தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற உரையும், நமது கருத்தும்!

8 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
விளக்க அறிக்கை

தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற உரையும், நமது கருத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் விளக்க அறிக்கை விடுத்துள்ளார்.

Contents
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்க அறிக்கைசட்டமன்றத்தின் மரபுக்கும், மாண்புக்கும் உரியவை அல்ல!முதலமைச்சர் பெரும்பாலும் எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை!உண்மைக்கு மாறான தகவல்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டால் அது உரிமை மீறல் ஆகும்!உண்மை என்ன என்பதையும், அன்றைய காலகட்டம் என்ன என்பதையும் அறிந்து பேச வேண்டும்!எதற்குக் கைது செய்யப்பட்டோம் என்று தெரியாது, விசாரணை  என்ற ஒன்றே கிடையாது!‘சர்க்காரியா கமிஷன்’ விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அது நீதிமன்றத்தில் வழக்காக ஆனதா? தீர்ப்பு வழங்கப்பட்டதா?திரைப்படக் காட்சி வசனம் போல, உச்சக் குரலில் உரக்கப் பேச வேண்டிய அவசியம் என்ன?தவறு என்று தெரிந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?தமிழ்நாட்டுக்கென்று உள்ள ஜனநாயகப் பெருமை நிலைக்க வேண்டும்!

அவரது விளக்க அறிக்கை வருமாறு:

சட்டமன்றத்தின் மரபுக்கும்,
மாண்புக்கும் உரியவை அல்ல!

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதில் அளித்துப் பேச மூன்று நாள் அவகாசம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கடந்த திங்கள் (7.9.2026) அன்று தனது பதிலுரையின்போது, எதிர்க்கட்சிகள் கேட்டிருந்த எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல், கடந்த 120 நாட்களாகத் தமது தலைமையில் நடந்து வந்த ஆட்சியின் போது நடைபெற்ற சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்துப் பல கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு எதுவும் தெரிவிக்காதது பெருத்த ஏமாற்றம் அளிக்கும் ஒன்று என்பதோடு, பேசவேண்டியவற்றை விடுத்து, அவர் பேசிய மற்றவை எல்லாம், தமிழ்நாட்டின் வர லாற்றையும், அரசியல் நிகழ்வுகள் அறிந்த எவரா லும் முற்றிலும் ஏற்கவே முடியாதவையாகும்.  முதல மைச்சரின் உரையும், அதில் அவர் வெளிப்படுத்திய பாவனைகளும், சட்டமன்றத்தின் மரபுக்கும், மாண்புக்கும் உரியவை அல்ல!

சட்டமன்ற மரபுகள் என்பவை சடங்குகள் (Rituals) அல்ல; காலங்காலமாகப் பெறப்பட்ட அனுபவ அறிவின் காரணமாகவும், அவையை மாண்புடனும், அனைவரின் மரியாதைக்கும் ஊறு நேராத வகையிலும், பொது நாகரிகத்தைக் காக்கும் தன்மையிலும் படிப்படியாக உருவாகி, கடைப்பிடிக்கப்பட்டு வருபவை ஆகும்.

அந்த அவையில் இடம்பெற்றிருப்போர் எக் கட்சியினராயினும், அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், அவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பும், மரியாதையும் அம் மக்களுக்கு வழங்கப்படு வதாகும். அதே போலவே, அவையில் பேசப்படாதவை குறித்தும், அவசியமற்றும், அவைக்குள் பேசுவதும், அவையில் இல்லாதோர் குறித்துப் பேசுவதும், பண்பற்ற சொற்களையும், பாவனைகளையும் பயன்படுத்தப்படுவது எல்லாம் பொதுவாகவே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

முதலமைச்சர் பெரும்பாலும் எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை!

இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஒவ்வொரு நாளும் நடைபெற்றவை ஆரோக்கியமான விவாதங்கள் அல்ல என்பதே பொதுவானவர்களின் கருத்தாகும். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சரும், அமைச்சர்களும் எந்த நேரத்திலும் ஆக்கப் பூர்வமான விவாதத்தில் பங்கேற்கவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். முதலமைச்சர் பெரும்பாலும் எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதுடன், அவசியமற்று அமைச்சர்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பிய போதெல்லாம் அதை அனுமதித்தது, மறைமுகமாக அதனை வரவேற்றது, ஊக்கப்படுத்தியது போன்றதே ஆகும்!

உண்மைக்கு மாறான தகவல்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டால் அது உரிமை மீறல் ஆகும்!

அன்றாடம் சட்டமன்றம் என்பது ‘சத்தமன்றமாக, சண்டை மன்றமாக’ ஆகியிருந்ததை, அந்த அவையில் இடம்பெற்றிருந்த பல கட்சி உறுப்பினர்களே வருத்தத்துடன் பல சமயம் பதிவு செய்தது அவைக்குப் பெருமையாகுமா? அவைக் குறிப்பில் இருந்து நீக்குதல் என்பதே நகைப்புக்கிடமான ஒன்றாக ஆகும் அளவுக்குத் தான் பல விவாதங்கள் அமைந்தன; உண்மைக்கு மாறான தகவல்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டால் அது உரிமை மீறலே ஆகும். அத்தகைய நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லை.

சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பா கின்றன என்பதால், இன்றைய ஊடக உலகிற்கேற்ப, குறுங்காணொலிகளை உருவாக்குவதை மனதில் கொண்டே, தவறான வரலாறுகளையும், தகவல்க ளையும் இளைஞர்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் ஆளுங்கட்சியினரின் பேச்சுகள் அமைகின்றனவோ என்று சந்தேகம் தீவிரமாக எழுகிறது. அவற்றில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுபவையும் சேர்த்துதான் சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன என்னும் போது, அந்தச் சந்தேகம் மேலும் உறுதிப்படுகிறதே!

ஆனால், முதலமைச்சர் அவர்களின் உரை இவற்றுக்கெல்லாம் உச்சமாக அமைந்தது என்பது, தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தின் நிலையை நினைத்து நம்மைப் போன்றவர்களைக் கவலையையும், வேதனையையும் கொள்ளச் செய்கிறது. விசாரணை என்பது நீதிமன்றத்தில் நடைபெற வேண்டியது (Trial by Judiciary); ஊடகங்களில் (Trial by media) அல்ல! அது சரியான முறையும் அல்ல!

உண்மை என்ன என்பதையும், அன்றைய காலகட்டம் என்ன என்பதையும் அறிந்து பேச வேண்டும்!

வரலாற்று நிகழ்வுகளைப் பேசுவதற்கு வயது அவசியமில்லைதான்! அந்த நிகழ்வின் போது நடைவண்டி குழந்தையாக இருந்தவர்கள் பேசக்கூடாது என்றில்லை; வரலாறு அறிந்து பேசவேண்டும். வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் வேண்டும் (1975-1976); ஆழமாகப் புரிந்துகொள்ளவும் வேண்டும். வரலாற்றுப் புரிதலின்றி, மலிவான சில ஊடகங்களில் வந்த அவதூறுகளையும், இன்றைய வாட்ஸ்–அப் வதந்திகளையும் எடுத்துவைத்துக் கொண்டு பேசு வதற்கு சட்டப் பேரவை என்பது,  வெறும் கட்சி மேடை கள் இல்லை. கட்சி மேடைகளிலேயே ஆதாரத்து டன் பேசிப் பழக்கப்பட்டவர்கள் – அப்படித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள்!

அதிலும் குறிப்பாக, ‘மிசா’ காலத்துக் கொடுமை களைக் குறித்துப் பேசியதும், அதற்கு முதலமைச்சர் காட்டிய உடல்மொழியும் எவராலும் ஒருபோதும் ஏற்கப்படவே முடியாதவை ஆகும். (அதற்கு உள்நோக்கமில்லை என்று வெளியில் வந்து சமூக ஊடகத்தில் எழுதினாலும், நேரலையில் பார்த்த வர்களுக்கு உண்மை புரியும்.)

எதற்குக் கைது செய்யப்பட்டோம் என்று தெரியாது, விசாரணை  என்ற ஒன்றே கிடையாது!

ஜனநாயகமும், அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இருந்த ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு, உயர்ஜாதி அதிகாரிகள் நடத்திய காட்டாட்சிக் காலம் அது! எட்டுக்கு எட்டு இருட்டுக் கொட்டடியில் அடைக்கப்பட்டு, எதற்குக் கைது செய்யப்பட்டோம் என்று தெரியாது, விசாரணை  என்ற ஒன்றே கிடை யாது; சிறைக்கதவுகள் திறக்குமா, விடுதலை ஆவதற்கு வாய்ப்புண்டா? உயிருடன் திரும்புவோமா? என்றெல்லாம் எதுவும் அறியமுடியாத கொடுமை மிகுந்த அந்த நாட்களில், அதனினும் கொடுமையாக நடந்தது சிறைத் தாக்குதல்கள்; மனித உரிமை மீறல்கள்; சிறை அதிகாரிகளின் அருவருப்பான நடத்தைகள், ஆபாச வசவுகள்  இவற்றையெல்லாம் அனுபவித்தவர்கள் நாங்கள்! (ஆதாரம்: ஜஸ்டிஸ் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை).

முதலமைச்சராக இருந்தவரின் மகன் என்ற ஒற்றைக் காரணத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மு.க.ஸ்டாலினைத் தாக்கிச் சிறையில் தள்ளியபோது தாங்கிப் பிடித்த கரங்கள் என்னுடையவை! அவர் மீது நடத்தப்பட்ட கொடுந் தாக்குதலைத் தாங்கி, தன்னையே பலி கொடுத்தவர் முன்னாள் மேயர் சிட்டிபாபு மற்றும் சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆவர். அன்றைக்குப் பட்ட காயங்கள் 50 ஆண்டுகள் கழித்து, இன்றைக்கும் எத்தனை உடல் வேதனையைத் தருகின்றன என்பதை எங்களைப் போன்றவர்கள் அறிவோம்; அனுபவிக்கிறோம். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையில் விரிவாக எல்லாம் பதிவாகியிருக்கின்றன. எமது வாழ்க்கைக் குறிப்புகள் உள்பட ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் வெகு சாதாரணமாக ஆக்குவது போல, அவசர நிலைக் காலகட்டத்தை இயல்பாக்குவது (Normalise) போல அமைந்த முதலமைச்சரின் உரை நியாயமானதா? பாசிசம் என்ற ஆள்தூக்கி அரசியலைக் குறித்துப் பேசுவதை, ‘பாசிசமா? பாயசமா?’ என்று மலினப்படுத்த முயன்றதைப் போன்ற அறியாமையா? ஆணவமா? என்றே விவரம் தெரிந்தவர்கள் வினா எழுப்புவர்.

‘சர்க்காரியா கமிஷன்’ விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அது நீதிமன்றத்தில் வழக்காக ஆனதா? தீர்ப்பு வழங்கப்பட்டதா?

ஆளும் வர்க்கத்தின் ஆள்தூக்கிச் சட்டத்திற்கு, ஜனநாயகப் படுகொலைக்கு அடங்க மறுத்த தன் காரணமாகத் தானே கலைஞர் ஆட்சி கலைக் கப்பட்டது? அதன் தொடர்ச்சியாக அவரை மிரட்டு வதற்குத் தானே ‘சர்க்காரியா கமிஷன்’ என்று கொண்டு வந்தார்கள். கலைஞரின் ஆட்சியைப்பற்றி ஆளுநரிடம் புகார் கொடுத்து, அந்தக் கமிஷன் அமைக்கக் காரணமானவரான எம்.ஜி.ஆர். அவர்களே, தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று  பிறகு கைவிரித்துவிடவில்லையா? அந்த ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அது நீதிமன்றத்தில் வழக்காக ஆனதா? தீர்ப்பு வழங்கப்பட்டதா?

விவரமே தெரியாமல் ஒரு முதலமைச்சர் தகுதியில் உள்ளவர், அதுவும் அவையுள் பேசலாமா?

குற்றம் சாட்டப்படுவதாலேயே ஒருவர் ‘‘குற்ற வாளி ஆகிவிடுவாரா?’’ கலைஞர் மீதோ, திமுக அமைச்சரவையில் இருந்தவர்கள் மீதோ குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றிருக்கிறார்களா? தீர்ப்பு நீதிமன்றம் கூறியுள்ளதா? அந்த மானியக் கோரிக்கை பதிலுக்கும், முரசொலி மாறனுக்கும் என்ன சம்பந்தம்? மறைந்தவர்கள் குறித்தும், அவையில் இல்லாதவர்கள் மீதும், பதில் சொல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் மீதும், குற்றச்சாட்டு களை அடுக்குவதற்கான அவையா அது? அதற்கான நேரமா – காவல்துறை மானியக் கோரிக்கைக்கான பதிலுரை?

திரைப்படக் காட்சி வசனம் போல, உச்சக் குரலில் உரக்கப் பேச வேண்டிய அவசியம் என்ன?

‘‘கடந்த நான்கு மாதமாக நடைபெற்று வரும், முழுமையான மெஜாரிட்டி இல்லாத (த.வெ.க.) ஒரு ஆட்சிக் காலத்தில், எத்தனை எத்தனைக் கொலைகள், எத்தனை பாலியல் வன்கொடுமைகள், எத்தனை ஆணவப் படுகொலைகள்? தலைநகர் சென்னையிலேயே கடந்த வாரத்தில் ஆளுங்கட்சிப் பிரமுகரே கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாரே! கோவையில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றனவே! மகளிருக்குப் பாது காப்பில்லை என்று ஆளுங்கட்சி மகளிரே குற்றம் சாட்டுகிறார்களே! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறதே!’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினால், அது குறித்து உரிய பதில்களை முன்வைக்காமல், திரைப்படக் காட்சி வசனம் போல, உச்சக் குரலில் உரக்கப் பேச வேண்டிய அவசியம் என்ன? திசை திருப்புவது அல்லாமல் அதற்கு வேறு நோக்கம் என்ன?

ஆட்சி அமைத்ததற்கு ஆதரவு அளித்துவரும் கூட்டணி கட்சிகளே கூட,  இந்த அரசின் இத்தகைய செயல்பாடுகளை, முதலமைச்சரின் உரையைக் கண்டிக்கிறார்களே, புரிந்துகொண்டு திருத்திக் கொள்ள வேண்டாமா? இது முதல் முறை அல்லவே! கடந்த ஜூன் 23 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையிலும், இதே போல முதலமைச்சர் நடந்து கொண்டதையும் எல்லோரும் கண்டிக்கவில்லையா?

இதுவரை, பல சமயங்களில் அவைத் தலைவரின் நடவடிக்கைகள் சரியானவை போல தோற்றமளித்தது கூட, உண்மையானதல்லவோ என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் தானே கடந்த சில நாட்களாக அவரது போக்கு அமைந்துள்ளது ஏமாற்றமாகும். எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதித்துவிட்டு, அடுத்த சில நொடிகளில் மாற்றிக் கொண்டதெல்லாம் எதனால்? யாரால்? அழுத்தமா? என்ற கேள்விக்கு இடந்தரலாமா? அவர் பொது மனிதர் ஆகிவிடவில்லையா?

தவறு என்று தெரிந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

யார் மீது தவறு என்றாலும் நடவடிக்கை எடுப்ப தற்குத் தானே அரசு அதிகாரம் இருக்கிறது. அதை விடுத்து, வெறுமனே மிரட்டுவதால் என்ன பயன்? தவறு என்று தெரிந்தால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மேசையில் கோப்பு இருக்கிறது என்று பூச்சாண்டி காட்டுவதா? சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் – நீதிமன்றமும், மக்கள் மன்றமும் ‘மாண்பமை தீர்ப்பு’ கூறட்டும்!

தமிழ்நாட்டுக்கென்று உள்ள
ஜனநாயகப் பெருமை நிலைக்க வேண்டும்!

இது தனிப்பட்ட ஒருவரின் பேச்சு அல்ல; முதல மைச்சரின் பேச்சு, அதுவும் தமிழ்நாடு எப்படி அமைய வேண்டும் என்பதே நமது அக்கறை. அந்தப் பதவிக்கென்று உள்ள கவுரவமும், மாண்பும் குலையக் கூடாது, தமிழ்நாட்டுக்கென்று உள்ள ஜனநாயகப் பெருமை நிலைக்க வேண்டும் என்பதே பொதுவாழ்வில் நெடுங்காலத்தைக் கடந்தும் இன்றைக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்காகக் களத்தில் நிற்கும் எம்மைப் போன்றவர்களின் கவலையாகும்!

இதுவே கடைசியாக இருக்கட்டும் என்பது பொது ஒழுக்கமும், மரபும், மாண்பும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியின் வெளிப்பாடே என்பதாலேயே நாமும் சுட்டிக்காட்டுகிறோம்! நியாயமாக அவையில் வருத்தம் தெரிவிக்க
வேண்டும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

9.9.2026          

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *