பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி
ப.ஜீவானந்தம் பிறந்தநாள் இன்று (21.08.1907)
இந்தியப் பொது வுடைமை இயக்கத்தின் முன்னோடி ஜீவானந்தம் அவர்களின் பிறந்தநாள். தனது வாழ்நாள் முழு வதும் ஏழைகள், தொழி லாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகப் பாடுபட்ட அவர், தமிழ்நாடு அரசியலிலும் சமூக மாற்றத்திலும் நீங்கா இடம் பெற்றவர்.
ஜீவானந்தம், 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பூவங்குளம் கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்திலும், சமூகப் போராட்டங்களிலும் ஈர்க்கப்பட்டார்.
1930 களில் பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ப. ஜீவானந்தம், இந்தியப் பொதுவு டைமைக் கட்சியில் இணைந்தார். கட்சித் தலைவர்களுள் ஒருவரான அவர், தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்தார். ஒரு சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுகள் மக்களைச் சிந்திக்கத் தூண்டியதோடு, போராட்டங்களுக்கு மக்களைத் திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தன. 1959 இல் ‘தாமரை’ என்ற இதழைத் தொடங்கினார். ‘சமதர்மம்’ ‘ஜனசக்தி’, ‘அறிவு’ போன்ற பத்திரிகைகளை நிறுவி, அவற்றில் பொதுவுடைமைக் கருத்துகளையும் சமூகப் பிரச்சினைகளையும் பற்றித் தொடர்ந்து எழுதினார்.
1952 முதல் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சென்னை வண்ணை நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்ட மன்றத்திலும் தொழிலாளர்களின் உரிமைகள், விவசாயிகளின் பிரச்சினைகள், கல்வி மேம்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் இன்றும் பலரால் போற்றப்படுகின்றன.
தந்தை பெரியாருடன் ஜீவானந்தம்
ஆரம்ப காலத்தில் ஜீவானந்தம், தந்தை பெரியார் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூக சமத்துவம் போன்ற தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஜீவானந்தம் முழுமையாக ஆதரித்தார். பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகன்ஆனேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார். அதற்காக காவலர்கள் இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.
பத்திரிகை பங்களிப்பு
தந்தை பெரியார் அவர்கள் நடத்திய ‘குடிஅரசு’ மற்றும் ‘புரட்சி’ போன்ற பத்திரிகைகளில் ஜீவானந்தம் பல கட்டுரைகளை எழுதினார். தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளைப் பரப்புவதிலும், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
ஒரு காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுடன் ஜீவானந்தமும் இணைந்து சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் ஈடுபட்டார். தந்தை பெரியார் அவர்கள் ஏற்பாடு செய்த பல மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் ஜீவானந்தம் ஒரு முக்கியப் பேச்சாளராகக் கலந்துகொண்டார்.
ப.ஜீவானந்தம் பொதுவுடைமைக் (கம்யூனிச) கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கைகள், ஜாதி ஒழிப்புடன் சேர்த்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று அவர் நம்பினார்.
1961 இல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர் கோவிலில் பொதுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலை முறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963 ஆம் ஆண்டு ஜனவரி 18 இல் தமது 55 ஆம் வயதில் மறைந்தார்.
கலிலியோ தொலைநோக்கிக் கருவியைக் கண்டுபிடித்து உலகுக்களித்த நாள் இன்று (21.08.1610)

உலகவரலாற்றில் இத்தாலிய நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ டெலஸ்கோப் எனப்படும் தொலை நோக்கிக் கருவியைக் கண்டுபிடித்து (21.8.1610) உலகுக்களித்தார்.
“நவீன அறிவியலின் தந்தை என்று பெருமையாக அழைக்கப் படுகிறார். வெள்ளிக் கோளின் வெவ்வேறு பரிமாணங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டுபிடித்தல், மற்றும் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்தல் ஆகியவை கலிலியோ அவரது கண்டு பிடிப்பான தொலைநோக்கி மூலம் வானியல் ஆராய்ச்சியில் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும்.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
