சென்னை, செப்.20 தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி என்றும், ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப் பட்டது. அதன்படி, நேற்று (19.9.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது மற்றும் முரசொலி செல்வம் விருது ஆகியவை வழங்கப்பட்டன.
7 பேருக்கு விருது
- பெரியார் விருது – விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா.
- அண்ணா விருது ––- சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ்.
- கலைஞர் விருது – திருச்சி சிவா.
- பாவேந்தர் விருது – கனிமொழி என் வி.என். சோமு
- பேராசிரியர் விருது – மிசா எஸ். அகமது தம்பி.
- மு.க.ஸ்டாலின் விருது – நா. இளையராஜா.
- முரசொலி செல்வம் விருது – ஊடகவியலாளர் ப. திருமாவேலன்
ஆகிய 7 பேருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து அவர் சிறப்பு உரையாற்றினார். அப்போது அவர், விரலில் வைத்த மை காய்வதற்குள் சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள். குதிரை பேரம் நடத்தி இடைத்தேர்தலை திணித்ததுதான் மாற்றமா? மானங்கெட்ட மாற்றமா?
தக்க பாடம்
இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டு வார்கள். எதிரி யார் என்று சரியாக கணித்து பணியாற்றி இருந்தால் இந்த தோல்வியே வந்திருக்காது. தி.மு.க. தன்னை மாற்றிக்கொண்டு கடுமையாக உழைக்கும் என்றார்.
சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதியின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. நல்ல வேளை சட்டப்பேரவைக் கொடுமைகளைப் பார்க்க நான் அங்கு இல்லை. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி!
தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குத்தான் போட்டி. நன்றாக கவனியுங்கள். ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு. மக்கள், மின்வெட்டால் அவதியடைந்து வருகின்றனர்.
முதலமைச்சர் தனது வாயால் சாப்பிட்டார் என த.வெ.க.வினர் ட்ரெண்ட் செய்கின்றனர் அவர். கோட் போட்டார் என்பதுதான் இப்போது ட்ரெண்டாக வருகிறது. தவெக என பெயர் வைத்ததற்கு பதிலாக அவர்கள் தமிழக ரீல்ஸ் கழகம் என பெயர் வைத்திருக்கலாம். விஜய் மக்கள் முன்பு நடிக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது மக்கள் முன்பு விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க.வை பலவீனப்படுத்தும் முயற்சிகளை 78 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டி ருக்கிறோம். வட்டியும் முதலுமாக திருப்பித் தருவோம். அதற்காக தான் காத்திருக்கிறோம். த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
ஜென் சி இளைஞர்களைக் கவர, அவர்களது மொழியிலேயே பேச வேண்டும். தமிழ்நாட்டைக் காப்போம், தமிழ்நாட்டை மீட்போம்
முதல்-அமைச்சர் தினமும் SHOOTING MODEல்தான் இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, சொல்லிவிட்டு, மக்கள் முன் நடிக்கிறார். திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது இதுதான் தவெக ஆட்சியின் வேலை.
தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று மின்வெட்டு, இன்னொன்று அரிவாள் வெட்டு. “பெரிய அலை அடிச்ச மாதிரியும், தமிழ்நாடே அவங்க வருகைக்காக காத்திருந்த மாதிரியும் ‘இமேஜ்’ உண்டாக்கி வருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்கூட கிடைக்கவில்லை ஆனால் அதிக தொகுதிகளை வென்ற கட்சிக்கும் நமக்கும் வெறும் 17 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம். சரியா கணிச்சு செயல்பட்டிருந்தா இந்த தோல்வியே வந்திருக்காது. பெரும்பான்மை இல்லாமல், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் இந்த அரசு அமைந்துள்ளது.
நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்.. சீக்கிரமா வரோம்.. திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.
என்னுடைய மிசா கைதை இங்கு எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை. பேரவையில் எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளை டைவர்ட் செய்ய அவதூறுகளை பரப்புகிறது தவெக அரசு!
கொளத்தூர் மக்களுக்கு நான் நன்றி சொல்கிறேன்; நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரை பார்த்திருப்பீர்கள்; நல்லவேளை இந்த கொடுமைகளை எல்லாம் பார்க்காமல் இருந்ததற்கு… கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி!
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், திமு.கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் அய்.பெரியசாமி, க.பொன்முடி, கனிமொழி கருணாநிதி, திருச்சி என்.சிவா, ஆ.இராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள் எஸ்.ஆஸ்டின், ப.தாயகம் கவி, தி.மு.க. செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஆகியோர் பங்கேற்றனர்.
