ராமு
குழந்தையெனக்
குலவியிருந்த
காலத்தில்
ஒளியாக
காற்றாக
ஓடி விளையாட வேண்டிய
இளம் பருவத்தில்
கால்களை ஒடிக்கும்
கழுத்தை நெறிக்கும்
கொடும் சங்கிலியால்
பிணைத்தும்
அவன்
மூளையை
சிறையிட முடிந்ததா, தாயே?
சின்னத்தாயே!
அவன்
உடல் வலித்தது
ஆனால்
உணர்வு விழித்தது!
காயங்கள் பட்டன
ஆனால்
கருத்துகள் மலர்ந்தன!
பண்பட்ட
அந்த நெஞ்சம்,
புண்பட்ட காயங்களின்
மண்ணிலே
புரட்சியின் விதையாக
முளைத்தது!
கண்ணுக்குத்
தென்பட்ட சமூகக் கேடுகளை
வினாக்கள் அடுக்கி
சிந்தனையில்
தீ மூட்டி
சீர்திருத்தி,
சீர்தூக்கி,
சாய்ந்த சமூகத்தை
நேர்நிறுத்தியவன்
உன் பிள்ளை!
ஜாதி
மதம்
கடவுளோடு கலந்து
மனிதனை
மனிதனிடம் இருந்து பிரித்த
மோசடிகள்
வேரூன்றியே இருக்க,
“வேதம் நான்கு!
வர்ணம் நான்கு!” எனும்
வஞ்சகச் சுவர்களை
“வேண்டாமே!
இது நமக்கல்ல!” என்று
பகுத்தறிவின்
சுத்தியலால்
தகர்த்தெறிந்தவன்!
பெண் அடிமைத்தனமும்
வன்கொடுமையும் ஒழித்து
அடுப்பங்கரையில்
அடைக்கப்பட்ட
பெண்ணின் கனவுகளுக்கும்
சிறகுகள் கட்டி
அவள்
எல்லையற்ற வானில் பறக்க
பெண் விடுதலை
பெற்றுத்தந்த பெருந்தகை
“பெரியார் தாயுமானவர்”
அவர்
பிறந்தநாள்
நமக்குத்
திருவிழா!
கொண்டாட்டம்!
குதூகலம்!
பெருமகிழ்ச்சி!
அவர்
பிறக்கவில்லை எனில்
நம்
வாழ்வோ
இன்னும் துன்பத்தின்
இருண்ட சுழற்சியில் சிக்கி,
ஜாதியின்
சங்கிலிக்குள்ளும்,
மதத்தின்
மதில்களுக்குள்ளும்,
அடிமைத்தனத்தின்
இருளுக்குள்ளும்
அலைந்துகொண்டிருக்கும்!
மனிதன்
ஜாதியைத் துறந்து,
மனிதன்
மதத்தை மறந்து,
மனிதன்
மனிதனை மனிதனாகப்
காணும் வரை
பெரியாருக்கு இல்லை
பணி ஓய்வு!
ஏனெனில்
அவர்
ஒரு மனிதர் அல்ல
ஒரு சிந்தனை!
அவர்
ஒரு காலத்தின்
தலைவர் அல்ல
காலங்களை
மீட்டெடுக்கும்
பகுத்தறிவின்
பேரொளி
மனிதன்
உண்மையான
மனிதனாக மாறும் வரை
பெரியார் வாழ்வார்!
அவர் சிந்தனை வாழும்!
அவர் பணி
தொய்வின்றி
வெற்றிகரமாய் தொடரும்!
– சே.குணவேந்தன்
தலைவர்,
கருநாடக மாநில திராவிடர் கழகம்
