மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
ஒரு புறம் ஸநாதனப் பார்ப்பனர்களின் எதிர்ப்பு, மறுபுறம் சீர்திருத்தவாதிகளின் அழுத்தம். ஆங்கிலேய அரசோ வெளியிலிருந்து வந்தவர்கள். பார்ப்பனர்கள் அவர்கள் பண்பாடுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த பண்பாடு என்று ஆங்கிலேயர்களை நம்ப வைத்திருந்தனர். மறுபுறம் சீர்திருத்தவாதிகள் சார்ந்திருந்த பெருவாரியான மக்கள் கல்வியறிவு இல்லாமல், அடிமைத்தனத்தில் ஊறிய அப்பாவி மக்கள். அவர்கள் பெருவாரியாக (97 சதவீதம்) இருந்தாலும், கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் எதிர்த்துப் பேச முடியாத நிலையில் மூளைச் சலவைக்கு ஆளானவர்களாக இருந்தனர். அதனால் தங்கள் உரிமைகளுக்கே போராட முயலாத நிலையில் அவர்கள் இருந்தனர். அவர்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சீர்திருத்தவாதிகளோ ஒரு சிலரே. அதனால் குறைந்த எண்ணிக்கையிலான (3 சதவீத) பார்ப்பனர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. பெரும்பான்மை மக்களின் பக்கம் உள்ள நியாயத்தை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டாலும், “இரு தலைக்கொள்ளி எறும்பாக” தடுமாறினர். அதனால் எந்த சீர்திருத்த திட்டங்களையும் அவர்களால் சட்டென்று அமல்படுத்த முடியவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
“ஒரு பெண்ணுக்கு புருஷனை ஈசவரனாகக் காட்டியிருக்கிற நம் தருமத்தில் ஏராளமான ஸ்த்ரீகள் ஸுலபமாக கடைத்தேறியிருக்கிறார்கள். புருஷனை ஈசவரனாக நினைப்பது, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற கொள்கை, ‘கல்யாணம் கணவன்’ என்ற அடங்கிய ஸ்வபாவம், பதிவிர்தயம் (கற்பு), ஸ்வமாங்கல்யம் (சுமங்கலித்தன்மை) சுமங்கலியாகவே செத்துப் போக வேண்டும் என்ற தீவிரமான பிரார்த்தனை ஆகிய இவைகள் அநாதி காலமாக நம் தேசத்து ஸ்திரீதர்மமாக, நம் தேசத்துப் பெண்களின் உத்தம ஜீவனத்திற்கு உயிர் நிலையாய் இருந்து வருகிறது” என்று மகா பெரியவாள் தன் “தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகத்தில்) எழுத ஆரம்பிக்கிறார்.
“காதல், கீதல் என்ற விகாரம் ஏற்படாமல், சரீர நினைப்பும், காமமும் வருகிறதுக்கு முந்தியே ஒருவனை நம்ம ஆத்துப் பெண் குழந்தை பர்த்தாவாக அடைந்தால், அதன் உள்ளத்தில் உண்டாகிற பணிவினால் பர்த்தாவிடம் உண்மையான சரணாகதி செய்து இவனே நமக்கு குரு, இவனே நமக்கு ஈச்வரன் என்றிருக்க முடியும். கேள்வி கேட்காமல் நம்பிக்கையின் பேரில்தான் அதாவது பால்யத்தில்தான் ஒருத்தனை பரமேச்வரனாக நினைக்க முடியும். விவரம் தெரியாத போது வந்த இந்த நம்பிக்கை மனசில் ஊறி, ஊறி நம் ஸ்வாபாவிகமான ஸ்த்ரீ தர்மத்தினால் மனசில் உறுதிப்பட்டு விடுவதால் விவரம் தெரிந்த பின்னும் பதியே பரமேச்வரன் என்ற பக்தி நிலைத்து நின்று விடும். அவனிடத்திலேயே தன் மனசை அர்ப்பணம் பண்ணித் தனக்கென்று மான, அவமானம் எதுவும் இல்லாமல் ஒருத்தி இருந்துவிட்டால் அவளுடைய அகம்பாவம் கரைந்து போய்விடுகிறது” என்கிறார் மகா பெரியவாள்(?) (“தெய்வத்தின் குரல்”-காஞ்சி மகா பெரியவாள் அருளியது, பாகம்-2) பார்ப்பனர்கள் “லோக குரு”(?)வராக இருந்தாலும், ஸநாதன பார்ப்பனராக இருந்தாலும், சாதாரண சவுண்டிப் பார்ப்பானாக இருந்தாலும் “குழந்தைத் திருமணம்” செய்யும் காரியத்தில் எவ்வளவு கண்ணாக இருக்கிறார்கள். இப்படி எழுதுவதன் மூலம் பெண்களை எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள்? பெண்கள் கற்பு நிலை தவறாமல் இருக்க வேண்டும் என்று உபதேசிக்கும் இந்தப் பார்ப்பனக் கூட்டம் ஆண்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.
“கண்ணிகைகள் பரமேச்வரனையே பதியாக நினைத்துப் பூஜிப்பது, பிறகு பதியாக ஒருவன் வருகிறான் (அவன் என்ன அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது கணவனா?). பின் அவனையே பரமேச்வரனாகப் பூஜிப்பது, இப்போது பத்தினியாகிவிட்ட அந்தத் கன்னிகைக்கு விரதமாக ஆகிறது. ஆரம்பத்தில் பரமேச்வரனையே பதியாக (கணவனாக) நினைத்து, பூஜித்து முடிவில் எவன் வந்தாலும் அவனையே பரமேச்வரனாக பாவித்து விட வேண்டியது அந்தக் கற்புக்கரசியின் கடமை” என்கிறார் மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. பார்ப்பனர்களின் “லோக குரு”வான இவர் கூறும் ஒழுக்க நெறி எவ்வளவு கேவலமானதாக இருக்கிறது. பரமேச்வரன் முதல் “பதி”யாம்! அடுத்து வரும் எவனோ ஒருவன் இரண்டாம் கணவனாம். அந்தப் பெண் இரண்டாம் கணவனை முதல் கணவனாக நினைத்து உடன் இருக்க வேண்டுமாம்! பார்ப்பனர்களின் “யோக்கியதையைப் பார்த்தீர்களா? (சான்று: “தெய்வத்தின் குரல்”, இரண்டாம் பாகம்.)
“பால்ய விவாஹம் கெடுதல் என்பது வெறும் பேச்சு. குழந்தையாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் அப்புறம் அவள் சரீர ரீதியில் பக்குவமான பிறகுதான் தாம்பத்யம் பண்ண அழைத்துக் கொள்ளப்படுவாள். அதுவும் தவிர தர்சபூர்ணம் (அமாவாசை, பவுர்ணமியைப்) போன்ற அநேக தினங்களில் பிரம்மச்சரிய நியமம் சொல்லியிருப்பதால் சரீரம், சித்தம் இரண்டுமே புஷ்டியோடு இருக்கும். இப்போதுதான் இந்தக் கட்டுப்பாடுகள் போய் சித்த விகாரம், தேக பலஹீனம் இரண்டும் அதிகமாகி நரம்பு சம்பந்தமான டாக்டர்கள் நன்றாக விருத்தியாகும்படி ஆகியிருக்கிறது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் மகா பெரியவாள்(?). ஆக, குழந்தைத் திருமணம் செய்யவில்லையென்றால் நரம்பியல் நோய்கள் வந்து விடும் என்று பயம் காட்டுகிறார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. பார்ப்பனர்கள் தங்கள் ஸநாதன தர்மத்தை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதற்கான விவாதங்களையும் விடவே மாட்டார்கள்.
“பால்ய விவாஹத்தினால் பால்ய விதவைகள் என்ற கொடூரமான களங்கம் ஏற்பட்டு ஹிந்து மதத்தையே மாசுபடுத்திவிட்டது என்பதுகூட மிகையான வாதம் தான் (exaggeration). பால்ய விதவைகள் இருக்க வேண்டுமானால் அவர்கள் கணவன்மார்கள் உயிரோடு இருந்தால், பதினைந்து வயதிலிருந்து இருபத்து அய்ந்து வயதுக்குள் இருப்பார்கள். நான் கேட்டறிந்த மட்டில் இந்த 15 – 25 ஏஜ் குரூப்பில் சாவு ஏற்படுவது ரொம்பவும் குறைச்சல்தான். எனவே பால்ய விதவைகள் சொற்பமாகவே இருந்திருப்பார்கள். இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஒரு குழந்தை வைதவ்யம் அடைந்தது என்றால் கூட மனஸுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் மொத்தப் பயனைப் பார்க்கும்போது இதற்கெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியதுதான்” என்கிறார் மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. எப்படி கொஞ்சம் கூட மனித நேயமே இல்லாமல் இந்தப் பார்ப்பனர்களின் லோககுரு(?) கூறுகிறார் பாருங்கள்.
“இப்போது பெண்ணுக்கு இருபது வயதுக்கு மேல் கல்யாணம் செய்து கொடுக்கிறபோதும் விதி இருந்தால் உடனே வைதவ்யம் வரத்தான் செய்கிறது. ஒரு ரயில் ஆக்சிடென்ட், ஒரு பிளேன் ஆக்சிடென்ட் என்கிற போது கல்யாணமாகி ஒன்று, இரண்டு மாதங்களிலேயே ஜீவனை இழந்தவர்களும், அதில் பலர் இருப்பதைப் பார்த்து மனசு ரொம்ப கஷ்டப்படுகிறது. வைதவ்யத்தைத் தடுப்பதற்காக பால்ய விவாகத்தைத் தடுத்து விடலாம் என்றால், பிற்பாடு வயசு வந்தபின் கல்யாணமானவுடனே வைதவ்யம் வராமல் ‘காரண்டி’ தர நமக்கு சக்தியில்லையே” என்கிறார் மகா பெரியவாள். இந்த அவர் கருத்து வெளியிட்டது அவர்கள் மடத்திலிருந்து வெளிவரும் “Accordingly குரல்” (இரண்டாம் பாகம்) நூலில் உள்ளது. சிறிதும் மனித நேயம் இல்லாமல் கல்யாணமான உடனே விதவையாகி விடவில்லையா? அதனால் குழந்தைத் திருமணத்தை நிறுத்தக் கூடாது என்று கூறும் இவரே தன்னை ‘தெய்வம்’ என்று கூறிக்கொண்டவர். இவர்கள் தங்களை ‘ஸ்மார்த்தர்கள்’ (“தாங்களே” கடவுள்கள்) என்று கூறிக் கொண்டவர் இந்தக் ‘கடவுளுக்கு(?) மரணத்தை நிறுத்தி பெண் விதவையாவதைத் தடுக்கும் சக்தியில்லையாம்!
(இன்னும் நிறைவடையவில்லை)
