சென்னை, செப். 9 – தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான நிலம் மற்றும் அறக்கட்டளை நிதித் தேவைகளைக் கணிசமாகக் குறைக்கும், ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவு – 2026’, பாமக, சிபிஅய், சிபிஎம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்பிற்கு இடையே சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வ நாதன், இந்தச் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து முன்மொழிந்தார். 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு 100 ஏக்கருக்குக் குறையாத நிலமும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் நிலையான அறக்கட்டளை நிதியும் தேவைப்பட்டது.
ஆனால், ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய அரசு அமைத்த பணிக்குழு, குறைந்தபட்ச நிலத் தேவையையும், அறக்கட்டளை நிதித் தேவை யையும் குறைக்குமாறு பரிந்துரை அளித்ததை அடுத்து, தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது.
பகுதி வாரியாக
மாறுபடும் நிலத் தேவை
மாறுபடும் நிலத் தேவை
ஒன்றிய அரசின் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க குறைந்தபட்சம் 12 ஏக்கர் நிலம் போது மானது என அரசு முடிவு செய்துள்ளது. பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர் நிலமும், மற்றபகுதிகளில் 25 ஏக்கர் நிலமும் தேவை எனத் தீர்மானித்துள்ளது. இதற்கேற்ப அறக்கட்டளை நிதித் தேவையையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.இந்த மாற்றம், ஏற்கெ னவே மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும், 2018 ஆம் ஆண்டு சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட ஷிவ நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய வற்றுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்தச் சட்டத் திருத்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி, இந்தத் திருத்தம் தனியாருக்கே சாதகமாக இருக்கும் என்றும், பல்கலைக்கழகங்களை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பேசுகையில், இச்சட்டம் கல்வியை வணிகமயமாக்கி விடும் என்றும், சமூகநீதிக்கு எதிராக அமையும் என்றும் தெரிவித்து, இதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கோரினார். இந்தச் சட்ட முன்வடிவு உயர்கல்வியைத் தனியார்மயமாக்கவும் வணிகமயமாக்கவும் ஊக்குவிக்கும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘வணிக நோக்கம் அல்ல’: அமைச்சர் விளக்கம்!
ஆனால், உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு விளக்கமளித்த அமைச்சர் பெ. விஸ்வ நாதன், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற உலகநாடுகளுக்கு இணையாக தமிழ்நாடும் இருக்கவேண்டும் என்பதற்காகவே தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படுவதாகவும், இதன் நோக்கம் வணிக ரீதியானது அல்ல எனவும், புதிய தனியார்பல்கலைக்கழகங்கள் தொடங்க வேண்டும் என்பது மாணவர்களின் கனவு எனவும் தெரிவித்தார். இதையடுத்து, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
ஒரே நாளில் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்
இந்தக் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைகழகங்கள் சட்டத் திருத்தம் மட்டுமின்றி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்தம், ஊராட்சிகள் இரண்டாம்திருத்தச் சட்டம், வணிகம் எளிதாக்குதல் திருத்தச் சட்டம், நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்டம், வேளாண்விளைப்பொருள் சந்தைப்படுத்தல் திருத்தச் சட்டம், பணியாளர் தேர்வாணையம் கூடுதல் செயற்பணிகள்திருத்தச் சட்டம், மதிப்புக் கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இரண்டாம் திருத்தச்சட்டம் உள்ளிட்ட மொத்தம் 11 சட்ட மசோதாக்கள் ஒரே நாளில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
