பண்ணுருட்டி புதுப்பேட்டையில் 3.2.1945 அன்று 80 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆற்காடு மாவட்ட திராவிட மாணவர் கழக மாநாடு வெகு சிறப்போடு நடைபெற்றதை அற்றை நாள் குடிஅரசு ஏடு (17.2.1945) படிப்போர் கண் முன் மாநாட்டின் மொத்த காட்சியையும் நிறுத்தியது.
திறந்தவெளி மாநாடு
அதே புதுப்பேட்டையில் இன்று (30.8.2026) திராவிடர் கழகத்தின் சார்பில் திறந்தவெளி மாநாடு. அன்றைய நாளில் (3.2.1945) ஒரு சில இடங்களில் எரிமலையாய் எதிர்ப்பு. மற்ற சில இடங்களில் தேன் மழையாய் வரவேற்று சிறப்பு.
வாழ்த்தொலி வரவேற்பு
புதுப்பேட்டை மாநாட்டுக்கு தலைவர்கள் இரயில் மூலம் பயணித்து 2.2.1945 இரவே பண்ணுருட்டி இரயில் வண்டி நிலையத்தில் இறங்கினார்கள். வாழ்த்து முழக்கங்கள் விண்ணைப் பிளக்க தலைவர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பன்னீர்செல்வம் பந்தல்
மறுநாள் காலை 3.2.1945 காலை 9 மணிக்கு மாநாட்டில் கலநது கொள்ளும் பெருமக்கள் அனைவரும் காரில் ஏற்றப்பட்டு மாநாட்டுப் பந்தலுக்கு வாழ்த்தொலி முழங்க அழைத்துச் செல்லப்பட்டனர். “பன்னீர்செல்வம் நினைவு மாநாட்டுப் பந்தல்” முழுவதும் பல்வேறு அளவுகளில் தைக்கப்பட்டு பறந்து கொண்டிருந்த கழகக் கொடிகளின் காடாகக் காட்சி அளித்தது.
காலை 10 மணிக்கு ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் மாநாடு தொடங்கியது. தலைமை உரைக்குப் பின், கோ.சி.பெரியசாமிப் புலவர், பெரியார் ஈ.வெ.இராமசாமி ஆகியோர் உரையாற்றினர். தொடக்கத்தில் அன்பழகன், சித்தையன், போளூர் சுப்ரமணியன், தில்லை புலவர் நா.மு.மாணிக்கம், நன்னன் ஆகியோர் பேசினர்.
மாணவர் உரையரங்கம்
பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணியிலிருந்து மாநாடு தொடங்கியது. மாணவர்கள் மதியழகன், தவமணிராசன், இப்ராகிம், இளஞ்செழியன், சனார்த்தனம், வீரமணி ஆகியோர் பேசினர். பின் தீர்மான அரங்கம், தீர்மான உரை அரங்கத்தின் பின் இசை நிகழ்ச்சி, பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிறைவு உரையரங்கம்
மாநாட்டு நிறைவுப் பேச்சரங்கம் 7.30 மணிக்கு தொடங்கியது. பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் விழுப்புரம் வகாப், தளபதி அண்ணாதுரை, அன்பழகன் ஆகியோர் அரிய சொற்பொழிவாற்றினார்கள். ஆ.திராடமணி நன்றி கூற மாநாடு இனிதே நிறைவடைந்தது.
புதுப்பேட்டை மாநாட்டுப் புதுமை
சேலத்தில் 1944இல் திராவிடர் கழகம் என்று பெயரிடப்பட்டது. தந்தை பெரியார் வடித்திட்ட தீர்மானத்தை, தளபதி அண்ணா படித்திட்டார். ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்று இன்றும் புகழப்படுகிறது. அத்தீர்மானம் ‘திராவிடர் கழகம்’ எனும் பெயர் மாற்றத் தீர்மானம்.
1944ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுவதற்கு முன்பே திராவிட மாணவர் கழகம் உருவாகிவிட்டது என்பது வியக்க வைக்கும வரலாற்றுச் சிறப்பாகும்.
புதுப்பேட்டை திராவிட மாணவர் கழக மாநாட்டில் தலைவர் பெரியார், தளபதி அண்ணா மற்றும் முன்னணித் தலைவர்கள் பலர் பேசுகிறார்கள். மாநாட்டுப் பந்தலுக்கு சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பெயரில் நினைவுப் பந்தல். ஒரு நாள் மாநாடு. ஆயிரக்கணக்கான மக்கள், மாணவர்கள் என கூடியிருந்த மாநாட்டில் உரையாற்றியவர்களில் ஒருவர் மட்டும் “குமாரப்பருவம்” எனும் பருவத்தை தொடாத 11 வயதே நிரம்பிய நிலையில் இருந்த சிறுவர்.
அவர்தான் இன்றைய தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு டாக்டர் கி.வீரமணி அவர்கள். இன்னும் சொல்லப்போனால் உயரம் குறைவாக இருந்தவர்களில் அவரும் ஒருவர்!
அன்று 12 வயதினை தொடவேண்டிய பருவத்தில் அந்த உருவம் – தோற்றம் எப்படி இருந்திருக்கும். பருவ வயது (Teen Age) தொடங்கும் முன்பே ஈரோட்டுப் பெரியாரின் கையைத் தொட்டவர். தத்துவத்தைத் தொடங்கி அன்று முதல் இன்று வரை அதை விட்டவராய்ப் போகாது, சாகும் வரை பெரியாரைப் பற்றி, அவர் போட்டுத்தந்த பாதையில் அணிவகுப்பேன் – இறுதி மூச்சை பெரியார் பெயர் சொல்லியே முடிப்பேன் எனக் களமாடும் ஒரு தலைவரை காணும் வாய்ப்பு அரிதன்றோ? அந்தத் தலைவர் காலத்தில் வாழ்கிறோம் என்பதே நமக்கு தனிச் சிறப்பன்றோ?
இன்று 30.8.2026 மாலை அதே புதுப்பேட்டையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு 12 வயதினை எட்டும் நிலையில் அன்று உரையாற்றிய சிறுவன் வீரமணி இன்று நடக்கும் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியாக – நிறைவுரை – சிறப்புரையை ஆற்றுகிறார். அன்றைய மாநாட்டில் மிகக்குறைந்த வயதில் பேசினார். இன்றைய புதுப்பேட்டை மாநாட்டில் 93 வயதை எட்டிப்பிடிக்கும் வயதில் பேசுகிறார். ஆம் இன்று இரவு நினைத்தால் இனிக்கும் நினைவலைகளோடு, கடலூர் கடல் அலைபோல் கொந்தளிக்காது – ஈரோட்டு அறிவுக்கடலின் ஆழ்கடலாக, அய்யா பணி முடிக்கும் கலங்கரை விளக்காக கருத்துரை ஆற்றுகிறார்.
கடலூரில் பிறந்திட்ட – பெரியாரின் கரம்பிடித்த – கருத்துக் கடலாய் பெரியாரில் கருங்கடலாய் வழி நடத்தும் – கருத்துக் கேட்கும் வாய்ப்பை இழக்கலாமா? புதுப்பேட்டை மாநாட்டில் சந்திப்பாம் – புதுப்பொலிவோடு அணிவகுப்போம்.
– அதிரடி க.அன்பழகன்
