தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நினைவு நாள் இன்று (31-08-1919)
ஆபிரகாம் பண்டிதர் இளம் வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் உடையவராக விளங்கினார். திண்டுக்கல்லில் உள்ள இசை வல்லுநரான ‘வித்வான்’ சடையாண்டிப் பத்தரிடம் இசைக் கலையை முறையாகக் கற்றார். தாமே இசைப் பாடல்களை இயற்றினார். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்கும் இசைப் பயிற்சி அளித்துப் பாட வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியின் அருகிலுள்ள ‘சாம்பவர் வடகரை’ என்னும் கிராமத்தில், முத்துசாமி – அன்னம்மாள் வாழ்விணையருக்கு மகனாக 02-08-1859-ஆம் நாள் பிறந்தார். சுரண்டையில் ஆரம்பக் கல்வியையும் பன்றிகுளம் என்னும் ஊரில் உயர்தர ஆரம்பப் பள்ளிக் கல்வியையும் பயின்றார்.
திண்டுக்கல் ‘நார்மல்’ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்று, சுரண்டையில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகச் சேர்ந்து பணி புரிந்தார்.
அருள்திரு. ‘யார்க்’ என்பவர், இவரது அறிவாற்றலை யறிந்து, தமது மாதிரிப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் செய்தார். யார்க்கிடம் ஒளிப்படம் எடுக்கும் கலையையும் நன்றாகக் கற்றுக் கொண்டார். அத்தோடு, சித்த மருத்துவம் குறித்த சுவடிகளையும், நூல்களையும் முற்றாகப் படித்து ஆய்ந்து, சிறந்த சித்த மருத்துவர் ஆனார்.
ஞானவடிவு பொன்னம்மாள் என்னும் ஆசிரியப் பெண்மணியை 1882 ஆம் ஆண்டு மணம் புரிந்தார்.
திருமணத்திற்குப் பின்னர், தஞ்சை சென்று, டபிள்யூ.எச். பிளேக் என்பவர் மூலம் ‘சீமாட்டி நேப்பியர் பெண்கள் பாடசாலை’யில் ஞானவடிவு பொன்னம்மாள் தலைமை ஆசிரியராகவும், ஆபிரகாம் தமிழ் ஆசிரியராகவும் பணியேற்றனர். ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு பின்பு விலகி, மருத்துவத் துறையில் முழுமையாக ஈடுபட்டனர்.
வேளாண்மையிலும், சித்த மருத்துவத்திலும் ஆபிரகாம் பண்டிதர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி அன்றைய சென்னை ஆளுநர் சர். ஆர்தர்லால் 1909 ஆம் ஆண்டு ‘இராவ் சாகிப்’ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். தஞ்சை மக்கள் ஆபிரகாமின் மருத்துவத் தொண்டைப் பாராட்டி ‘பண்டிதர்’ எனும் சிறப்புடன் அழைத்தனர்.
தமிழிசையை மீட்டெடுக்க 1910ஆம் ஆண்டு முதல் 1914ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தஞ்சையில் ஏழு தமிழிசை மாநாடுகளை நடத்தினார்.
சமஸ்கிருத ஆதிக்கத்தால் அழிக்கப்பட்ட தமிழிசை தான், கருநாடக இசையாகத் திரிந்து வந்துள்ளது என்பதை பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்தவர் ஆபிரகாம் பண்டிதர். தனது ஆராய்ச்சிகளை தொகுத்து “கர்ணாமிர்த சாகரம்” எனும் 1400 பக்கங்கள் கொண்ட நூலை 1917-இல் வெளியிட்டார் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை தொடர்பான ஆய்வுகளுக்கு இந்த நூல் ஒரு கலைக்களஞ்சியமாக விளங்கி வருகிறது. தமிழிசை குறித்து ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாது, நாதஸ்வரம், வீணை, ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பதில் வித்தகராகத் திகழ்ந்தார்.
தமிழிசையில் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்ற நான்கு இசைமுறைகள் இருந்தன என்பதை வகைப்படுத்தி சூத்திரங்களின் ஆதாரத்தோடு முதன்முதலாக நிலை நிறுத்திய பெருமை தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்களையே சாரும்.
தமிழிசைக்குத் தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 31, 1919-இல் காலமானார்.
அவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்!
lll
E கவர்னரும், வைஸ்ராயும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக அழைத்தும் தந்தை பெரியார் அவர்கள் அதனை ஏற்க மறுத்த நாள் இன்று (31-08-1942).
lll
E சுயமரியாதைத் திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நாள் இன்று
(31-08-1953). அதன் பிறகு அறிஞர் அண்ணா தலை மையில் தமிழ்நாடு அரசே சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது வரலாறாகும்.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
