சென்னை, செப். 14- தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி தனித்து களம் காண்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் மு.வீரபாண்டியன் நேற்று கூறுகையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. எனவே, எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தேர்தலை இடதுசாரிகள் தனித்து எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும். வேட்பாளர்கள் சென்னையில் நாளை (15.9.2026) முறைப்படி அறிமுகப்படுத்தப்படுவர். அதேநேரம் அரசுக்கான எங்களது வெளி ஆதரவு தொடரும்.
இன்றைய சூழலில் மாணவர் கள், இளைஞர்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கு ஒரு இடம் இருக்கிறது என்று திடமாக நம்புகிறோம். அவர்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.” என்றார்.
தொடர்ந்து பெ.சண்முகம் தெரிவிக்கையில், “வெற்றிபெற்ற 20 நாட்களிலேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி ஆளுங்கட்சியில் இணைந்தது ஆரோக்கியமற்ற அரசியலுக்கு வழிவகுக்கும் செயலாகும்.
தவெக ஆட்சியமைத்து 120 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வுகள், பட்ஜெட்டில் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தக்கூடிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது உள்ளிட்ட பல்வேறு அரசு நடவடிக்கைகளில் நாங்கள் மாறுபட்டிருக்கிறோம். அதுகுறித்து வலியுறுத்தியும் பலவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதேபோல் திமுக, அதிமுக என எந்த அணிகளிலும் நாங்கள் இல்லை. ஆகவே, இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகளின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானித்து இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
