மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

“எல்லாம் போய்விட்டது என்றால் நான் இதைக் கூட சொல்ல வேண்டாம். ஒரு யத்தனமும் பண்ண வேண்டாம். மடத்தைக் கலைத்து விடலாம். ஆனால் போய் விடவில்லை. ஒரு சின்ன பொறி அளவுக்காவது இருக்கிறது. அது கூட இல்லையானால் நான் இத்தனை சொல்வதைக் கேட்டுக் கொண்டு, இவ்வளவு பேர் உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள். நான் சொல்கிறபடி நீங்கள் செய்வதோ, செய்யாததோ ஒரு பக்கம் இருக்கட்டும், என்னை சொல்லவாவது விட்டு எதிர்த்து கோஷம் போடாமல், பொறுமையோடு கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே இல்லையோ! அதனால்தான் ஒரு பெரியாவது இருப்பதாக நம்பிக் கொண்டு, அதை எப்படியாவது விலா வெடிக்கிற மட்டும் ஊதி, ஊதிக் கொஞ்சம் ஜ்வாலை வரும்படி செய்ய முடியுமா? என்று முயன்றுக் கொண்டிருக்கிறேன். ஜனங்களின் புதுப்போக்குப் படியே தானும் போவது என்றால் அது பகவத்பாதாளுக்குப் பண்ணுகிற துரோகந்தான்” என்கிறார் பெரியவா! எப்படியாவது குழந்தைத் திருமணத்தின் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதில் எவ்வளவு குறியாக இருக்கிறார். அதனால்தான் நெஞ்சு வெடிக்கிறாற்போல் “ஊதி, ஊதி” சிறு பொறியை பெரிதாக்க முயல்வாராம். அதன் மூலம் ‘பால்ய விவாஹ’ முறையைக் காப்பாற்றுவாராம்.
சந்திரசேகேந்திர சரஸ்வதியார் மேலும் கூறுகிறார், “மனசிலிருப்பதைக் கொட்டித் தீர்த்தால்தானே நல்லது? பரஸ்பரம் நீங்கள் என்னிடம் பக்தி செய்வதும் நான் ஆசிர்வாதம் செய்வதும் இருக்கட்டும். அது இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனாலும் இந்த மடம் எதற்காக ஏற்பட்டது என்று சொல்லி, அந்த வழியில் உங்களைப் போகப்பண்ணாமல் உங்கள் பணத்தை மட்டும் நான் வாங்கிக் கொண்டால் அது பிடுங்கியடித்துத் தின்கிற காரியந்தான் என்பதால் மனசைவிட்டுச் சொன்னேன்”. காஞ்சி மடம் ஸநாதனத்தை – (பார்ப்பனியப்) பண்பாட்டைக் காப்பாற்றி, குழந்தைத் திருமணத்தை நிலை நாட்டி விட வேண்டும் என்பதில் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள்.
“இந்த ‘கன்யா விவாஹ’ந்தான் சட்டமாக வந்து கையை ரொம்பவும் கட்டிப் போட்டு விட்டது. அரசாங்க சட்டத்துக்கு அடங்கிப் போகத்தான் வேண்டும். ஒரு பெண்ணுக்கு மனோ, பாவ விஹாரம் இல்லாத காலத்திலேயே “இவர்தான் தெய்வம்” என்று நினைக்கும்படியாக ஒரு புருஷனின் கையில் பிடித்துக் கொடுத்து (ஏதோ ‘ஆடு, மாடு’ போல் பெண்ணைக் குறிப்பிடுகிறார்) அந்தப் பழக்கம் ஊறிய பிறகு அதாவது மன விஹாரம் உண்டாகிற காலத்தில் தன் சரீரத்தை அர்ப்பணம் செய்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்கிற தர்ம சாஸ்திரத்தின் நிரந்திரமான சட்டத்துக்கு விரோதமாகத்தான் அரசாங்க சட்டம் இருக்கிறது என்றாலும் கூட “சட்ட மறுப்பு பண்ணு” என்று சொல்வது சரியில்லைதான்! அதனால் ‘எறும்பூர கல் தேயும்’ என்கிற மாதிரி நாம் விடாமல் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்து அவர்களுடைய மனம் மாறுகிறதா என்று பார்க்க வேண்டியதுதான்!” என்று மகா பெரியவா புலம்பித் தள்ளினார். (சான்று: “பால்ய விவாஹம் ஏன்?” – காமகோடி “தெய்வத்தின் குரல்” பாகம் 2)
“லோக குரு (உலகத்திற்கே இவர்தான் ஆசானாம்!) குழந்தைத் திருமணத்தை ஆதரித்து ஆரம்பத்தில் மிரட்டியும் பின் கெஞ்சியும் (கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் பார்ப்பனர்களுக்குக் கை வந்த கலையாயிற்றே!) பார்த்தார். பின் மக்களிடமே நேரடியாகக் கடவுளின் குரலாகவே சொல்லிப் பார்த்தார் (பார்ப்பனர்கள் உட்பட). யாருமே அந்தத் தெய்வத்தின் குரலைக் கேட்கவில்லை. அரசாங்கமும் முயற்சியால் குழந்தைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் சட்டத்தை இயற்றியது. அதைக் கண்ட மகா பெரியவா “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற கதையாக சட்டம் வந்த பின்னும் மனம் தளராமல் தன் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். பார்ப்பனர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் ஸநாதன தர்மத்தைக் கைவிட மாட்டார்கள் என்பதற்கு சந்திரசேகேந்திர சரஸ்வதியின் புலம்பலே நமக்கு புலப்படுத்தும். குழந்தைத் திருமணத்தை லோக குருக்கள் முதல் சாதாரண சவுண்டிப் பார்ப்பான் வரை ஆதரித்தவர்கள்தான். அவர்களை எதிர்த்து சீர்திருத்தக்காரர்களும் விடாமல் போராடினார்கள். தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் பார்ப்பனர்கள் பல தளங்களிலும் போராடினார்கள்.
குழந்தைத் திருமணம் பற்றிய விவாதங்கள் நாடு முழுதும் பெரிதாக எழுந்தது. அப்பொழுது நாட்டில் ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட மெட்ராஸ் பிரசிடென்ஸி, பெங்கால் பிரசிடென்ஸி, பம்பாய் பிரசிடென்ஸி, மத்திய பிரசிடென்ஸி ஆகிய பகுதிகளில் 1919 இல் இரட்டை ஆட்சி முறை ஆங்கிலேயர்களால் அமல்படுத்தப்பட்டது. காவல், நிதி, துறை, கல்வி, சுகாதாரம், பொது நலம் ஆகியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் கவனிக்க ஆங்கிலேய அரசு ஏற்பாடு செய்தது. மாண்டேகு செம்ஸ்போர்ட் 1919 இல் ஆங்கிலேய அரசுக்குக் கொடுத்த பரிந்துரைப்படி இது செயல் பாட்டிற்கு வந்தது. மெட்ராஸ் பிரசிடென்ஸி யின் சட்டசபையில் குழந்தைத் திருமண தடைச் சட்டம் பற்றி விவாதம் வந்தது. ஜாதி வெறி பிடித்த ஸநாதனப் பார்ப்பனர் (வாயாடி) சத்ய மூர்த்தி அய்யர் எப்பொழுதும் பார்ப்பனர் நலனிலும், மனு தர்ம சட்டங்களிலும் வெறி பிடித்தவர் போல் வாதாடுபவர். அப்பொழுது மெட்ராஸ் பிரசிடென்ஸியில் நீதிக் கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அரசு குழந்தை தடை சட்ட முன் வரைவை தாக்கல் செய்த பொழுது, எதிர்க் கட்சி வரிசையில் இருந்த “வாயாடி” என்று பெருமை பெற்ற பார்ப்பனர் சத்யமூர்த்தி அய்யர் சட்ட முன் வரைவை எதிர்த்து சட்ட மன்றத்தில் பெரும் கூச்சல் எழுப்பினார். இம் மசோதாவை எதிர்த்து கடுமையாக விவாதங்களை முன் வைத்தார். “பால்ய விவாஹத்தை தடை செய்தால் நாம் ரவ்த்திரவாதி” என்ற நரகத்திற்குத்தான் போக வேண்டும் என்று கூக்கிரலிட்டார்.
சீர்திருத்தவாதிகள் பெண்களை. “சதி” என்ற பெண் கொலையை ஒழிக்கப் பாடுபட்ட ராஜாராம் மோகன் ராய். குழந்தைத் திருமணத்தையும் ஒழிக்க வேண்டும் என்பதிலும் முனைப்பாக இருந்தார். இது போல சில சீர்திருத்தத்தில் நம்பிக்கையுள்ள பார்ப்பனர்கள் சிலரும் குழந்தைத் திருமணத்தை தடை வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டனர். ஆங்கிலேய அரசாங்கம் கொண்டு வர முயன்ற எல்லா சமூக நலத் திட்டங்களுக்கும் ஸநாதனப் பார்ப்பனர்கள் முட்டுக்கட்டை போடுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தனர். வில்லியம் பென்டிங் பிரபு “சதி” ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த பின்னும் பல ஆண்டுகள் கழித்தே அந்த பெண்கள் கொலை தடுத்து நிறுத்தப்பட்டது. அப்பொழுதும் ஸநாதனப் பார்ப்பனர்கள் அதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்தனர். அதே போன்ற எதிர்ப்பை குழந்தைத் திருமணத் தடை சட்டத்திலும் அரசு எதிர் நோக்க வேண்டி வந்தது. அதனால் இந்த நிகழ்வில் ஆங்கிலேய அரசு ஆரம்பத்தில் ஒரு மென்மையானப் போக்கையே கடைப்பிடித்தது.
ஸநாதனமும், பார்ப்பனியமும் பெண்களை “சதி” என்ற பெயரில் உயிரோடு நெருப்பில் தள்ளி துடிக்கத்துடிக்கக் கொன்றது மட்டுமன்றி, “குழந்தைத் திருமணம்” என்ற பெயரில் சிறு, சிறு குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் என்ற பெயரில் வளர்ந்து வரும் பொழுதே திருமண பந்தத்தில் மாட்டிவிட்டு (உயிரோடு இருக்கும்போதே கொல்லாமல் கொல்லும் வகையில்) அவர்களை இளம் விதவைகளாக்கி வாழ்நாள் முழுவதும் முடக்கிப் போட்டது. அதை ஒழிக்க வேண்டும், சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஸநாதனவாதிகள் அடங்குவர் என்று அரசாங்கமே நினைத்தது. அதனால் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தைக் கொண்டு வர ஆங்கிலேய அரசு முன் வந்தது. 1929ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு குழந்தைத் திருமண தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டம் கொண்டு வந்த போது பலத்த எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
(,இன்னும் நிறைவடையவில்லை)
