இந்நாள் – அந்நாள்

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973)

பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். ஓய்வறியாத் தமிழ் பணியாளர்.

இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய்மேடு என்னும் கிராமத்தில் சிங்காரவேலர்–  ரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் 17-11-1910 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல் மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூலான தமிழர் தலைவர் நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணவர் ஆவார்.

பி.ஏ.ஆனர்ஸ் எனும் படிப்பு மாறி எம்.ஏ. படிப்பு அறிமுகமானபோது தமிழ் பாடத்தை எடுத்துவிடலாம் என 1959-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் முடிவு செய்தனர். அப்படி தமிழ் பாடத்தை நீக்குவது தவறு என ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது அங்கு வந்து இருந்த செட்டிநாட்டு அரசர் முத்தையா செட்டியார் தமிழ் படித்து பலர் வேலை தேடி திண்டாடுகிறார்கள். எனவே இந்த முடிவு எனது முடிவே என்று கூறியுள்ளார். அரசர் முடிவு என்று தெரிந்தும் இலக்குவனார் விடவில்லை. “உங்கள் தந்தையார் அண்ணாமலை அரசர் இந்த நிறுவனத்தை தமிழுக்கு முதன்மை அளிக்கவே தொடங்கியதாக கூறினாரே? நீங்கள் உங்கள் தந்தையார் போலவே தமிழைப் போற்ற வேண்டாமா என்று அரசரையே கேட்கவும் அரசர் தமது வாதத்தை கைவிட்டு இனி எப்போதும் என் பல்கலைக்கழகம் தமிழுக்கு முதன்மையளிக்கும்” என்று கூறினார். மிகத்துணிச்சலாக அரசருடன் வாதாடி தமிழ் படிப்பு தொடங்கிட வழிவகுத்த இலக்குவனாரை அனைவரும் பாராட்டினர்.

கலைஞரின் ஆசிரியர்

இலக்குவனாரின் இந்த போராட்ட குணம் பல போராளிகளை உருவாக்க வழி வகுத்தது. திருவாரூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் அவரிடம் 9, 10-ஆம் வகுப்புகளில் படித்த மாணவர் தான் கலைஞர். அதன் பின்னர் அவர் திருநெல்வேலி மா.தி.தா. இந்துக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது அவரிடம் இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர் தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் இரா.நல்லக்கண்ணு. மதுரை தியாகராஜர் கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றியபோது அவரிடம் படித்த கா.காளிமுத்து, நா.காமராசன் இருவரும் ஹிந்தி ஆட்சி மொழி சட்டத்தை எதிர்த்து சிறை சென்ற போராளிகள். நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் “அவர் மாணவர்களை உருவாக்கினார் என்பதை விட தமிழ் உரிமைக்கான போராளிகளை உருவாக்கினார் என்பதே பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களுடன்

தி.மு.க. பிரிந்த போது தந்தை பெரியார் அவர்களுடன் தமிழ்நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்தவர் பேராசிரியர் சி. இலக்குவனார். இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தொல்காப்பியம் நூலைத்தான் முதலமைச்சர் அண்ணா அமெரிக்கா சென்றபோது பலருக்கும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஓய்வறியாத தமிழ்ப் பணியாளர்

நெல்லை இந்துக் கல்லூரி, 1940 களில் தனித்தமிழ் மணம் கமழும் பூஞ்சோலையாக விளங்கியது. காரணம், அங்கு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சி.இலக்குவனார்.  அப்போது அவரிடம் பயின்ற, பொதுவுடைமை இயக்கத் தலைவர் இரா.நல்லகண்ணுவும் கல்வியாளர் வேங்கடசுப்பிரமணியமும் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய நினைவுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

‘எஸ் சார்’ என்றும் ‘பிரசென்ட் சார்’ என்றும் கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு கூறிவந்த நாட்கள் அவை. அவர்களை ‘உளன் அய்யா’ என்று தனித்தமிழில் வருகைப்பதிவு அளிக்கச் செய்தார் சி.இலக்குவனார். ‘உள்ளேன் அய்யா’ என அது மருவி தமிழ்நாடெங்கும் பரவியது. சி.இலக்குவனார் பள்ளிப் பருவத்திலேயே தனது பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொண்டவர். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சாமி.சிதம்பரனார் இலக்குவனாரின் பள்ளி ஆசிரியராக வாய்த்ததே காரணம். அவரது தமிழ்ப் பணிகள் அப்போதே தொடங்கிவிட்டன.

1933 இல் திருவையாறு அரசர் கல்லூரி யில் புலவர் பட்டப் படிப்புக்குப் படித்துக்கொண்டிருந்தபோது, ‘எழிலரசி’ என்ற குறுங்காவியத்தை எழுதினார். தஞ்சையில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபோது, தொல்காப்பியர் விழா, இளங்கோவடிகள் விழா, திருவள்ளுவர் விழா, அவ்வையார் விழா என்று பல்வேறு விழாக்களை நடத்தி, தமிழின் சிறப்பை மாணவர்களிடம் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களிடம் எடுத்துரைத்தார்.

தான் செல்லும் இடமெங்கும் தமிழ்க் கழகம் நிறுவியும் இதழ்கள் நடத்தியும் தனித் தமிழ், திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றின் சிறப்புகளைப் பரப்புவதுமே அவரது வாழ்நாள் பணியாக இருந்தது. நெல்லையில் ‘சங்க இலக்கியம்’, விருதுநகரில் ‘இலக்கியம்’, தஞ்சை யில் ‘திராவிடக் கூட்டரசு’, புதுக்கோட்டையிலும் மதுரையிலும் ‘குறள்நெறி’ என்று சோர்வின்றி இதழ்களை நடத்திவந்தார்.

ஆய்வரங்குகளில், மக்கள் மன்றங்களில், கல்விக் கூடங்களில் என வாய்ப்புக் கிட்டும் இடங்களில் எல்லாம் தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கவும் தமிழுக்கு இழைக்கப்படும் தீங்குகளைக் கண்டிக்கவும் செய்தவர் சி.இலக்குவனார். அவருடைய இந்தப் பண்புகளே எந்த இடத்திலும் நிலையாகப் பணிபுரிய இயலாத சூழலை ஏற்படுத்தின. காலமெல்லாம் ஊர்விட்டு ஊர் பெயர்வதே அவர் வாழ்வாகிப்போனது.

1968 இல் அவர் விரும்பிய, அவரையும் விரும்பிய திராவிட இயக்கம் தமிழகத் தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அய்தராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்குத் தனது 55 ஆவது வயதில் பணிபுரியச் செல்ல வேண்டியிருந்தது என்பது வரலாற்றின் நகைமுரண். முதுமையின் காரணமாக அந்தப் பணியிலும் அவர் தொடரவில்லை. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு திரும்பிவந்துவிட்டார்.

1970 வரை, நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஆசிரியப் பணிக்கு ஓய்வுண்டு. தமிழ்ப் பணிக்கு? மீண்டும் ‘குறள்நெறி’ இதழை நடத்த ஆரம்பித்தார்.

இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

தமிழுக்காக உயிரையே பணயம் வைக்கும் போராளிகளை உருவாக்கிய புலவர் சி.இலக்குவனார் 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாளில் இயற்கை எய்தினார். இந்நினைவு நாளில் அவருடைய புகழ்களை நினைவுக் கூர்வோம்.

தகவல் : பாணாவரம் பெ.வீரமணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *