அயோத்தியில் உள்ள காவல் நிலையத்திற்குள் கையில வில்லு, தலையில் கிரீடம்! என சகிதம் ராமன் வரவே, காவலர் நக்கலாகப் பார்த்து, “ஓ இப்பொழுதெல்லாம் காவல் நிலையத்திற்குள்ளேயே பிச்சை எடுக்க வந்துவிட்டீர்களா?” என்று விரட்டினார். “யோவ் நான்தான்யா உண்மையான ராமன்” என்று கூறியும் நம்பவில்லை.
ராமன் ரெண்டு மூணு வித்தை காண்பித்தான். கைத்தட்டி சிரித்து சில்லறை போட்டார்கள். ராமன் பதறி அடிச்சு, “யோவ் நான் தான்யா உண்மையான ராமன்” என்ற உடன், “சரிதான், மனநோயாளி போல்” என்று சொல்லி, “மாத்திரை சாப்பிட்டாயா அல்லது தண்ணி போட்டிருக்கிறாயா?” என்றார்.
அப்போ உள்ளே வந்த அதிகாரி “என்ன பிரபோ… இந்த நேரத்துல திடீர்னு ‘தரிசனம் தந்து’ எங்களை ஆசீர்வதிக்க வந்திருக்கீங்களா?” என்று நக்கலாகக் கேட்டு, ராமனிடம் பேசிகொண்டு இருந்த காவலரைப் பார்த்து, “கண்ட கண்ட பிச்சைக்காரனை எல்லாம் உள்ளே உட்டு நம்ம டிபார்ட்மெண்டையே அசிங்கப்படுத்தி விட்டீர்களே!” என்று கோபமாகப் பேசினார்.
அங்கு நடப்பதைக் குழப்பத்தோடு பார்த்த ராமன் “என்னை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் கடைசியில் நானே நேரில் வந்ததும், என்னை பிச்சைக்காரன் என்கிறான் ஒருவன். மற்றோருவனோ போதை போட்டிருக்கிறாயா என்கிறான், ராமருக்கே சோதனையா?” என நொந்து கொண்டார்.
“சரி நான் புகார் கொடுக் கணும். அதாவது ராமன் புகார் கொடுக்கணும்.வீட்டுல திருட்டுப் போயிடுச்சு, எஃப்.அய்.ஆர் எழுதணும்!” என்றான் ராமன்.
எஸ்.அய்-க்கு ஒரே அதிர்ச்சி! “என்ன சாமி சொல்றீங்க? இந்த ஆட்சியிலதான் சட்டம்-ஒழுங்கு சீரான மாதிரி உலகத் தரத்துல இருக்கே! நீங்களே இப்படிச் சொன்னா எப்படி?”னு கேட்டாரு. அதுக்கு ராமர், “அட போய்யா… அந்த ‘சட்டம்-ஒழுங்கு லட்சணத்தைப் பத்தி நானும் டி.வி. விளம்பரத்துல மட்டும்தான்யா பார்த்திருக்கேன். கதை பேசுனது போதும், கம்ப்ளைண்ட்டைப் பதிவு பண்ணுப்பா” என்றார்.
எஸ்.அய். மெதுவா இழுத்தாரு: “அய்யோ சாமி… உங்க மேல எனக்கு அம்புட்டு பக்திதான். ஆனா, மேலிடத்துல இருந்து ஆர்டர் வராம உங்களை மாதிரி வி.அய்.பி-களுக்கு எல்லாம் எங்களால் எஃப்.அய்.ஆர் போட முடியாதுங்க!”
ராமனுக்கு கோபம் தாங்கல, “என்னய்யா சொல்ற? எனக்கு மேல இந்த நாட்டுல எவன்யா இருக்கான்?”னு கேட்டாரு.
எஸ்.அய். சிரிச்சுக்கிட்டே, “ஏன் சாமி உங்களுக்குத் தெரியாதா? ராமனையே இங்க கூட்டிட்டு வந்தவனுங்க நாங்கதான்டா’னு ஸ்பீக்கர் கட்டி பாட்டு போட்டு சுத்துறாங்களே… அந்த மேலிடத்து ஆளுங்களைத்தான் சொல்றேன்!” அப்படின்னாரு.
ராமன் தலையில கைய வெச்சுக்கிட்டு புலம்ப ஆரம்பிச்சிட்டாரு. “என்ன கொடுமைடா இது! என் பேரச் சொல்லி நாடு முழுக்க பிரச்சாரம் பண்ணானுங்க… என் பேரச் சொல்லி ஓட்டு கேட்டானுங்க… என் பேரச் சொல்லி ஆட்சியைப் புடிச்சானுங்க… என் பேரச் சொல்லி உண்டியல்ல வசூலையும் அள்ளுனானுங்க! கடைசியில என் வீட்டுல திருட்டுப் போனதுக்கு ஒரு கேஸ் கூட போட மாட்றானுங்களே!”
“சரி சரி கோபப்படாதீங்க சாமி, எவ்வளவு நகை போச்சு? எவ்வளவு பொன், பொருள், காசு பணம் கொள்ளை போச்சு? திருடன் எந்த வழியா வந்தான்? திருடன் வரும்போது நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க? சாட்சி யாராவது இருக்காங்களா?”னு அடுக்கடுக்கா 100 கேள்வியைக் கேட்டு சாவடிச்சாரு.
கடைசியில சாமிக்கு தலை சுத்திப் போச்சு… “வேண்டாம்யா சாமி! உங்கிட்ட கம்ப்ளைண்ட் குடுத்த என் புத்திய செருப்பால அடிச்சுக்கணும். பேசாம எனக்கு ஒரு இ-ரிக்ஷா ஆட்டோவை பிடிச்சுக் குடு, நான் அமைதியா என் அயோத்திப் பக்கமே போயிக்கிறேன்”னு சொல்லி அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டாரு!
