சுயமரியாதை இயக்கப் படைத்தளபதி சிவகங்கை இராமச்சந்திரனார் பிறந்தநாள் இன்று (16-09-1884)
‘‘இராமச்சந்திர சேர்வையாகிய நான் இன்று முதல் ராமச்சந்திரனாகிறேன்’’ என்று அறிவித்து, ஜாதிப்பெயரை நீக்கி புரட்சி செய்த சுயமரியாதை இயக்கப் படைத் தளபதி சிவகங்கை இராமச்சந்திரனார் பிறந்த நாள் இன்று (16.09.1884).
சிவகங்கை இராமச்சந்திரனார் வழக்குரைஞராகவும் தந்தை பெரியார் அவர்களின் தோழராகவும் ஜாதி ஒழிப்பில் முனைப்பாளராகவும் தென் தமிழ் நாட்டில் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். ஆதி திராவிடர்களும் கோவில்களில் தடையின்றி சென்று வழிபட பாடுபட்டார். தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற இரவுப் பள்ளிகளைத் தம் சொந்தச் செலவில் கட்டி அவர்கள் கல்வியறிவு பெற உதவினார். 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுய மரியாதை இயக்க மாநாட்டில் தம் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி ரீதியான அடையாளத்தை தமது ‘சேர்வை’ என்ற பட்டத்தை துறப்பதாக அறிவித்து அந்நாளிலிருந்து சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அவர் மக்களால் அறியப்பட்டார்.
அந்த காலத்தில் கோயில்களிலும் அக்கிரக்காரத் தெருக்களிலும் நுழையவும் நடக்கவும் முடியாத சூழ்நிலை நிலவியது. இருப்பினும் சிவகங்கை இராமச் சந்திரனார் இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டியில் தலைவர் பதவியில் இருந்தபோது பி. எஸ். சிதம்பரம் (நாடார்) என்ற நாடார் இனத்தவரை உறுப்பினராக அமர்த்தினார் 1932 ஜூன் திங்களில் அவர் நோய்வாய்ப் பட்டபோது வி. வி.இராமசாமி என்ற நாடார் இனத்தவரை தாம் வகித்த தலைவர் பதவிக்கு தேவஸ்தானம் கமிட்டி சிறப்புக் கூட்டத்தை கூட்டி தேர்ந்தெடுக்கச் செய்தார்.
1930 ஆம் ஆண்டு அக்டோபரில் நீதிக்கட்சி அமைச் சரவையில் அமைச்சராகப் பதவியேற்க அழைப்பு வந்த போதும் அதனை ஏற்காமல் சுய மரியாதை இயக்கப் பணியில் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டு உழைத்தார்.
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளும் இராமச்சந்திரனாரின் செயல்பாடும்
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் ஒழிக்கப் பாடுபட்டார். அனைத்துச் சமூகத்தினருக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. தந்தை பெரியார் அவர்களின் இந்த இலட்சியங்களை நிறைவேற்ற இராமச்சந்திரனார் உறுதுணையாக இருந்தார். அவர், சமூகத்தில் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பு போன்ற கொள்கைகளை ஆதரித்ததுடன், அவற்றைச் செயல் படுத்தவும் முன்வந்தார்.
தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதிக் கொள் கைகளில் ஒன்று, அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது. இக்கொள்கை, ஜாதி அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படும் பாரம்பரியத்தை எதிர்த்து, ஹிந்து மதத்தில் சமூக சமத்துவத்தை நிலைநிறுத்த முயன்றது. இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதில் ராமச்சந்திரனார் முக்கியப் பங்கு வகித்தார். இந்தச் சீர்திருத்தத்தை அமல்படுத்த அவர் ஆற்றிய பணிகள், தந்தை பெரியார் அவர்களின் கனவை நனவாக்கியது.
அவரது தொடர்ச்சியான முயற்சிகளாலும், உறுதி யான நிலைப்பாட்டாலும், சமூக நீதிக்கு எதிரான சக்திகளை அவர் எதிர் கொண்டார். பெரியாரின் கொள்கைகள் பல விமர்சனங்களைச் சந்தித் தாலும், இராமச்சந்தி ரனார் ஒருபோதும் அவற்றிலிருந்து பின் வாங்கவில்லை. அவர், சமூகநீதியை ஒரு அரசியல் முழக்கமாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கருதினார்.
“தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும். எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதைச் சிறிதும் எவ்வித தாட்சண்யத்திக்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் இராமச்சந்திரன் அவர்கள் தாலுகா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒருபொதுக் கூட்டத்தில் பேசும்போது ‘இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம்
கொடுப்பதில்லை’ என்று ஓர் உறுதிமொழி கூறி அதை ஒரு விரதமாய் கொண்டிருப்பதாக விளம்பரப் படுத்தினார்” என்று தந்தை பெரியார் அவர்கள் பாராட்டியுள்ளார்.
அவர் தமது 49 ஆவது வயதில் 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் நாளில் மறைவுற்றார்.
திராவிடர் கழக மேனாள் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி நினைவு நாள் இன்று (16-09-1999)

தஞ்சை கா.மா.குப்புசாமி திராவிடர் கழகத்திற்கு இரண்டாவது பொருளாளர் ஆவார். பழைய கோட்டை பட்டக்காரர் அர்ஜூனன் கழகத்தின் முதல் பொருளாளர் ஆவார். தந்தை பெரியார் அவர்களின் காலத்தில் அப் பொறுப்பில் அவர் இருந்தார். அதற்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற காலத்தில் சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் 25-12-1977 அன்று கா.மா.குப்புசாமி அவர்கள் அன்னை மணியம்மையார் அவர்களால் கழகத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் திராவிட இயக்கத்தின் மிக முக்கியத் தூண்களில் ஒருவராகவும், திராவிடர் கழகத்தின் மேனாள் பொருளாள ராகவும், தந்தை பெரியார் அவர்களின் தீவிர தொண்டராகவும் விளங்கியவர். பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியதால், இவர் திராவிடர் கழகத்தினரால் “சுயமரியாதைச் சுடரொளி” என்று போற்றப்படுகிறார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அன்னை மணியம் மையார்மற்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர். திராவிடர் கழகத்தின் பொருளாளராகப் பொறுப்பு வகித்து, கட்சியின் வளர்ச்சிக்கும் நிதி மேலாண்மைக்கும் உறுதுணையாக இருந்தார். தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவுப் பிரச்சாரம் மற்றும் மதுவிலக்கு போன்ற கொள்கைகளுக்காகத் தீவிரமாகப் போராடியவர். திராவிட இயக்க வரலாற்றில் இவருடைய பங்களிப்பைப் போற்றும் வகையில், தஞ்சாவூரில் இவருக்கு முழு உருவச் சிலையும் அமைக்கப் பட்டுள்ளது. இவர் 16-09-1999 ஆம் நாளில் மறைவுற்றார். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இவருடைய நினைவு நாளை திராவிடர் கழகத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நினைவு நாளில் அவருடைய புகழினை நன்றியுடன் நினைவுக் கூர்வோம்!
தகவல் : பாணாவரம் பெ. வீரமணி
