மேட்டூர் அணை திறக்க விவசாயிகள் எதிர்ப்பு நீர்மட்டம் 100 அடியை எட்டும் வரை காத்திருக்க வலியுறுத்தல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவாரூர்/தஞ்சாவூர், ஆக. 30– மேட்டூர் அணையில் இருந்து 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்கிற அறிவிப்பால் பின்னாளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகே திறக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கை:

டெல்டா பாசனத்துக்காக 1.9.2026 அன்று முதல் 45 நாள்களுக்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 90 அடியாகத் தான் உள்ளது. இதனால், அணையில் இருந்து 40 முதல் 50 நாள்கள் வரை மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இது சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது.

எனவே, அணைக்கு நீர்வரத்தும் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கனஅடி வரை இருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகோ அல்லது 10.9.2026க்குப் பிறகோ பாசனத்துக்காக தண்ணீர் திறந்தால்தான் ஒரு போக சம்பா சாகுபடியை விவசாயிகள் முழு மையாக செய்ய முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதேபோல், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அணை திறப்புக்கு முன்னதாக வேளாண்மை துறை, நீர்பாசனத் துறை அதிகாரிகள், விவசாயிகள் கொண்ட முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், 1.9.2026 அன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்ப்பாசனத் துறை அறிவித்திருப்பது விவசாயிகளை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.

மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே, பாசனத் துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இல்லை என்றால் பிற்பகுதியில் கதிர் வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மிகப்பெரிய பேரழிவை சந்திக்க வேண்டிவரும். மேலும், மேட்டூர் அணையிலிருந்து 45 நாள்களுக்கு, அதாவது 15.10.2026 வரை தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிட்டது சட்டத் துக்கு புறம்பானதாகும். இதுபோன்ற அறிவிப்பு, எதிர்காலத்தில் நமக்கான உரிமைகளை பெறுவதில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

இருக்கும் தண்ணீரை எப்படி பயன்படுத்தி எந்த வகையான பயிர்களை பயிரிடுவது என்பது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாட வேண்டும். நேரடி விதைப்பா அல்லது நடவா என்பது குறித்த தொழில்நுட்ப ஆலோசனையை வேளாண்மை துறை வழங்க வேண்டும். அதற்கான எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடாமல் தண்ணீர் திறப்பது பயனற்றதாகிவிடும்.

அமைச்சர்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் அதிகாரிகளாவது ஆலோசனைகளை வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் 1.9.2026 அன்று அணையை திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *