சென்னை, செப். 10- சென்னையில் அதிகரிக்கும் நகர்ப்புற வெப்பத்தைக் குறைப்பது மற்றும் நிலையான குளிர்ச்சி முறைகளைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. அய்க்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், காலநிலை மாற்ற எதிர்கொள்ளலுக்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர் சரவணன், UNEP திட்ட மேலாளர் பெஞ்சமின் ஹிக்மேன், மூத்த ஆலோசகர்கள் மற்றும் ஆரோவில் கன்சல்டிங் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இயற்கை சார்ந்த தீர்வுகள்
நகரின் அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் நிழல் தரும் நடைபாதைகள், நீர் ஊடுருவும் பரப்புகள் மற்றும் நகர்ப்புற பசுமையாக்குதல் திட்டங்களை ஒருங்கிணைத்தல்.
மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படும் ‘குளிர்ந்த கூரை’ திட்டத்தை விரிவுபடுத்துவதுடன், கட்டட ஆற்றல் திறன் நுட்பங்கள் மூலம் பள்ளிகளை மறுசீரமைத்தல்.
வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள்
அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஏற்ற காலநிலைக்கேற்ற கட்டட வடிவமைப்பு மாதிரிகள் மற்றும் வெப்ப வசதி தரநிலைகளை வகுத்தல்.
ஆதாரப்பூர்வமான நகர்ப்புற திட்டமிடலுக்கு ஆதரவாக, சென்னை மாநகராட்சியின் ‘டிஜிட்டல் ட்வின்’ திட்டத்தில் நிகழ்நேர நுண்காலநிலை தரவுகளைச் சேர்த்தல்.
மாவட்ட குளிர்ச்சி அமைப்புகள்
புதிய மற்றும் மறுசீரமைக்கப்படும் வளர்ச்சித் திட்டங்களில் ‘மாவட்ட குளிர்ச்சி’ மற்றும் ‘சேவையாக குளிர்ச்சி’ மாதிரிகளின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுதல்.
செயற்கை ஆற்றலைச் சாராத இயற்கை வழியிலான குளிர்ச்சித் தீர்வுகளைச் செயல்படுத்துவதன் மூலம், அளவிடக்கூடிய மற்றும் ஆதாரப்பூர்வமான வெப்பத் தணிப்பு உத்திகளில் சென்னையை ஒரு முன்னோடி நகரமாக மாற்றுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
