பெரியார் தலைமையேற்று நடத்திய வைக்கம் போராட்டம், தீண்டத்தகாத மக்களும் பார்க்கக்கூடாத மக்களும் கோயிலை ஒட்டியுள்ள சாலைகளில் நடப்பதற்கான உரிமையைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட போராட்டமாகும். திருவாங்கூரின் வல்லாதிக்க மன்னர் ஆட்சி பணிந்து வரவேண்டிய நிலைக்கு ஆளானது. வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஏனென்றால், இப்போராட்டம்தான் கோயில் நுழைவுக்கான உரிமையைப் பெறுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது. மூச்சுத் திணற வைக்கும் நச்சுக் காற்றைப் போலத் தீண்டத்தகாத மக்களை அழுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவத்தின் கொடுமைகளை ஒழிக்கும் போராட்டத்தில், காந்திக்கு முன்னோடியாக விளங்கியவர் நம் பெரியார். இந்த வகையில், “கடவுள் உண்டென்பதைக் கண்டறிய முடியாது” எனும் பெரியாரின் கொள்கை, சாக்ரடீசின் கொள்கையைவிட ஊடுருவிப் பாயும் ஆற்றலுடையதாகும்.
இமானுவேல் கான்ட் அவர்களின் தத்துவத்தின் பெருமை, “மனிதனை எப்போதும் இடையாளாகக் கருதக் கூடாது. அவன் தனக்குள் தானே ஒரு முடிவாக இருக்கிறான்” என்பதாகும். கான்ட் மனித இனத்தின் மாண்பினை ஏற்றுப் போற்றுகிறார். மற்றவர்களின் இன்ப வாழ்விற்காக மனிதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்றார் கான்ட். இதைப்போன்றே, மனித இனத்தின் மாண்பினையும் விழுமியத்தையும் பெரியார் மதித்தார். மதத்தை ஏற்காத பெரியார், இந்த அன்பு நெறியை ஏற்றுக் கொள்கிறார்.
தீண்டாமை கண்டனத்திற்குரியது என்று காந்தியார் கருதினார். இந்து மதத்தில் அது ஒரு கரும்புள்ளி என்றார்; என்றாலும், காந்தியார் ஒரு நல்ல இந்துவாகவே இருந்து வந்தார். காந்தியாரின் இந்துத்துவ நம்பிக்கை, ஒருவகையான சமரச உடன்பாட்டிற்குரிய நம்பிக்கையாகும். பெரியார் ஒருமுறை காந்தியாரைச் சந்தித்தபோது, இந்த நம்பிக்கையைப் பற்றிப் பேசித் தீர்க்க முயன்றார். ஆனால், பயன் ஏதுமில்லாமல் போயிற்று. கடவுள் இல்லை எனும் பெரியாரின் கொள்கை சமரசத்திற்கு இடமில்லாதது. பெரியாரின் தத்துவத்தில் தாழ்குடிப் பிறப்போ, உயர்குடிப் பிறப்போ அல்லது இதில் சமரச உடன்பாடென்பதோ இல்லை.
சாக்ரடீசுக்கும் பெரியாருக்கும் பொதுப் பண்புகள் இருந்தன. பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத தன்மை, எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் ஆகியவை அவர்களை அடங்காத கிளர்ச்சியாளர்களாக அடையாளம் காட்டின. ஆனால், இந்தக் கிளர்ச்சியாளர்களிடம் உயர்ந்த நோக்கம் இருந்தது.
பேராசிரியர் ஆர்.பெருமாள் அவர்கள் எழுதிய
“உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும்”
பெரியார் – காந்தியார் – சாக்ரட்டீசு
Leave a Comment
