போற்றத் தகுந்ததா தேவதாசி முறை?

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

2016-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு. இந்து சமூகத்தில் சிறுமிகளைத் ‘தேவதாசிகளாக’ அர்ப்பணிக்கும் சட்டவிரோத நடைமுறை நிலவுவதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், அதனைப் பெண்களுக்கு இழைக்கப்படும் ஒரு ‘தீமை’ என்று குறிப்பிட்டது; ஏனெனில், இத்தகைய பெண்கள் பின்னர் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதோடு, விபச்சாரத்திலும் தள்ளப்படுவதைச் சுட்டிக்காட்டி, மிக உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்ட நீதிபதிகள் எஃப்.எம்.அய்.கலிஃபுல்லா, எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் (குறிப்பாக கருநாடகா, மகாராட்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம்) ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, ‘சிறுமிகளைத் தேவதாசிகளாகப் பணியாற்ற கட்டாயப்படுத்தும் தேவையற்றதும், ஆரோக்கியமற்றதுமான நடைமுறையைத் தடுப்பதற்கான ஒன்றிய அரசின் விதிமுறைகளை அவர்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டது. அதற்கான சட்டங்களை இயற்றவும், இயற்றியுள்ள சட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஆணையிட்டது. தேவதாசி என்னும் பெயரில், தனது வாழ்நாள் முழுவதும் ஒரு கடவுளுக்காகவும், கோயிலின் வழிபாடு, சேவைக்காக என்றும் பெண்கள் ‘அர்ப்பணிக்கப்படும்’ கொடுமை இன்னமும் கூட சில மாநிலங்களில் வழக்கத்தில் இருக்கிறது. சட்டவிரோதமாக அந்த நடைமுறை தொடர்வதைத் தடுக்க பல மாநிலங்களிலும் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன. கடந்த ஆண்டு கூட கருநாடகத்தில் தனிச் சட்டம் நிறைவேறியிருக்கிறது.

திருமணத்தை ஒத்த ஒரு சடங்கைப் போல இதை நடத்தி, பெண்களை ஆயுள் காலம் முழுமையும் அடிமையாக்கும் இந்தக் கொடுமையிலிருந்து, கடந்த ஈராண்டுகளுக்கு முன்பு கூட 7 வயதுப் பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டார். கடவுள், பக்தி, கோயில், கலாச்சாரம், கலை வளர்ப்பு என்ற பெயரில் ‘தேவதாசி’ முறையைச் செயல்படுத்தி, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தேவதாசிகள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இந்தக் கொடுமையை நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சட்டமியற்றித் தடுத்தது தமிழ்நாடு அன்றைய மெட்ராஸ் மாகாண அரசு! அன்றைய சட்டமன்றத்திலும், சமூகத் தளத்திலும் நடந்த நீண்ட நெடிய விவாதங்களும், போராட்டங்களும் தமிழ்நாட்டின் சமூகச் சீர்திருத்த வரலாற்றில் இன்றியமையாதவை. தேவதாசிகளாகக் கொடுமைப்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து எழுந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் போன்றோரின் பெரு முயற்சியும், தந்தை பெரியார் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலும், சமூகத்தில் சுயமரியாதை இயக்கம் உண்டாக்கிய கருத்துப் புரட்சியும்தான் அச் சட்டத்தைச் சாத்தியமாக்கின. அச் சட்டத்தில் இருந்த குறைகள் பின்னர் களையப்பட்டு, படிப்படியாக  நடைமுறைப்படுத்தப்பட்டு, தேவதாசி முறை ஒழிப்பில் முழுமையான வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம்.

இந்தச் சூழலில், ஆங்காங்கே தேவதாசி முறையை ஆதரித்தும், விதந்தோதியும், ‘அது கலை வளர்த்த காலம் எப்படிப்பட்டது தெரியுமா?’ என்று அதை ஒரு பொற்காலமாகத் திரித்தும் ஆய்வுகள் என்ற பெயரில் அவ்வப்போது சிலர் எழுதுவதும், பேட்டி கொடுப்பதும், பின்னர் அதற்கு எழும் எதிர்ப்பு கண்டு அடங்குவதுமாகக் கடந்த சில ஆண்டுகளாக சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தேவதாசி மரபை ஆதரித்து, நாட்டிய நாடக நிகழ்வை மயிலாப்பூரில் நடத்தினார்கள்.

அண்மையில், அத்தகையதொரு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் தேவதாசி முறை குறித்து ‘அதில் சில கேடுகள் இருந்திருக்கலாம். ஆனாலும்…’ என்ற தொனியில் சிலர் பேசியிருக்கின்றனர். சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை அரும்பாடுபட்டுத் தடுத்திருக்கும் சூழலில், மீண்டும் அதனைப் போற்றியும், பாராட்டியும் நடத்தப்படும் இத்தகைய நிகழ்வுகளின் நோக்கம் என்ன? ‘இலக்கியப் பீடாதிபதிகளாகத்’ தங்களைக் கருதிக் கொண்டு, தங்களுக்குத் தாங்களே வெட்கமின்றி பட்டம் சூட்டிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். கையாட்கள் தானே இதன் பின்னணியில் இருப்போர்! அக் காலத்தில் புகழ்பெற்ற ஒரு சில கலைஞர்களின் வாழ்க்கையை முன்னிறுத்தி, தேவதாசி முறையால் 99% பெண்கள் பாதிக்கப்பட்டிருந்ததையும், அவர்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த கொடுமையையும் மறைக்க முனைவது அறிவு நாணயமற்ற செயல் அல்லவா?

தேவதாசி முறையைத் தடுப்பதற்கான சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்திலும், இதே போன்ற குரல்கள் எழாமல் இல்லை. அந்தச் சூழலைத் தந்தை பெரியாரின் காரம் நிறைந்த ‘குடிஅரசு’ துணைத் தலையங்கம்  (30.10.1927) காய்ச்சி எடுக்கிறது. ‘‘இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

…எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமுகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.” இன்றைக்கும் இத்தகைய கொடுமையைத் தான் கலாச்சாரம், கலை வளர்ப்பு என்ற பெயரில் மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது
ஆர்.எஸ்.எஸ்!

பண்பாடு, கலாச்சாரம், கலைகள் என்னும் பெயரால், ஒழிக்கப்பட்ட சமூக அநீதிகளை மீண்டும் கொண்டு வர முயல்வோர் யாராயினும் அவர்களின் நடவடிக்கைகள் சமூக விரோதமே ஆகும். இன்றைக்கும், பல நூற்றுக்கணக்கான தேவதாசிப் பெண்கள் கருநாடகத்தில் எத்தகைய துயரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவோர், ஒரு போதும் தேவதாசி முறையை ஆதரித்துப் பேச முடியாது. விஷ உருண்டைகளில் இனிப்பு தடவிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பனியக் கூட்டத்தின் மாய்மாலப் பிரச்சாரம் முறியடிக்கப்பட வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *