அடாத மழையிலும் விடாமல் ‘எதிர் நீச்சலில் வென்ற பெரியாரின்’ வெற்றி வரலாற்றை எடுத்துரைத்த கழகத் தலைவர்!

9 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார்மீது கடலூரில் பாம்பைப் போட்டதற்காகப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தோம்!
செருப்பை வீசியதற்காகப் பெரியாருக்குச் சிலை வைத்தோம்!
1945இல் புதுச்சேரியில் திராவிடர் கழகத் தொடக்க மாநாட்டில் கலவரம் செய்தனர்!

புதுச்சேரி. ஆகஸ்ட், 30 எதிர்நீச்சலில் வென்ற பெரியார் என்பது சாதாரணமான எதிர்ப்பு அன்று. முட்டைக்குள் மனித மலத்தை நிரப்பி பெரியார் மீது வீசப்பட்டது. அவர் கொஞ்சம் கூட அருவருப்படையாமல் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து அதை மூடிக்கொண்டு, ”நாம் ஏன் சூத்திரனாக இருக்கணும்? நாம் ஏன் படிக்கக்கூடாது? நாம ஏன் கோயிலுக்குள் போகக்கூடாது” என்றும், தன் மீது விழுந்த ஒரு செருப்பை வைத்துக்கொண்டு இன்னொரு செருப்புக்காக திரும்பிச்சென்று அந்த செருப்பையும் கைப்பற்றியவர் என்றும், புதுச்சேரியில் கலைஞர் கடுமையாகத் தாக்கியது அவருடைய சட்டைப் பையில் அவர் வைத்திருந்த பெரியார் பேட்ஜுக்காகத்தான். இதையெல்லாம் தாண்டித்தான் இந்த இயக்கம் இன்று வளர்ந்திருக்கிறது என்றும், பெரியார் எப்படிப்பட்ட எதிர்நீச்சல் அடித்திருக்கிறார்? அதில் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார்? என்பதைச் சுட்டிக்காட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் கடும் மழையிலும் உரையாற்றினார்.

திறந்தவெளி மாநாடு

புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பாகூர் புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை சார்பில், ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’ திராவிடர் கழக திறந்தவெளி மாநாடு, 29.08.2026 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு புதுச்சேரி பாகூரில் உள்ள மணிக்கூண்டு எதிரில் நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளி புதுவை மு.ந.நடராசன் நினைவாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங்கி உரையாற்றினார். புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறைத் தலைவர் பொ.தாமோதரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். புதுச்சேரி மாவட்டச் செயலாளர் ராசா கூட்டத்தின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து சிறப்பித்தார். பாகூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில்குமார், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தி.மு.க. தொகுதிச் செயலாளர் பாண்டு அரிகிருஷ்ணன், தி.மு.க. விவசாய அணித்தலைவர் பாஸ்கர் (எ) ஆனந்தன், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் கோதண்டபாணி, பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றத் துணை பொதுச்செயலாளர் இளவரசி சங்கர், மாவட்டக் காப்பாளர் இராசு, பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். அப்போது மழை பெய்யத் தொடங்கியது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு…

அவர் தமது உரையில், “50 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கே பேச வந்திருக்கிறேன்” . என்று கூறியதும், வியப்படைந்த மக்கள் கைதட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து, “எப்படி நமது உள்ளங்கள் குளிர்ந்திருக்கிறதோ அதுபோல பூமியும் குளிர்ந்திருக்கிறது” என்று மழை பெய்வதைச் சுட்டிக்காட்டியும், “அப்படியே பெய்தாலும் அது விவசாயிகளுக்கு நன்மைதான். மழை வந்தாலும் நான் பேசுவதை பேசி முடிக்கக் தான் போகிறேன்” என்று கூறினார்.  மேலும் அவர், “பாகூருக்கு பல பெருமைகள் உண்டு. அதில் ஒன்று கவிஞர் வாணிதாசன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்” வாக்கியத்தை முடிப்பதற்குள், முற்றிலும் மறந்து போயிருக்கும் ஒரு பெயரை, அதுவும் அந்தப்பகுதியில் வாழ்ந்த கவிஞரை நினைவூட்டியதும், மக்கள் வியப்படைந்து கைதட்டினர். ஆசிரியர் தொடர்ந்தார். “எப்படி புரட்சிக்கவிஞர் ஒரு கவிதைப் பாரம்பரியத்தை உருவாக்கினாரோ… அது போலத் தான் கவிஞர் வாணிதாசனும் உருவாக்கினார். அவர்களுடன் இதே மண்ணில் நானும் பேசியிருக்கிறேன். இன்னொரு பெருமை, தேர்தலில் எதோதோ அலையடித்தது என்றெல்லாம் சொல்கிறார்கள். அதையும் தாண்டி, செந்தில்குமார் போன்ற அறிவார்ந்தவரை நீங்கள் இங்கே  தி.மு.க.சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்திருக்கிறீர்கள். அது பெருமைக்குரியது” என்று, பக்கத்தில் அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்  செந்தில்குமார் அவர்களைச் சுட்டிக்காட்டி பெருமிதப்பட்டார்.

தொடர்ந்து, 1934 இல் தந்தை பெரியார் கடலூருக்கு வந்ததையும், ஒரு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசியதையும், அன்றைக்கு சுயமரியாதைத் திருமணம் என்பது பெரிய அதிசயமான ஒன்றாக இருந்ததையும், அழைப்பிதழே இல்லாமல், புரோகிதர் இல்லாமல் திருமணமா? என்று வியந்து, அதைப்பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதையும், அந்தத் திருமணத்தில் பெரியார், ”ஏன் சமஸ்கிருதத்தில் நாம் திருமணத்தை நடத்தணும்? ஏன் தமிழில் நடத்தக் கூடாது. ஏன் ஆண் எஜமானன்? ஏன் பெண் அடிமை? இதை மாற்றுவ தற்குத்தான் சுயமரியாதைத் திருமணம்” என்று பேசியதையும் நினைவூட்டினார்.

90 ஆண்டுகளுக்குமுன் பெரியார் கூட்டம்

மேலும் அவர், “அந்தக்காலத்தில் காங்கிரஸ்காரர்களில் தான் பெரும்பாலும் ஸநாதனிகள் இருந்தார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, எதிர்ப்பில்லாமல் கூட்டம் நடந்ததே இல்லை. கல்லு வந்து விழுந்தால் பரவாயில்லை. அழுகிய முட்டை ஓட்டுக்குள், மனித மலத்தை நிரப்பி, பெரியாரை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, பெரியார் மீது வீசினார்கள். அவர் கவலைப்படவில்லை. சால்வையை எடுத்து அதை மூடியபடி, “ஏன் நாம சூத்திரனாக இருக்கணும்? ஏன் அடிமைகளாக இருக்கணும்? நாம் ஏன் படிக்கக்கூடாது? நாம் ஏன் கோயிலுக்குள்ேள போகக்கூடாது?” என்று நமக்காகத்தான் பேசினார். இது, ‘குடிஅரசு’ இதழில் பதிவாகி இருக்கிறது” என்று  அதற்கு ஆதாரத்தைக் காட்டி, திராவிடர் இயக்கம் நெருப்பாற்றில் நீந்தி வந்த வரலாற்றின் ஒரு துளியை எடுத்துக் காட்டினார்.

அதே வரலாற்றைத் தொடர்ந்தார். அதாவது, “கடலூரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, முத்தையா டாக்கீஸ் அருகில் மாலையில் நடைபெற்ற மாநாட்டில், இன்றைக்கு பெய்வது போலவே அன்றைக்கும் கடுமையான மழை. மக்கள் அனைவரும் ஒதுங்கி நின்றனர். அன்றைக்கு, கடலூரில் பீட்டர் என்று பி.ஏ. படித்த ஒருவர் இருந்தார். அவர் கலெக்டருக்கு அடுத்தபடியாக சிரஸ்தாராக இருந்தவர். அவருதான் தலைமை தாங்கினார். அதற்கு அடுத்த நாள் பெரியார் சென்னையில் நடக்கும் மாநாட்டுக்குப் போகவேண்டும். இப்போது இருக்கும் பாலம் தி.மு.க. ஆட்சியில் கலைஞர் இருந்தபோது கட்டப்பட்டது. நான் சொல்வது அன்றைக்கு இருந்த கெடிலம் நதிப்பாலம். அப்போது கார் கிடையாது. அய்யாவை திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்துக்கு, கை ரிக்சாவில்தான் அழைத்துச் செல்கிறோம்” என்று சொல்லிவிட்டு, “கலைஞர் வந்துதான் கை ரிக்சாவை ஒழித்து வரலாற்றை உண்டாக்கினார்” என்பதை மறக்காமல் நினைவூட்டினார்.

தொடர்ந்து,”நாங்கள் ரயில்வே நிலையத்துக்கு சென்றுவிட்டோம். ரயில் வருவதற்கு இன்னமும் அரைமணிநேரம் இருந்தது. ‘மழையிலும்; மக்கள் ஏதிர்ப்பிலும் நமது கருத்தை பேசியிருக்கிறோம்’ என்று பெரியார் சொன்னார். தொடர்ந்து, ‘நான் ஏன் ரிக்சாவை திருப்பச்சொன்னேன் தெரியுமா? என்று எங்களிடம் பெரியார் கேட்டார். “இடையில் தண்ணீர் பாம்பைப் போட்டுவிட்டார்கள். பாம்பு… பாம்பு… என்று சத்தம் கேட்டது. அதைத்தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது” என்று எங்கள் ஆசிரியர் திராவிடமணி சொன்னார். 11 வயது சின்னப் பிள்ளையான என்னைப் போன்றவர்கள் அய்யா பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அப்போதுதான் பெரியார் கைப்பெட்டியைத் திறந்து, ஒரு செருப்பைக் காட்டி, ‘வருகிற வழியில் என் மடிமீது ஒரு செருப்பு வந்து விழுந்தது. ஒரு செருப்பை வைத்துக்கொண்டு அவரும் ஒன்றும் செய்ய முடியாது. நானும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து ரிக்சாவைத் திருப்பச் சொன்னேன். நான் எதிர்பார்த்தது போலவே இரண்டாம் செருப்பும் வந்து விழுந்தது’ என்று இரண்டு செருப்புகளைக் காட்டியபடி சொன்னார். பின்னர் மக்கள் தங்கள் தவற்றை உணர்ந்துதான், அய்யா உங்கள் மீது பாம்பைப் போட்டோம். அதற்கு 10,000 ரூபாய் கொடுக்கிறோம். செருப்பு வீசிய இடத்தில் உங்களுக்கு சிலையொன்று வைக்கிறோம் என்று மாறி வந்தார்கள்” என்று, பெரியார் – எதிர்நீச்சலில் வெற்றி பெற்ற அரிய வரலாற்றைப் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். தொடர்ந்து, நாங்கள் எதைச் சொன்னாலும் ஆதாரத்தோடு தான் சொல்வோம் என்பதை மறுபடியும் எண்பிப்பதைப் போல, “1945 இல் இந்த செய்தி ‘குடிஅரசு’ இதழில் இருக்கிறது” என்பதை சுட்டிக்காட்டினார்.

‘அதோ போராண்டா வாத்தியார்’

அடுத்து, புதுச்சேரியில் கலைஞர் தாக்கப்பட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார். “இது புதுச்சேரியில் 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. மாலையில் மாநாடு நடைபெற்றது. பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தலைமை வகித்தார். சத்தியவாணி முத்து, பெருமாள் போன்றவர்கள் கலந்துகொண்டனர். பாரதிதாசன் படத்தை பாவலர் பாலசுந்தரம் திறந்துவைத்தார். சத்தியவாணி முத்து அம்பேத்கர் படத்தைத் திறந்துவைத்தார்” என்று கூறிவிட்டு, “முதன் முதலில் அம்பேத்கரை பெரியார் தான் அறிமுகம் செய்தார். திராவிடர் கழகமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இருக்கக்கூடிய இயக்கம்தான். 1936 இல் அம்பேத்கரின், ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்று அவரது உரையை புத்தகமாகப் போட்டவர் பெரியார்தான்” என்று கூறி விட்டு, “பாரதிதாசனை புகழக்கூடாது என்று அங்கே பிரச்சனை ஏற்பட்டது. அதற்காகத்தான் கலவரம் ஏற்பட்டது. அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் பார்ப்பனர். பிரெஞ்ச் ஆட்சியில் நடந்தது இது. அது உள்ளூர் பிரச்சினைக்காக நடைபெற்றது. காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முற்பட்டார்கள். புரட்சிக்கவிஞர் ரிக்சாவில் வீட்டுக்குப் போகிறார். சிலர், ‘அதோ போராண்டா வாத்தியார்’ என்று புரட்சிக்கவிஞரை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருந்தது. அதே காலகட்டத்தில் கலைஞர் நாடகம் நடத்திக்கொண்டிருந்தார். அதில் சுயமரியாதைக் கருத்துகளை புதுமையாக சொல்லிக்கொண்டிருந்தார். இதனால், காங்கிரஸ்காரர்களின் கோபமெல்லாம் கலைஞர் மீது திரும்பியது. கலைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டு, சாக்கடை ஓரமாக வீசப்பட்டார். இதைப்பற்றி கலைஞர் நெஞ்சுக்கு நீதியில், ‘என்னுடைய சட்டைப் பையில் இருந்த பெரியார் பேட்ஜை பறிப்பதற்காகத்தான் என்னைத் துரத்தினர்; தாக்கினர்’ என்று எழுதியிருக்கிறார். பெரியார், அண்ணா உள்பட பலரும் கலைஞரை தேடியிருக்கின்றனர்” என்று பழைய வரலாற்றை சுட்டிக்காட்டி விட்டு, நடப்புக்கு வந்து,

ஏன் எங்களைத் தாக்குகிறார்கள்?

“ஏன் எங்களைத் தாக்குகிறார்கள்? ஜாதி இல்லை என்று சொல்கிறோம்; எல்லாரும் சமம் என்று சொல்கிறோம்; அதற்காக போராடுகிறோம்” என்று சொல்லி விட்டு, “இப்போது யாருங்க ஜாதியெல்லாம் பார்க்கிறார்கள்? என்று புரியாமல் கேட்கிறார்கள்” என்று கூறியபடி, “காங்கிரசின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒரு மாதத்திற்கு முன்புதான், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பதற்காக அந்த இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கழுவினார்கள் ’’என்ற தகவலை சுட்டிக்காட்டி, “எங்கள் ரத்தம் கொதிக்கிறது. எங்களைப் போன்றவர்களைத் தவிர இதைக் கேட்பதற்கு நாதி உண்டா?”  என்று ஆத்திரம் பொங்கிக் கூறிவிட்டு, அடுத்து அம்பேத்கர் பிறந்த மண்ணில் கடந்த வாரம் நடந்த ஒரு அவலத்தைப் பற்றி கூறினார்.

அதாவது, “தாழ்த்தப்பட்ட சகோதரர் ஒருவரை மாட்டுச்சாணத்தை சாப்பிட வலியுறுத்தியிருக்கின்ற கொடுமையை எடுத்துரைத்துவிட்டு, “இது எங்கே நடந்தது? அம்பேத்கர் பிறந்த இடத்தில்? இதை தட்டிக்கேட்க இந்த இயக்கத்தை விட்டால் வேறு நாதியுண்டா?” என்று மறுபடியும், மறுபடியும் அந்தக் கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து, “இன்றைக்கும் திராவிடர் இயக்கத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பி, “திராவிடர் இயக்கம் ஆட்சிக்கு வந்தால் ஜாதியை ஒழித்துவிடும். எல்லோரையும் படிக்க வைத்துவிடும் என்பதால் தான்” என்று பதிலும் சொன்னார். தொடர்ந்து, “அதனால்தான் நீட் தேர்வு வந்தது? அதனால்தானே, EWS இடஒதுக்கீடு வந்தது? இதையெல்லாம், மக்களுக்காக எதிர்நீச்சல் அடித்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, உங்கள் பிள்ளைகள் படிப்பறிவு தவிர பகுத்தறிவு பெற வேண்டும். அப்போதுதான் நாம் வளர்ச்சி பெறமுடியும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இறுதியாக புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தமிழ்ச்செல்வன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், சக்திவேல், கு.இரஞ்சித் குமார், பா.குமரன், மு.குப்புசாமி, ச.சித்தார்த்தன், வீர.இளங்கோவன், அறிவுச்செல்வன், சிவகாமி, சிவராசன், பிரபஞ்சன், களஞ்சியம், வெங்கடேசன், ம.ந.ந.நல்லையன்  ஜெயந்தி, எஸ்.கிருஷ்ணசாமி, இரா.திருநாவுக்கரசு, மு.ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *