சமூகநீதிக்குச் சாவு மணியா? செப்.11 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகி விட்டீர்களா தோழர்களே?

இணையவழி கையெழுத்து இயக்கம்

 கவிஞர் கலி.பூங்குன்றன்

இடஒதுக்கீடு,சமூகநீதி என்று வருகிறபோது, அங்குலம் அங்குலமாக உயர் ஜாதி பார்ப்பன ஆதிபத்தியத்தை எதிர்த்து முன்னேறிட வேண்டிய நிலையை அவலம் என்று சொல்லாமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது?

இந்நாட்டில் நூற்றுக்கு மூன்று பேராக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து இருப்பதற்குக் காரணம் என்ன?

இந்து மதத்தின் வர்ணாசிரம – ஜாதிய சித்தாந்தப்படி சூத்திரர்கள், பஞ்சமர்கள் படிக்கக் கூடாது என்ற ஏற்பாடுதானே?

இந்த ஏற்பாட்டை ஒழிக்காவிட்டால், அது என்ன சுதந்திரம் – வெங்காயம்?

இதைத்தானே தந்தை பெரியார் கேட்டார். இந்தக் காரணத்துக்காகத்தானே காங்கிரசை விட்டு வெளியேறினார் தந்தை பெரியார்!

இன்று நிலை என்ன? தமிழ்நாட்டில் 69 விழுக்காடு. இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்ட ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு நிலை பெற்றுள்ளது என்றால், இதற்காக எத்தனை எத்தனை மாநாடுகள்! எத்தனை எத்தனைப் போராட்டங்கள்! சிறைவாசங்கள்!

மாநில அரசில்தான் அதுவும் சென்னை மாநிலம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு இருந்து வந்தது. ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு இல்லாத நிலையில் தானே இந்தியக் குடியரசு பிறந்தது. அரசமைப்புச் சட்டத்தில்– இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? ஏன்?

அந்த அளவுக்குப் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மக்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர்.

இன்னும் கொடுமை என்னவென்றால், ஒன்றிய அரசுத் துறைகளில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றால் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்த நிலைப்பாட்டில்கூட கை வைத்து விட்டார்களே!

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற ஆட்சியில் 1928 முதல்செயல்பாட்டில் இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை, நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி ஒழித்துக் கட்டி விட்டனரே!

இந்த வரலாற்றை எல்லாம் வரிப் புலிகளான இளைஞர்கள் புரிந்து கொண்டு பாய்ந்து எழ வேண்டாமா?

வெடித்தது பூகம்பம் தமிழ்நாட்டில் – வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் தலைமையில்!

சட்டமன்றம் செல்லாத தந்தை பெரியார் வீதிமன்றம் சென்றார். மக்களைத் தட்டி எழுப்பினார். தமிழ்நாடே போர்க் கோலம் பூண்டது.

அதன் விளைவுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் வந்தது என்பதை இன்றைக்குப் பட்டதாரி களாகவும், அதிகாரிகளாகவும் வலம் வரும் பிற்படுத்தப்பட்ட சமூக தோழர்கள் அறிவார்களா?

அரசமைப்புச் சட்டம் 15 உட்பிரிவு 4 என்பது இணைக்கப் பட்டதால் தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட கல்வியில் இடஒதுக்கீடு பெற்றனர் என்பது நினை விருக்கட்டும்!

ஒன்றிய அரசுத்துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எப்பொழுது எங்கே நிறைவேற்றப்பட்டது தெரியுமா?

4.8.1940 அன்று திருவாரூரில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) 15ஆவது மாநில மாநாட்டில்தான் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு விடிவு காலம் சமூகநீதிக்காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) பிரதமராக இருந்த கால கட்டத்தில்தான் பிறந்தது (7.9.1990).

 

இட ஒதுக்கீடு –ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகக் குழுவின் அயந்து நாள் கூட்டம் முடிவடைந்திருக்கிறது. செயற்குழுவின் முடிவுகளை செய்தியாளர்களிடையே விளக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேந்திர் சிங் – இட ஒதுக்கீடு பிரச்சினையில் – ஆர்.ஆர்.எஸ். கருத்து என்ன என்பதை விளக்கியிருக்கிறார்.

“On the policy of reservations, Prof. Singh said, “the Sangh is opposed to it on caste lines and favoured an economic criteria. In the past 45 years, the 21 percent quota for SC/STs, had not benefited the needy. the Janata Dal which is constantly harping on this is disintegrating as a consequence.” (‘இந்து’ 1994 – ஜூலை 11) [1994]

“இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் இருப்பதை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுவதையே ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறது. கடந்த 45 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 21 சதவீத இட ஒதுக்கீடு இருந்தும் அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடவில்லை. இந்தப் பிரச்சினையிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஜனதா தளம் – அதன் விளைவால் சிதறிப்போனது” – என்கிறார் ராஜேந்திரசிங்!

ஆர்.எஸ்.ஸின் இந்தக் கொள்கை அடிப்படையில்தான் இப்பொழுது 32 ஆண்டுகளுக்குப்பின் ஜாதி அடிப் படையில் என்பதற்குப் பதிலாக, பொருளாதார அடிப்படை என்ற ஒன்றைத் திணிக்கிறது.

 

விட்டு விடுவார்களா ஆதிக்க முப்புரியினர்? அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும், அரவணைப்புப் பூங்கொத்துக்களைக் கொடுத்து ஆராதனை செய்யவும் தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன!

திராவிடர் கழகப் பேரணிகளில் உச்சநீதிமன்றமா? உச்சிக் குடுமி மன்றமா? என்று எழுப்பபப்படும் முழக்கம் என்பது வேடிக்கை வார்த்தையல்ல!

வேறு எந்தப் பிரச்சினையைவிடவும் இடஒதுக்கீட்டில் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? எத்தகைய தீர்ப்புகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைக் கண்ணும் கருத்தும் உள்ளவர்கள் அறிவார்களே!

மண்டல் குழுப் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு முதற் கட்டமாக வேலை வாய்ப்பில் ஒன்றிய அரசுத் துறைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை பிரதமர் வி.பி.சிங் பிரகடனப் படுத்தினாலும், அதுசெயல்பாட்டுக்கு வந்தது 1993இல் தான்!

இந்தத் தாமதத்திற்குக் காரணம் வழக்குகளும் நீதிமன்ற தடைகளும்தான்! ஒன்றிய அரசின் கல்வித்துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அதற்கு 13 ஆண்டு களுக்குப் பிறகுதான் செயல்பாட் டுக்கு வந்தது என்றாலும், இதுவரை கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ 27 விழுக்காடு இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாக கிட்டியதா என்றால் அதுதான் இல்லை.

காரணம் கிரீமிலேயர் வரையறை, பதவி உயர்வில் இடஒதுக்கீடு இன்மை என்ற இன்னோரன்ன காரணங்கள்தாம்.

இப்பொழுது அடுத்த மிகப் பெரிய சதித் திட்டப் பள்ளத்தைத் தோண்டி வைத்துள்ளனர் – அதாவது பிற்படுத்தப் பட்டோர்களின் அடிமடியில் கை வைத்து விட்டனர்.

‘பேக்வேர்டு கிளாஸ்’ என்பதில் உள்ள கிளாஸ் என்பது ஜாதியைக் குறிப்பிடாது; மாறாக வகுப்பை – பொருளாதார அடிப்படையைத் தான் குறிக்கும்! கிளஸ் வேறு,கேஸ்ட் வேறு – என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.

அப்படியானால் 1951 முதல் இந்திய அளவில் பேக்வேர்டு கிளாஸ் என்பது ஜாதி அடிப்படையிலானது என்பதை ஒப்புக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்ததெல்லாம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று சொல்லப் போகிறார்களா?

கிளாஸ் என்பது குறிப்பிட்ட ஜாதிகளின் தொகுப்பே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் அழுத்தம் திருத்தமாக, இரு பொருள்களுக்கு இடமின்றி, அய்யந்திரிபறக் கூறியிருக்கிறாரே  – அவரைவிட அறிவாளிகளா இந்த ஆர்.எஸ்.எஸ். விரியன் போட்ட குட்டிகள்?

ஆர்.எஸ்.எஸின் கொள்கையே இடஒதுக்கீட்டை எதிர்ப்பதுதானே! அதனை நேரிடையாகச் சொன்னால் வெகு மக்கள் என்ற நேபாள வெள்ளம் (சமீபத்திய) அவர்களை மூழ்கடித்துவிடுமே! அதனால்தான் குறுக்குச் சந்தில் பாய்ந்து பேக்வேர்டு கிளாஸ் என்பதில் உள்ள கிளாஸ் என்பது ஜாதியைக் குறிக்காது – அது வகுப்பைத்தான் குறிக்கும் என்று இந்த வர்ணவாசிகள் கோரஸ்பாட ஆரம்பித்துள்ளனர்.

ஒரு சேதி தெரியுமா? பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கான முதல் அரசமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, ஒரு திருத்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதில் பொருளாதார அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்பதுதான் அது!

அந்தத் திருத்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது; பொருளாதார அளவுகோல் என்பதற்கு ஆதரவாக வெறும் 5 வாக்குகளும் எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன.

தொடக்கத்திலேயே அடி பட்டுப்போன ஒன்றை வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் பொருளாதார அளவுகோலைத் திணித்துக் கொண்டே வருகின் றனர். (வருணாசிரம சித்தாந்தப்படி பிச்சை எடுத்துப் போஜனம் செய்வதுதானே பார்ப்பனருக்குரியது. எனவே பொருளாதார அளவுகோல் என்ற ரப்பர் ஸ்கேலைக் கொண்டு வரத் துடியாய்த் துடிக்கின்றனர் என்பதை அறிக!)

இந்திரா சகானி வழக்கில்(மண்டல் கமிசன் வழக்கு) உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிரீமிலேயர் என்ற பொருளாதார வரம்பைத் திணித்தது (1992 நவம்பர் 16).

அதே நேரத்தில் 1991இல் பி.வி. நரசிம்மராவ்  கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு என்ற ஆணையை செல்லாது என்று கூறியதும் இந்த உச்சநீதிமன்றம்தான்!

குஜராத் மாநிலத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் பிஜேபி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டங்களை உச்சநீதிமன்றம் இரத்து செய்யவில்லையா?

‘‘பொருளாதார அளவு கோல் செல்லுபடியாகாது’’ என்று இவ்வளவு தீர்ப்புகள் இருந்தும், நரேந்திர மோடி தலைமையிலான  ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பிஜேபி அரசு அவசர அவசரமாக 2019ஆம் ஆண்டில் 103வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் கொண்டு வந்து பொருளா தாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக் கீட்டுக்கு வழி செய்தது. நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட ஆறே நாளில் செயல்பாட்டுக்கு வந்தது. இவ்வளவு வேகத்தில் வேறு எந்த சட்டமும் செயற்பாட்டுக்கு வந்தது உண்டா? கிடையவே கிடையாது.

இதனோடு – பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மண்டல் ஆணைய பரிந்துரைகளில் ஒன்றான வேலை வாய்ப்புக்கு மட்டும் 27 விழுக்காடு என்பது 13 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் தான் செயற்பாட்டுக்கு  வந்தது.

கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடோ 18 ஆண்டு களுக்குப் பிறகே (2008)  செயற்பாட்டுக்கு வந்தது.

பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்ற பெயரால் உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடோ (EWS) வெறும் ஆறு நாட்களில் செயற்பாட்டுக்கு வந்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 1925இல் சேலத்தில் பொதுக் கூட்டத்தில், தந்தை பெரியார் ‘சுதந்திர இந்தியாவில் ‘டெமாக்கிரசி’ இருக்காது; மாறாகப் ‘பிராமினோகிரசி’தான் இருக்கும் ’  என்று 101 ஆண்டுகளுக்குமுன் தொலைநோக்கோடு கூறியதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது என்னவென்றால் முதலுக்கே மோசம் என்ற அபாயகரமான வேலையில் ஒன்றிய பாசிசப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பிஜேபி ஆட்சியில் சென்சஸ் கணக்கெடுப்பில் பேக்வேர்டு கிளாஸ் என்பது பிற்படுத்தப்பட்டவர்களின் ஜாதியைக் குறிக்காது. மாறாக பேக்வேர்டு ‘கிளாஸ்’ எ்னபதால் அது வகுப்பைத்தான், பொருளாதார ஏற்றத் தாழ்வைத்தான் குறிக்கும் என்று பூணூ லுக்கே உரித்தான கோணல் புத்தியோடு குறுக்குச்சால் ஓட்டுகின்றனர்.

சென்சஸ் கணக்கில் பேக்வேர்டில் ஜாதி அடையாளம் நீக்கப்படு வதால் முற்றிலுமாக பிற்படுத்தப்பட்டவர் களுக்கான இடஒதுக்கீட் டைப் புதைக்க ஆழமான குழியை வெட்டி விட்டனர்.

மண்டல் ஆவணப்படி இந்தியாவில் பிற்படுத்தப் பட்டோர் 52 விழுக்காடு இருந்தும், இந்தப் பெரும் பான்மை மக்களுக்கு குழைத்து நாமம் தீட்டப் போகிறார்களே! பிற்படுத்தப்பட்ட மக்களே என்ன செய்யப் போகிறீர்கள்?

வழக்கம் போல திராவிடர் கழகம் போராட்டக் களத்தில் குதித்து விட்டது. வரும் 11ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்!!

சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை வகிக்கிறார்.

சமூகநீதிக் களத்தில் கருஞ்சட்டையினர் குதிக்கிறார்கள் என்றால்,  அது வெற்றி  கிட்டும் வரை ஓயாது என்பதுதான் கடந்த கால வரலாறு  – இப்பொழுது வருங்காலத்துக்கான வெற்றிக் கொடியை நாட்ட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

இதில் கட்சியில்லை – சமூகநீதிக்கான இலட்சியம் மட்டுமே –  வாரீர்! வாரீர்!! வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டாம்.

நம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக் குழி வெட்ட பார்ப்பன பாசிச பா.ஜ.க. ஆட்சி மண்வெட்டி, கடப்பாறையுடன் புறப்படத் தயாராகி விட்டது.

புறநானூற்றுப் பரம்பரை என்று வீர வசனம் பேசாமல் காரியத்தில் கடமையாற்ற வாரீர்! வாரீர்!!

இடையில் ஒரு நாள்தான்! ஓங்கிக் குரல் கொடுப்போம் – முதற்கட்டமாக  – அது டில்லி சான்சத்பவன் காது கிழிய கேட்கட்டும்! வாரீர்! வாரீர்!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *