‘‘உங்கள் வீட்டில் செல்வம் பெருகவேண்டுமா? குதிரை லாடம் வாங்கி வீட்டு வாசலில் ஆணி அடித்து வையுங்கள்’’ என்று ஒரு பெண்மணி கூறும் காணொலி ஒன்று வலம் வருகிறது,
அக்காணொலியில் தட்டு நிறைய குதிரை லாடம் போன்ற ஒன்று இரும்புத் தகடில் செய்யப்பட்டவை நிறைய உள்ளன. அருகில் ஒரு பாத்திரத்தில் சாம்பி ராணி புகை வந்துகொண்டிருக்கிறது, காணொலியில் பெண் ஒருவர் குதிரை லாடம் போன்ற அந்தத் தகடை புகையில் காட்டி, அருகில் உள்ள பால் நிறைந்த பாத்தி ரத்தில் போடுகிறார், அது தூய நாட்டுப் பசும்பாலாம்.
அந்தப் பெண்மணி பேசும்போது, ‘‘குதிரையின் பின்னங்காலில் இருந்து எடுத்த லாடம் இது, புதியது இல்லை, பாருங்கள் துரு பிடித்திருக்கு. ஆகவே, இது ‘புனித’மானது’’ என்கிறார். ‘‘இதை உங்கள் வீட்டில் வைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை செய்தால் செல்வம் தேடி வரும். குறிப்பிட்ட சுப லக்னத்தில் இதை யாக குண்டலத்தில் வைத்து பூஜித்து தருகிறேன், இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள்” என்று கூறுகிறார். இதன் மதிப்பு ரூ. 5,000 என்று கூறுகிறார். அந்தச்சட்டியில் உள்ள ஒட்டுமொத்த இரும்புத் தகடுகளின் மதிப்பே ரூ.100 கூட இருக்காது.
இது முழுக்க முழுக்க அறிவியலுக்குப் புறம்பான ஒரு வணிக உத்தியே தவிர, வேறில்லை. உழைப்பும், திட்டமிடலும் இல்லாமல், வெறும் உலோகத் தகடை வாசலில் மாட்டுவதால் மட்டுமே ஒருவரது வறுமை நீங்கி, அதிபராகிவிட முடியாது என்ற எளிய உண்மையை மக்கள் உணர மறுப்பதே இதுபோன்ற பொய்கள் வியாபாரிகளுக்கு மூலதனமாகிறது.
கருநாடக மாநிலம், பீதார் பகுதியில் உள்ள குன்று ஒன்றில் இருந்த குகை ஒன்றில், குடும்பத்தினரால் கைவிடப்பட்டு நீண்ட ஆண்டுகளாகத் தங்கி இருந்த பெண் ஒருவரை, அப்பகுதி மக்கள் சாமியாரிணி ஆக்கிக் கும்பிட்டனர். அந்த சாமியாரிணி பிரசாதம் என்ற பெயரில் சாம்பலை (விபூதி) அனைவருக்கும் தந்தவர்.
இந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவால் குகையிலேயே இறந்து கிடந்தார். இதனை அறிந்த காவல்துறையினரும், உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் குகைக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போதுதான் அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது: இறந்துபோன சாமியாரிணி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கிய சாம்பல், வேறொன்றுமில்லை – அவரது சொந்த மலத்தை அவரே எரித்து உருவாக்கிய சாம்பல்!
இந்தப் பிரசாதத்தை வாங்க, அருகில் உள்ள மாநிலத்து அரசியல் பிரபலங்கள் எல்லாம் வரிசையில் நின்றார்கள் என்பதும், 2015 ஆம் ஆண்டு கன்னட நாளிதழில் வந்த செய்தியாகும்.
‘சந்தனமும், மலமும் சமமானதே’ என்று சொன்னவர் பரமஹம்சர் என்று துதிக்கப்படுகிறார்.
‘‘மாட்டு மூத்திரத்தை அருந்தினால், சகல நோயும் பறந்தோடிவிடும் ’’என்பவர் காமகோடியாக இருக்கிறார் – ஓர் அய்.அய்.டி.யின் இயக்குநராக இருக்கிறார்.
காலில் சாணியை மிதித்துவிட்டால், ஓடோடி கால்களைக் கழுவுகிறான். அதில் மதம், பக்தியைக் கலந்துவிட்டால், தட்சணை கொடுத்து, பய பக்தியாக இரு கண்களையும் மூடிக்கொண்டு, ‘மொடுக்கு மொடுக்கென்று’ குடிக்கிறான்.
இந்த மூடத்தனத்தைச் சுட்டிக்காட்டினால் முறை முறையென்று முறைக்கிறான்!
ஆன்மிகம், மலம், மூத்திரத்தை வைத்து ஒரு பெண் கோடி கோடியாகச் சம்பாதிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்!
