316 மாணவர்களுக்கு ‘‘விசா’’ கிடைக்க ஒன்றிய அரசு மூலம் அந்நாட்டுத் தூதரை வலியுறுத்துக!

5 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மலேசியாவில் மருத்துவ ஆய்வுப் படிப்பு மேற்கொண்டுவரும்
மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை அனுப்பிடுக!
இங்கிலாந்தில் படிக்க விண்ணப்பித்து தமிழ்நாடு அரசின் உதவித்தொகைக்கு தேர்வாகியுள்ள

மலேசியாவில் மருத்துவ ஆய்வுப் படிப்பு மேற்கொண்டுவரும் மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை அனுப்பிடுக! இங்கி லாந்தில் படிக்க விண்ணப்பித்து தமிழ்நாடு அரசின் உதவித்தொகைக்கு தேர்வாகியுள்ள 316 மாணவர்க ளுக்கு விசா கிடைக்க ஒன்றிய அரசு மூலம் அந்நாட்டுத் தூதரை வலியுறுத்துக! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் நிதி பெற்று, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில், திசுப் பொறியியல் மற்றும் மீள் உருவாக்க மருத்துவத் துறையில், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இரண்டாம் ஆண்டு படித்து வரும் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் அண்மையில் தமது நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்கள் வழியாகத் தெரிவித்து இருந்தார்.

ரூ.21 லட்சம் அளவிலான தொகையை இன்னமும் தமிழ்நாடு அரசு அவருக்கு அனுப்பவில்லை!

கடந்த ஆண்டு செலவுகளுக்குரிய கணக்குகளையும், அவற்றுக்கான ரசீதுகளையும் கடந்த ஜூன் 8 அன்றே சமர்ப்பித்துவிட்டார். அவரது ஆராய்ச்சிப் படிப்பு குறித்த பல்கலைக்கழகத்தின் தரநிலை அறிக்கையும் அங்கிருந்து பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில், இவ்வாண்டுக்கான ரூ.36 லட்சம் மதிப்புள்ள உதவித் தொகையில், ரூ.5 லட்சத்துக்கான கல்வித் தொகையும், ரூ. 6 லட்சத்துக்கான வாழ்வாதாரச் செலவுகளுக்கான தொகையும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இவ் வாண்டின் ஆய்வைத் தொடர்வதற்காக வழங்கப்பட வேண்டிய ரூ.21 லட்சம் அளவிலான தொகையை இன்னமும் தமிழ்நாடு அரசு அவருக்கு அனுப்பவில்லை.

கேள்விகள் தொக்கி நிற்கின்றன!

இது தொடர்பாக, ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. அவர் ஏன்
ஷூ வாங்கினார்? கோட் வாங்கினார் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு,  அவர் படிக்கும் திசுக்கள் தொடர்பான ஆய்வுத் துறையில் இவற்றின் அவசியத்தை அனைவரும் எடுத்துரைத்து விட்டனர். ஆனால், இன்னமும் அத் தொகையை அவருக்கு அனுப்பாமல், கடந்த இரு மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்டுவிட்ட ரசீதுகளுக்கு, அப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் சீல் வைத்து அனுப்ப வேண்டும் என்று புதிதாக இப்போது தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. அப்படியான எந்த நடைமுறையும் இதுவரை சொல்லப்படாத நிலையில், இப் பிரச்சினையில் மேலும் காலதாமதம் ஏற்படுத்தும் வகையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இத்தகைய விதி, உதவித் தொகை பெறும் அனைத்து மாணவர்களுக்குமா? எப்போது இத்தகைய விதி அறி முகப்படுத்தப்பட்டது? என்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, உதவித் தொகை தமிழ்நாடு அரசிடமிருந்து வராததாலும், அரசியல் பிரச்சினையாக இது சட்டமன்றத்திலேயே விவாதிக்கப்பட்டு இருப்ப தாலும், பல்கலைக்கழகத்திலிருந்து அம் மாணவ ருக்குப்  படிப்பை இடைநிறுத்த வேண்டிய அளவுக்கு நெருக்கடியான சூழல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

உரிமையுடன் இதனை நாம்
வலியுறுத்த விரும்புகிறோம்!

தமிழ்நாடு அரசு தரவேண்டிய உதவித் தொகையை நம்பி, தமது படிப்பை அயல்நாடு ஒன்றில் மேற்கொண்டு வரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரை இப்படி அலைக்கழிப்பது ஓர் அரசுக்கு அழகல்ல. சமூகநீதித் துறை என்று பெயர் மாற்றப்பட்டுள்ள ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்திற்கான துறை, தனது கடமையிலிருந்து வழுவக் கூடாது; தனிப்பட்ட முறையில் இப் பிரச்சினையை அணுகக் கூடாது. அத்துறைக்குப் பொறுப்பேற்று அமைச்சராக உள்ள தோழர் வன்னிஅரசு அவர்கள் சமூகநீதிச் சிந்தனையிலிருந்து வந்தவர் என்ற உரிமையுடன் இதனை நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

உடனடியாக, அம் மாணவருக்கு உரிய உதவித் தொகையினைக் காலதாமதம் இன்றி அனுப்பிட அரசு ஆவன செய்ய வேண்டும் என்று அவசரம் கருதி வலியுறுத்த விரும்புகிறோம்.

மேலும், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைக்காக இவ்வாண்டு விண்ணப்பித்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 316 ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அய்க்கிய ராஜ்ஜியத்தின் (UK) பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு, ஒன்றிய அரசின் உதவித் தொகை உத்தரவாதத்தைத் தான் ஏற்கமுடியும்; தமிழ்நாடு அரசின் உதவித்தொகையைக் கருத்தில் கொள்ள முடியாது என்று  அந்நாடு நிராகரித்திருப்பதால், மாணவர்கள் அனைவரும் தவித்து வருகின்றனர். தனியார் வங்கிகள் தரும் உத்தரவாதங்களை ஏற்று, கல்வி கற்க அனுமதிக்கும் அய்க்கிய ராஜ்ஜியம், ஒரு மாநில அரசின் உதவித் தொகைத் திட்டத்தை நம்ப மறுப்பது ஏன்? இது தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை மூலம் அந் நாட்டுடன் பேச்சு நடத்தி நமது மாணவர்கள் உரிய நேரத்தில் தங்கள் கல்வியைத் தொடங்க ஆவன செய்யவேண்டாமா? தமிழ்நாடு அரசிடமிருந்து இங்கிலாந்து தூதரக உயர் ஆணையரைத் தொடர்பு கொள்ள, அல்லது தொடர்பு கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

தமிழ்நாடு அரசின் கடமை அல்லவா?

உள்நாட்டில், வேறொரு மாநிலத்தில் சென்று கல்வி பயில்வதே, பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டிய ஓட்டம் என்றால், கண்டம் தாண்டிச் சென்று முதல் தலைமுறையாகப் படிக்க முயலும் மாணவர்க ளைத் தொடக்கத்திலேயே மன உளைச்சலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக்காமல் காக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை அல்லவா?

டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், டாக்டர் பல்பு போன்று அயல்நாடுகளில் சென்று படித்து வந்தவர்கள் நிகழ்த்திய சமூகப் புரட்சிதான், இன்று நாம் எட்டியிருக்கும் சமூகநீதிக்கான கதவுகளைத் திறந்துவிட்டது. இந்த மாணவர்களில் எத்தனையோ பேர், நம் இனத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கான உந்து சக்தியாக இருக்கக் கூடும். அவர்களைத் தடையின்றி கல்வி பயிலச் செய்வது நம் கடமை.

மாணவர்களுக்கு முன்னுரிமை தந்து, தடைகளை ஒதுக்கி உதவிடுவது அவசியம், அவசரம்!

2017 ஆம் ஆண்டு இதே நாளில் நீட் என்னும் கொடுந் தேர்வு காரணமாகத் தன்னை மாய்த்துக் கொண்ட, அருமைச் செல்வம் அனிதா கூட, அப்போது மருத்துவப் படிப்பில் இணைந்திருந்தால், இப்படியொரு மேற்படிப்புக்கான முயற்சியில் இறங்கியிருக்கக் கூடும். நாம் நிறைவேற்ற முனைவது அனிதாக்களின் கனவை, அம்பேத்கரின் முன்னெடுப்பை, தந்தை பெரியாரின் போராட்டத்தை! கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு செய்ய வேண்டிய பணியை அரசின் – அதிகார வர்க்கத்தின் சில சட்ட சிக்கல்களையும், ஆணைகளையும் மனிதாபிமானத்துடன்  அணுகி, கல்வி நீரோடை அனைவருக்கும், குறிப்பாக காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு –   மாணவர்களுக்கு முன்னு ரிமை தந்து, தடைகளை ஒதுக்கி உதவிடுவது அவசியம், அவசரம்!

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

2.9.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *