புத்தியைச் ‘சுத்தி’ செய்யுங்கள்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மூரால் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அண்மையில் பணி ஓய்வு பெற்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 2, 2026 அன்று மாவட்டக் கல்வி அலுவலகத்தின் உத்தரவுப்படி பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்த ஞானேஷ்வர் பிரகாஷ் என்பவரிடம் தலைமையாசிரியர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பொறுப்பேற்க வந்த புதிய தலைமையாசிரியர் ஞானேஷ்வர் பிரகாஷ், முன்னாள் தலைமையாசிரியர் அமர்ந்த நாற்காலி, அவரது அலுவலக அறை முழுவதையும் கங்கை நீரால் தெளித்து, மந்திரங்கள் ஓதி ‘சுத்தி’ செய்துள்ளார் என்ற கொடுமையான செய்தி வெளியாகியுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அதிகாரி அமர்ந்திருந்த இடத்தைச் ஜாதிய மனோபாவத்துடன் சுத்திகரித்த இந்த நிகழ்வு காணொலியாகப் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகித் தீயாகப் பரவியிருக்கிறது. பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தக் காணொலியைக் கண்டு, முசாபர்பூர் மாவட்டக் கல்வி அதிகாரி குமார் அரவிந்த் சின்ஹா உடனடியாகச் செயல்பட்டுள்ளார்.

ஜாதியப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் வகையிலும் நடந்துகொண்ட பொறுப்புத் தலைமையாசிரியர் ஞானேஷ்வர் பிரகாஷைப் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விரிவான துறைசார் விசாரணைக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களிலேயே இன்னமும் இத்தகைய தீண்டாமைக் கொடுமைகள் நடக்கின்றன என்றால், கிராமங்களில், கோயில்களில் நிலைமை எப்படி என்பதை யூகிக்க முடிகிறதா?

இத்தகைய தீட்டு கழிக்கும் ‘சுத்தி’ச் சடங்குகளை, தீண்டாமையை அங்குள்ள மக்கள் இயல்பான ஒன்றாகக் கருதும் அளவுக்குத் தான் அவர்களின் சமூகப் பார்வை இருக்கிறதா என்பது அர்த்தம் பொதிந்த கேள்வி அல்லவா? முன்பு, 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அலகாபாத்தில் கூடுதல் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்த பர்த்தாரி பிரசாத்  என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார்.  அவருக்குப் பதிலாக ஏ.கே. சிறீவஸ்தவா என்ற பார்ப்பனர் புதிய நீதிபதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும், தலித் நீதிபதி அமர்ந்திருந்த அறையையும், அவர் பயன்படுத்திய நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்களையும் கங்கை நீர் தெளித்துக் கழுவி சுத்திகரிப்பு செய்ததாகச் செய்திகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இன்னும் இப்படி எத்தனைக் கொடுமைகள், பாபாசாகேப் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம், மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே என பெரும் பெரும் பொறுப்பில் இருந்த, இருக்கும் அரசு, அரசியல் ஆளுமைகளே ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள் என்ற காரணத்தால் இழிவுபடுத்தப் படுகிறார்கள்; பாகுபாடுகளுக்கு உள்ளாகிறார்கள், தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கிறார்கள், அவர்கள் தொட்ட இடம் ‘சுத்தப்படுத்தப்பட வேண்டும்’ என்று சொல்லப்படுகிறதென்றால், உண்மையில் சுத்திகரிக்கப்பட வேண்டியவை எவை?

மநுவாதச் சிந்தனையும், வேத, இதிகாசங்களும், ஈராயிரம் ஆண்டுகளாய் மூளையில் புகுத்தியுள்ள வர்ணாசிரம, ஸநாதன நஞ்சைத் தான் முதலில் சுத்தி செய்ய வேண்டும். பெண்ணடிமைத் தனமும், ஜாதி வெறியும் நிரம்பிக் கிடக்கும் இந்தச் சமூக அமைப்பு தான் சுத்தி செய்யப்பட வேண்டும். சக மனிதனைத் தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று ஒதுக்கி வைக்கும் அத்தனை சுருதிகளும், ஸ்மிருதிகளும், ஆரியக் கட்டுக்கதைகளும் ஒட்டுமொத்தமாகக் கொளுத்தப்பட்டுச் சுத்தம் செய்யப்பட வேண்டும். நான்கு வர்ணங்களை நானே படைத்தேன்; அதை நானே நினைத்தாலும் மாற்றமுடியாது என்றும், வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் இழிவுபடுத்தும் பகவத் கீதையை ஒழித்துக் கட்டித் தான் சுத்தம் செய்ய வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று இருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், ஒட்டு மொத்தமாக ஜாதி என்பதே தடைசெய்யப்பட்டுவிட்டது, ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாக்கினால்தான் இந்தச் சமூக அழுக்கு சுத்தமாகும். கடவுள், மதம், சாஸ்திரம், சடங்குகள் என்னும் பெயரால் மூளையில் போடப்பட்டுள்ள விலங்குகளை உடைத்துத் தான் சுத்தம் செய்ய முடியும். சுத்தி செய்யப்பட வேண்டியது சீழ்ப் பிடித்த இந்த ஸநாதனச் சமூக அமைப்பின் புத்தியைத்தான்! இந்த இழிவுகளைத் துடைத்தழிக்கும் ஒரே கிருமி நாசினி, தந்தை பெரியார் என்னும் நச்சுயிர்க் கொல்லிதான்! அவர்தம் சிந்தனைகளை இந்தியா முழுமையிலும் தெளித்தலே, தெளிவிக்கும் ஒரே வழி! அதைச் செயல்படுத்த உறுதியேற்போம் – இந்தப் பெரியார் பிறந்தநாளில்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *