காஞ்சிபுரம், ஆக. 30– நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு சென்னை திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ‘சுனாமி போல் வந்த வெள்ளத்தில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடினோம்’ என தாங்கள் உயிர் தப்பிய அனுபவத்தை உருக்கமாக தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத் தூரை சேர்ந்த சத்யா கூறியதாவது:- கைலாஷ் பயணத்திற்காக சென்னை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 57 பேர் சென்றிருந்தோம். ‘புனித’ப் பயணமாக சென்ற நாங்கள் சீனாவில் இருந்தபோது நிகழ்வன்று காலை 8 மணியளவில் சோதனை நடைபெற்றது. நாங்கள் 3 பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்தோம். பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏதோ புழுதி கிளம்புவது போல் தெரிந்தது. அதை நாங்கள் கைத்தொலைபேசியில் காட்சிப் பதிவு எடுத்துக்கொண்டிருந்தோம். ஆனால், சிறிது நேரத்தில் அது சுனாமி போல் பிரமாண்டமாக எழுந்து வந்தது. அதன் தாக்கம் எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை. நாங்கள் சாதாரணமாகத்தான் இருந்தோம். வெள்ளம் வேகமாக வருவதை பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் ஓட ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் நாங்களும் பேருந்தில் இருந்து இறங்கி உயிரைக் காப்பாற்ற ஓடினோம்.
நேபாளத்தில் எங்களை மீட்புக்குழுவினர் மீட்டு உதவி செய்தனர். சுமார் 3 மணி நேரம் மரங்களை பிடித்தபடியே நடந்து சென்றோம். அந்த நேரத்தில் எங்களது கைகள் முழுவதும் முட்கள் குத்தி காயமடைந்தன. தமிழ்நாடு அரசு எங்களுக்கு அளித்த உதவி மிகப்பெரியது. தமிழ்நாடு அரசு எங் களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்து எங்களுக்கு உதவி செய்துள்ளது. இவ்வாறு சத்யா கூறினார்.
