சாமி.சிதம்பரனார்

பெரியார் எந்தக் காலத்திலும் பிறர் கருத்துக்குத் தலைகுனிந்ததே யில்லை. இதுதான் அவரிடமுள்ள ஒரு தனித்தன்மை. அவர் ஒரு புரட்சிக்காரராக – சீர்திருத்தச் சிற்பியாக – இயக்கத்தின் தலைவராக இருப்பதற்கு இத்தன்மைதான் காரணம்.
மதப் புரட்சித் தலைவர்களுக்கு – சமுதாயப் புரட்சி வீரர்களுக்கு – பிறருக்குத் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத வீரத்தன்மைதான் வேண்டும். இத்தன்மையே அவர்களுக்கு வெற்றியைத் தரும் வீரவாள். ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கு விட்டுக் கொடுக்கும் தன்மைவேண்டும். இக்குணமுடைய அரசியல்வாதிகள் தான் மற்றவர்களையும் அணைத்துக் கொண்டு அரசியலிலே வெற்றிப் பெற முடியும். ஆனால், சமுதாயப் புரட்சிக்காரர்களிடம் இக்குணம் இருந்தால் அவர்கள் வெற்றிப் பாதையை அணுகவே மாட்டார்கள். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஒவ்வொரு கொள்கைகளை விட்டுக் கொடுத்துக் கொண்டே வருவார்களானால், இறுதியில் அவர்களிடம் எந்தக் கொள்கையும் மிஞ்சியிருக்காது.
இதனால்தான் சமுதாய – மதப் புரட்சிக் காரர்கள் எதையும் யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை.
இதுவரையிலும் இவ்வுலகிலே தோன்றி மறைந்த சீர்திருத்தப் புரட்சிக்காரர்களின் வரலாறுகளை எண்ணிப் பாருங்கள். இந்த உண்மை விளங்கும். சாக்ரடீஸ், கவுதம புத்தர். ஏசு கிறிஸ்து. நபிகள் நாயகம் இவர்கள் எப்பொழுதாவது எவருக்காகவாவது தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுத்ததுண்டா? இல்லை. இதுவேதான் அவர்களுடைய வெற்றிக்குக் காரணம். சரித்திரத்திலே கண்ட சமுதாயப் புரட்சிக்காரர்கள் தங்கள் கொள்கையிலே கண்டிப்பாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் கருத்துகளைப் பிறரிட மிருந்து கடன் வாங்கியதுமில்லை; திருடியது மில்லை. மற்றவர்களுடன் கலந்து பேசத் தீர்மானித்துக் கொண்டவர்களும் அல்லர்.
அவர்கள் எவை மனிதச் சமுதாயத்திற்கு நன்மை பயப்பவை என்று கண்டார்களோ அவைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார் கள். எவை மனிதச் சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள் என்று எண்ணினார்களோ அவைகளை அஞ்சாமல் கண்டித்தார்கள். எவருடைய போற்றுதலையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. தங்கள் உள்ளத்தில் தோன்றிய உண்மைகளை எடுத்துரைத்தார்கள். இத்தகைய புரட்சிக் காரர்களிலே ஒருவர் உலகினருக்கு தான் – பெரியார். ஆனால் அவர்களுக்கும் இவருக்கும் ஒரு வேற்றுமையுண்டு. பண்டைப் பெரியார்களிலே பலர் தாங்கள் கூறியதை “கடவுள் காட்டிய வழி: ஆண்டவன் கொடுத்த அறிவுரை” என்று மக்களிடம் சொன்னார்கள் ஆனால், பெரியார் தான் கூறுவதை “நான் சொல்லுகிறேன். எனக்கு உண்மையென்று தோன்றியதை உரைக்கின்றேன். உங்கள் பகுத்தறிவென்னும் உரைகல்லிலே உரைத்துப் பாருங்கள். உண்மையிருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள். உண்மைக்கு மாறாக இருந்தால் உதறித் தள்ளுங்கள். நம்பினால் மோட்சம்: நம்பாவிட்டால் நரகம் என்று நான் சொல்லவில்லை” என்று தாராளமாகச் சொல்லி வருகிறார். இதுதான் இவருக்கும் மற்றைய சீர்திருத்தக்காரர்களுக்கும் உள்ள வேற்றுமை.
பிடிவாத குணமுடையவர்கள் பொது வாழ்க்கையில் இருந்தாலும் சரி. தனி வாழ்க்கையிலிருந்தாலும் சரி. அவர்களுக்கு எதிரிகள் தான் தோன்றுவது இயல்பு. ஆகை யால் பெரியார் பல சமயங்களில், பலரால் எதிர்க்கப்பட்டு வருவதில் வியப்பில்லை.
இன்னும் பலர் பெரியாரை எதிர்க் கின்றனர்; அவர் இயக்கத்தை எதிர்க்கின்றனர். இத்தகைய எதிர்ப்பே சிலருடைய பிழைப்பா கவும் ஆகிவிட்டது. கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு இந்த எதிர்ப்பு அவரை எதுவும் செய்து விடாது என்பது தெரியும்.
தனிப்பட்ட முறையில் பெரியாரைத் தாக்கிப் பேசுவதனால். பழித்து எழுதுவ தனால் அவர் புகழ் மங்கி, மறைந்து விடாது. அவர்மீது வசைமொழிகளை வாரியிறைப் பதனால் அவர் கொள்கைகளை அழித்து விட முடியாது.
பெரியாரால் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்ட கொள்கைகள் இன்று பொதுமக்கள் இயக்கமாக நிலைத்து விட்டது. இந்த நாட்டு மக்கள் ஒன்றுபட்ட தேசிய சமுதாயமாக வாழ்வதற்குச் சுயமரியாதை-திராவிடர் கழகக் கொள்கைகள் அவசியம் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். ஆகையால் பெரியாரையோ, அவர் கொள்கைகளையோ அழித்து விடலாம் வீழ்த்தி விடலாம் – ஒழித்து விடலாம் என்று கனவு காண்பவர்கள் ஒடுங்க வேண்டியது தான்; அல்லது ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
பெரியார் வாய்ப் பேச்சு வீரர் அல்லர். சொல் வேறு – செய்கை வேறாக இருப்பவர் அல்லர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் குணத்திற்கும் அவருக்கும் வெகு தொலைவு.
தான் கூறியதை, செய்யத் துணிந்ததை உடனுறையும் தோழர்கள் எதிர்த்தாலும், உற்றார் எதிர்த்தாலும், உறவினர் எதிர்த்தாலும் சொல்லியே தீருவார்: செய்தே முடிப்பார்.
பெரியார் இந்நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி இந்நாட்டு இளைஞர் களுக்கு உணர்ச்சியூட்டும் ஓர் ஒப்பற்ற முற்போக்கு சக்தி.
எதிர்ப்புக்கு அஞ்சாத இரும்பு நெஞ்சம்; உண்மையென்று கண்டதை ஒருவருக்கும் அஞ்சாமல் உரைக்கும் தன்மை. சொல்வதை செயலிலே நடத்திக் காட்டும் துணிகரமான போக்கு, நன்மையென்று நம்பியதை எவர் எதிர்ப்பினும் நழுவ விடாத பிடிவாதம்; எண்ணியவைகளை எண்ணியவாறே செய்து முடிக்கும் சிறந்த குணம். இவை எல்லாம் பெரியாரிடம் என்றும் பணிந்து நிற்கும் பண்புகள். வருங்காலச் சமுதாயச் சிற்பிகள் பின்பற்ற வேண்டிய சிறந்த குணங்கள் இவை. இன்று பெரியாரை எதிர்க்கும் கும்பல், நாளை அவரைப் போற்றத்தான் போகின்றனர். அவர் செய்துவரும் சேவையின் பலன் எதிரிகளுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் எதிர்ப்பிலே முனைந்து நிற்பதற்குக் காரணங்கள் பலவிருக்கலாம். இவர்கள் தங்கள் காலத்திலே பெரியாரைப் போற்றாமல் இருப்பார்களானால், இவர்களுடைய பிள்ளைகுட்டிகள் இவர்கள் செய்யும் தவறுக்குக் கழுவாய் (பிராயச்சித்தம்) தேடிவிடுவார்கள் என்பது உறுதி!
“எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா.”
என்னும் தலைப்பில், சாமி. சிதம்பரனார் அவர்கள் எழுதிய நூலிலிலிருந்து
