பரவும் செய்தி
பனிப்பாறை வெடிப்பு காரணமாக 26.08.2026 அன்று நேபாளத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் உயிருக்கும் உடமைக்கும் பேரழிவை ஏற்படுத்தியது.
அன்று முதல் சமூக வலைதளங்களிலும் நேபாள மக்களிடையேயும் அதற்கு நான்கு நாள் முன்னதாக அதாவது 22.08.2026 அன்று நேபாளத்தில் உள்ள பாலஞ்சோக் பகவதி கோவில் சிலையில் தோன்றிய நீர்த்துளி (வியர்வை) வரவிருக்கும் பேரிடரை முன்கூட்டியே உணர்த்திய தெய்வீக அறிகுறி என கருத்து பரவி வருகிறது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் 6,29,000 பார்வைகள் பெற்றுள்ளது. அதே போல் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மற்றும் ‘ஆஜ்கல்’ தளங்களிலும் இது தொடர்பாக மக்கள் பார்வை பற்றி செய்தி வந்துள்ளது.
நேபாள மக்களின் நம்பிக்கை
நேபாளக் கலாச்சாரத்தில், ‘புனித’க் கல்லிலோ, கற்சிலையிலோ ஈரப்பதம் தோன்றுவது ‘ஸ்வேதபான்’ என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் வரவிருக்கும் பேரழிவின் சகுனமாகக் கருதுகிறார்கள்.
வரலாற்றாசிரியர்களும் பெரியவர்களும் பெரும் பேரழிவுகளுக்கு முன்னதாக இதுபோன்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்:
1974-இல் ஒரு பெரிய இராணுவ விமான விபத்துக்குச் சற்று முன்பு ஈரப்பதம் காணப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
1987-இல் 6.8 ரிக்டர் அளவிலான ஒரு கொடிய நிலநடுக்கம் ஏற்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு சிலைகள் வியர்த்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை யோடு இந்த புதிய கருத்துகளும் பரவி வருகிறது.
உண்மையில் நடந்தது என்ன? இது ஓர் அற்புத எச்சரிக்கையா அல்லது வளிமண்டல அறிவியலா?
செய்திக்கான அறிவியல் அலசல்
பாலஞ்சோக் பகவதி சிலையில் மனிதர்கள் உடம்பில் வெளிவரும் வியர்வை போலவே தோன்றிய நீர்த்துளிக்கான அறிவியல் விளக்கங்களை ஆய்ந்த் போது புவியியலாளர்களும் வளிமண்டல விஞ்ஞானிகளும் இந்த “வியர்வைக்கு” நீராவிச் சுருக்கம் அல்லது ஆவி ஒடுக்கமே (Condensation) காரணம் ஆகும் என சொல்கின்றனர்.
ஆவி ஒடுக்கம் (condensation) என்பது வாயு நிலையிலுள்ள நீர், காற்றின் ஈரப்பதம் காரணமாக திரவ வடிவமாக அல்லது திட வடிவமாக மாற்றத்தைப் பெறுவதாகும்.
விளக்கம்
சிலையில் நீர்க் குமிழி தோன்றியதற்கு கிழுள்ள விளக்கங்களே காரணமாகும்.
- குளிர் வெப்பநிறை:இந்தச் சிலை, சுற்றியுள்ள காற்றைவிட மிக நீண்ட நேரம் குளிர் வெப்ப நிலையைத் தக்க வைத்துக்கொள்ளும் அடர்த்தியான கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.
- புயலுக்கு முந்தைய ஈரப்பதம்:இமயமலைப் பகுதியின் முக்கிய வானிலை மாற்றங்களும், வெப்பமும் வேகமாக ஈரப்பதத்தை உயர்த்துகின்றன.
- ஆவி ஒடுக்கம்:வெப்பமூட்டப்படாத கோயிலின் உள்ளே, உறைந்துபோன கல்பரப்பின்மீது சூடான, ஈரப்பதமான காற்றுபடும்போது, நீர்த்துளிகள் உடனடியாக உருவாகின்றன.
இந்தக் காரணங்ளால் தோன்றிய நீர்த்துளிகளை ஏற்கெனவே நிலவும் மூடநம்பிக்கை காரணமாக சிலைக்கு வியர்த்ததாக மக்கள் தவறான அனுமானத்திற் குள்ளானார்கள்.
ஆனால், பாலஞ்சோக்பகவதி சிலையில் தற்போது காணப்பட்ட நீர்த்துளிகள் குறித்து நேரடி அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
வெளியில் மழை பெய்யும் நேரத்தில் கண்ணாடியின் உள்ளே நீர்த்துளிகள் தோன்றுவதில்லையா? குளிர்பதனப் பெட்டியில் குளிர் நிலையில் இருந்த பாத்திரத்தையோ, தண்ணீர் பாட்டிலையோ வெளியில்வைத்தால், அதில் நீர்த்துளிகள் தோன்றுவதில்லையா? அதேபோலத்தான் இதுவும்.
இமயமலைப் பகுதியில் உள்ள நுட்பமான காலநிலையின் பிரதிபலிப்பே இது! இதற்கும் அற்புத சக்திகள் என்பவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதே காலநிலையில், இதே தன்மை கொண்ட எந்த ஒரு பொருளுக்கும் இதேபோலவே நிகழும்.
ஒருவேளை தட்பவெப்ப மாற்றத்தின் வெளிப்பாடாக, இயற்கைப் பேரிடருக்கான மாற்றத்தை உணர்த்துவதாக இச்சிலையில் நீர்த்துளிகள் தோன்றுவதாக மட்டும் நம்புகிறார்கள் என்றால், ஒரு விமான விபத்துக்கும் முன்பும் (1974) இதேபோல வியர்த்ததாகக் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, இது முழுக்க முழுக்க ஓர் இயற்கை நிகழ்வை, நடக்கும் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
மயில்தோகை விரித்து ஆடுவதால்தான், மழை பெய்தது என்று கவிஞர்கள் சொல்வதைத் தமிழில் தற்குறிப்பேற்ற அணி என்போமே, அப்படித்தான் இதுவும்!
முடிவு
பேரிடர் நிகழப்போவதை முன்னுணர்த்தும் வகையில்தான் பாலஞ்சோக் பகவதி சிலைக்கு வியர்க்கிறது என்று சொல்வது பொய்யே!
– ஆய்ந்தறிவோன்
