கருநாடகத்தில் சாகித்திய அகாடமி விருது பெற்றவரான மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கி, மூட நம்பிக்கைகளுக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வந்தவர்.
கலாச்சாரம் என்ற பெயரில் ஊறிப்போன பல பழக்க வழக்கங்களைக் குறித்து கடுமையாகத் தொடர்ந்து எதிர்வினையாற்றினார். குறிப்பாகக் காலில் விழுவதை கடுமையாக எதிர்த்தார். பொட்டு வைப்பது, முக்காடு போடுவது, நல்லநேரம் பார்ப்பது என பல செயல்களை கண்டித்ததால் கல்புர்கியைக் கொல்லப்போவதாக இந்து அமைப்பின் தலைவர் 2013 ஆம் ஆண்டு மிரட்டல் விடுத்தார்.
2014 ஜூன் முதல் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அந்தப் பாதுகாப்பு வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்னால் அவர் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்து, காவல் துறைப் பாதுகாப்பை விலக்கிவிட்டார். பொதுத்தளத்தில் விமர்சனங்களை முன் வைப்பவர்களுக்கு இவை இரண்டுமே பழக்கப்பட்டவை என்பதால், கல்புர்கி இத்தகைய மிரட்டல்களையெல்லாம் ஒருநாளும் தீவிரமாக எடுத்துக் கொண்டதில்லை.
பகுத்தறிவு எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் 2013 இலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே 2015 இலும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கல்புர்கியின் கொலை அதே போல் நடத்தப் பெற்றது. அதன் பிறகு கவுரிலங்கேஷ். இந்த நான்கு படுகொலைகளிலும் கொலைகாரர்கள் இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வெகு அருகில் இருந்து கொலை செய்திருக்கின்றனர். முதல் கொலை நடந்தவுடனேயே தீவிரமாகத் துப்புத் துலக்கி கொலையாளிகளையும், அவர்களை ஏவிவிட்ட சதிகாரர்களையும் பிடித்துத் தண்டித்திருந்தால், இது தொடர்கதையாக மாறியிருக்காது.
ஆனால், ஸநாதன் சன்ஸ்தா என்ற அமைப்பு இத்தகைய தொடர் கொலைகளுடன் தொடர்புடையதாக இருந்தும் அதன்மீது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பின்னர் நடந்த மூன்று கொலைகளும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. அதன் பின்னரும் பலருக்கு இத்தகைய கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
