இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான நடவடிக்கைகள்!
இரண்டு தேர்தல் ஆணையர்களின் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டும் உண்மைகள்!
நாட்டின் ஜனநாயகத்துக்கும், குடியரசுக்கும் ஆபத்து! ஆபத்து!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
இரண்டு தேர்தல் ஆணையர்களின் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டும் உண்மைகள்!
நாட்டின் ஜனநாயகத்துக்கும், குடியரசுக்கும் ஆபத்து! ஆபத்து!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
- இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான நடவடிக்கைகள்! இரண்டு தேர்தல் ஆணையர்களின் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டும் உண்மைகள்! நாட்டின் ஜனநாயகத்துக்கும், குடியரசுக்கும் ஆபத்து! ஆபத்து! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- ஒன்றிலிருந்து மூன்றாக உயர்த்தப்பட்டதன் காரணம்!
- உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு!
- ஞானேஷ்குமாரின் தன்னிச்சையான செயல்பாடுகள்!
- கேபினெட் செயலாளருக்கு இரு ஆணையர்களின் கடிதம்!
- அதிகார வரம்பு மீறல், அரசியலமைப்புச் சட்ட மீறல்!
- நாடு நீதியின் போக்கில் தான் செல்கிறதா?
- விரிவாக விசாரிக்க வேண்டியது அவசியம்!
- ஓரணியில் நின்று களம் காணுவது அவசியம்!
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான நடவடிக்கைகள்! இரண்டு தேர்தல் ஆணையர்களின் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டும் உண்மைகள்! இந்திய நாட்டின் ஜனநாயகத்துக்கும், குடியரசுக்கும் ஆபத்து! ஆபத்து! ஜனநாயகவாதிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஒன்றிணைந்து களம் காணவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் மீது, மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்திற்குள் நடந்துவரும் பிரச்சினைகள் குறித்து நேற்று (23.9.2026) ஆங்கில நாளேடான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளிக் கொண்டுவந்துள்ள செய்திகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
ஒன்றிலிருந்து மூன்றாக உயர்த்தப்பட்டதன் காரணம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, தேர்தல் ஆணையம் என்பது சுயேட்சையான அமைப்பாகும். ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்த சூழலில், 1989 ஆம் ஆண்டு மூன்று தேர்தல் ஆணையர்கள் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, இரண்டரை மாதங்கள் மட்டுமே இருந்தது. பின்னர், 1993 அக்டோபர் முதல் மூன்று தேர்தல் ஆணையர்கள் என்பதும், அதில், ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையர் என்பதுமான நடைமுறை உருவாக்கப்பட்டது. ஒருவரே தன்னிச்சையாக முடிவெடுப்பதற்குப் பதிலாக, நாட்டின் மிக முக்கியமான இந்தப் பொறுப்பில், கூட்டுப் பொறுப்பும், கூட்டு அறிவும் (Collective Wisdom) இருப்பது நல்லது என்ற நோக்கத்திற்காகவே, இந்த மூன்று தேர்தல் ஆணையர்கள் என்ற முறை உருவாக்கப்பட்டது..
உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு!
தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ‘அனூப் பரன்வால் எ. இந்திய ஒன்றிய அரசு’ வழக்கில் தேர்தல் ஆணையர் சார்பற்றவராக இருக்க வேண்டும் என்ற நோக்கில், 2023 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி அடங்கிய மூவர் குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கலாம் என்று கூறியதுடன், நாடாளுமன்றம் இதற்கான தனிச் சட்டத்தை இயற்றும் வரை இந்த ஆணை இருக்கும் என்று கூறியது. ஆனால், அதே ஆண்டின் இறுதியில், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக, ஓர் ஒன்றிய அமைச்சர் இடம்பெறும்வகையில் சட்டத்தை வடிவமைத்து நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
இதன் மூலம், நடுநிலைமை ஏற்படுவதற்கு மாறாக, மூவரில் இருவர் (பிரதமர், ஒன்றிய அமைச்சர்) ஆளுங்கட்சி சார்பானவர்களாகவும், ஒருவர் மட்டுமே மாற்று அணியி னராகவும் (எதிர்க்கட்சித் தலைவர்) இருக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இந்தச் சட்டம், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறானது என்று கூறி தொடுக்கப்பட்ட வழக்கு (ஜெயா தாக்கூர் எ. இந்திய ஒன்றிய அரசு) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இரு நீதிபதிகளின் மாறுபட்ட முடிவுகள் காரணமாக, அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. (அதுகுறித்து பிறகு தனியாக அறிக்கை வெளிவரும்).
ஞானேஷ்குமாரின் தன்னிச்சையான செயல்பாடுகள்!
மேற்சொன்ன 2023 ஆம் ஆண்டு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர்கள் தான் தற்போது உள்ள தேர்தல் ஆணையர்கள் மூவரும். அவர்களில் டாக்டர் சுக்விர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் 2024 மார்ச் 15 அன்றும், மற்றொரு தேர்தல் ஆணையர் டாக்டர் விவேக் ஜோஷி 2025 பிப்ரவரி 19 அன்று நியமிக்கப்பட்டதுடன், அன்றே ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றார். (ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகளான சந்துவும், ஞானேஷ் குமாரும் 2024 இல் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படும்போதே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.)
இவர்களில், தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டும் தன்னிச்சையாகச் செயல்படுவதும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட கடந்த பல மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் கூட்டமே கூட்டப்படாமல் தவிர்க்கப்பட்டதும், மற்ற இருவரின் கருத்துகள் அறியப்படாமலே முடிவுகள் எடுக்கப்பட்டதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கேபினெட் செயலாளருக்கு
இரு ஆணையர்களின் கடிதம்!
இரு ஆணையர்களின் கடிதம்!
இது தொடர்பாக டாக்டர் சுக்வீர் சிங் சந்துவும், டாக்டர் விவேக் ஜோஷியும் தனித்தனியாக, இந்தியாவின் தலைமைச் செயலாளரான கேபினெட் செயலாளருக்குக் கடிதம் எழுதி யுள்ளனர்.
புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, பெயர்களை நீக்கு வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய வாக்காளர்கள் மீதான நடவ டிக்கைகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்றும், சட்டவிரோதமானவை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களை நீக்கம் செய்துள்ள எஸ்.அய்.ஆரை நடைமுறைப்படுத்தும் முடிவு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. (பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரின் வாக்குகளே எஸ்.அய்.ஆரால் கேள்விக்குள்ளாகி உள்ளன!) எஸ்.அய்.ஆர் எனப்படும் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறு ஆய்வை’ நாடு முழுவதும் அமல்படுத்தும் பணி மூன்று ஆணையர்களின் மேற்பார்வையிலும் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படு கிறது. ஆனால், தங்களுக்குத் தெரியாமலே எடுக்கப்பட்ட முடிவுகள், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து, கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறையாவது சந்து மற்றும் ஜோஷி ஆகியோர் அதிகாரப்பூர்வமாகத் தங்கள் ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ளனர் என்று தற்போது தெரியவந்துள்ளது. அதில் ஒரே நாளில் இருவருமாக நான்கு முறை தங்கள் மறுப்பைப் பதிவு செய்துள்ளனர்.
அதிகார வரம்பு மீறல், அரசியலமைப்புச் சட்ட மீறல்!
எனினும், இவை எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படா மல், தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவு மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கிறதென்றால், நாட்டின் தன்னிச்சையான அதிகாரம் படைத்த, நடுநிலைமையில் நின்று செயலாற்ற வேண்டிய ஓர் ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிகார வரம்பு மீறல், அரசியலமைப்புச் சட்ட மீறல் என்பது சாதாரணமானதா?
மூன்று தேர்தல் ஆணையர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் எது பெரும்பான்மையோ அது தானே இறுதி செய்யப்படும். நீதிமன்றங்களிலும் இது தானே நடைமுறை! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகவே இருந்தாலும், அவர் இடம்பெற்றிருக்கும் ஓர் அமர்வில் பெரும்பான்மைத் தீர்ப்பு அவரது தீர்ப்புக்கு மாறாக இருந்தாலும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு தானே உச்சநீதிமன்றத்தின் முடிவாக அமையும்.
நாடு நீதியின் போக்கில் தான் செல்கிறதா?
ஆனால், தேர்தல் ஆணையப் பிரச்சினையில் இவற்றுக்கு மாறாக, தலைமைத் தேர்தல் ஆணையரே, தனக்கு இல்லாத அதிகாரங்களை எடுத்து வைத்துக் கொண்டு, பிற தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை, மறுப்பைப் புறக்கணித்துள்ளார் என்றால், நாடு நீதியின் போக்கில் தான் செல்கிறதா? சட்டப்படிதான் நடக்கிறதா என்ற மிக முக்கியமான கேள்வி வெடிக்கிறதே! இரண்டு ஆணையர்களின் எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தலுக்கு முரணாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டதாகவும், அதன் நடவடிக்கை ‘‘அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதும், சட்டவிரோதமானதுமான’’ ஒன்று என்றும் டாக்டர் சந்து, தனது கடிதம் ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருக்கும்போது தான் இத்தனை மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன என்றால், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதல்லவா?
வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரம் அந்தந்த தொகுதிகளில் உள்ள தேர்தல் பதிவு அதிகாரிக்கு (ERO) மட்டுமே உரியது. இந்த அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது – ஓரிடத்தில் குவிக்கப்படவில்லை என்பதுதான், வாக்காளர் பட்டி யல் முறைகேடு குறித்த ஒவ்வொரு அரசியல் குற்றச்சாட்டுக்கும் எதிராக ஆணையத்தின் வாதமாக இருந்துவந்தது. ஆனால், இப்போது இணையத்தில் அப் பட்டியலை அணுகுவதிலேயே அவர்களுக்கு அதிகாரம் குறைக்கப்பட்டு, தேர்தல் ஆணை யத்தின் தகவல்தொழில்நுட்பப் பிரிவுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; அதிகாரம் ‘டில்லியில்’ குவிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விரிவாக விசாரிக்க வேண்டியது அவசியம்!
வாக்காளர் மென்பொருளின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை தேர்தல் ஆணையர்களே எழுப்பியிருப்பது, எதிர்க்கட்சிகள் இத்தனைக் காலமாக எழுப்பிவரும் பிரச்சினை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இப்போது வெளிவந்திருப்பது கூட பனிப்பாறையின் ஒரு முனை (Tip of the Iceberg) மட்டுமே! இன்னும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரக் குவிப்பினாலும், சார்பு நடவடிக்கைகளாலும் எத்தகைய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை விரிவாக விசாரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் தானாகப் பதவி விலகுவதே நியாயம் ஆகும். அதற்கு அனைவரும் வலியுறுத்தவேண்டும். குடியரசுத் தலைவர் தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பின்னணியில் இருந்து இவரை இயக்குபவர்கள் யார் என்பது வெளிக்கொண்டு வரப்படவேண்டும். இது மிகவும் அவசரமான காலகட்டம்! நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஆபத்துக்கு அடிப்படையான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
மேலும் ஒரு செய்தியை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது இன்றியமையாததாகும். 2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தில், ‘பணிக் காலத்தில் தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக, பிற்காலத்தில் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடியாத’ அளவுக்குச் சட்டத்தைத் திருத்தியுள்ளனர். இதன்மூலம், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாகச் செய்து கொண்டு, அதன்பிறகுதான் முறைகேடுகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளன என்று சந்தேகிப்பதற்கு முகாந்திரங்கள் உள்ளன.
ஓரணியில் நின்று களம் காணுவது அவசியம்!
ஏற்கெனவே ஓட்டுத் திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத் தன்மை இன்மை என்ற பிரச்சினைகளுடன், தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகார அத்துமீறலும் வெளிவந்துள்ளது. நாட்டில் நடந்து வரும் அத்தனை அநீதிகளும், பாசிசப் போக்கும் இந்தத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினாலேயே மேற்கொள்ளப்படுகிறது என்ற சூழலில், அத்தனை ஆபத்துகளுக்கும் அடிப்படை, இக் காலகட்டத்தில் நடந்த தேர்தல்களே – அதில் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ள முறைகேடுகளே! நாட்டின் ஜனநாயகமே கேள்விக் குறியாகி, இந்தியக் குடியரசுக்கே ஆபத்து நேர்ந்துள்ள இந்தச் சூழலில், அனைத்து எதிர்க்கட்சிகளும், முன்னாள், இந்நாள் மாநில முதலமைச்சர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் இப் பிரச்சினையில் ஓரணியில் நின்று களம் காணுவது அவசியமாகும்.
சென்னை தலைவர்,
24.9.2026 திராவிடர் கழகம்
