருந்து விடுவித்துவிட்டது.
கண்டனத்திற்குரியதாகும்!
தற்போது, தமிழ்நாடு அரசும் அத்தகைய வழி முறையைப் பின்பற்றத் தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் கீழ் இயங்கும் பொது சட்டம் – ஒழுங்குத் துறைக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) இருந்து முழு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை இன்று (27.9.2026) அரசிதழில் வெளியாகியுள்ளது அதிர்ச்சிக்குரியது. “தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இன் பிரிவு 24 (4)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான பொதுத் துறை (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரிவை, மேற்படி சட்டத்திற்கு பொருந்தாத அமைப்பாக இதன் மூலம் அறிவிக்கிறார்” என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமையை
தமிழ்நாடு அரசாணை மறுக்கிறது!
தமிழ்நாடு அரசாணை மறுக்கிறது!
வெளிப்படையான நிர்வாகம் (Transparent Government) வழங்குவோம் என்று பிரச்சாரம் செய்த த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், மிக முக்கியமான சட்டம் மற்றும் ஒழுங்குத் துறைக்கே திரையிட்டு மறைக்க முயற்சிப்பது ஏன்? நாட்டின் சட்டம் – ஒழுங்கு பெரும் கீழிறக்கத்துக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனைச் சரி செய்து நிர்வாகத்தைச் சீர்செய்வதை விடுத்து, அத் தகவல்கள் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்துவது சரியானதல்ல. மனித உரிமை ஆணையத்தின் குறிப்புகள், துப்பாக்கிச் சூடு குறித்த ஆணைய அறிக்கைகள், காவல் மர ணங்கள் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து, தகவல் அறியும் உரிமையை இந்த அரசாணை மறுக்கிறது.
சட்டம் ஒழுங்குச் சீர்கேட்டை ஒழிப்பதற்குத் தான் அரசு வேண்டுமே தவிர, ஒளித்து வைப்பதற்கு அல்ல. உடனடியாக இந்த அரசாணை திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த உரிமைகள் பறிக்கப்படக் கூடாது.
6 மணிநேரத்தில் அரசு ஆணையைத்
திரும்பப் பெற்ற த.வெ.க. அரசு!
திரும்பப் பெற்ற த.வெ.க. அரசு!
அனைத்துக் கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) இருந்து சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைக்கு முழு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு த.வெ.க. அரசு 6 மணிநேரத்தில் திரும்பப் பெற்றுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
முக்கியமான பிரச்சினைகளில் இப்படி ஆழம் பார்ப்பதும், யாரும் எதிர்க்கவில்லை என்றால் அப்படியே தொடர்வதும் ஓர் அரசுக்கு அழகல்ல. ஆட்சி அமைந்தது முதலே இப்படி பல அறிவிப்புகளும், அரசாணைகளும் வெளிவந்து, பின்னர் திரும்பப் பெறப்படுவது தொடர்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் ‘யாரால் ஆட்சி நடத்தப்படுகிறது’ என்னும் கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
வெளிப்படை நிர்வாகம் என்பதும், மக்களுக்கான அரசு வெறும் வார்த்தை ஜாலமாக இருக்கக் கூடாது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.9.2026
