83-ஆம் ஆண்டில் திராவிடர் கழகம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

“தோழர்களே, நமது திராவிடர் கழகம் என்பது கட்சியல்ல; இயக்கமாகும். கட்சி என்பது தோல்விக்கும், வெற்றிக்கும் கட்டுப்பட்டது. இயக்கம் என்பது இவைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டதே அல்ல. ஒரு தனி மனிதனுடைய உள்ளத்தில் உணர்ச்சியிருக்கும் வரையில் அது இருந்துதான் தீரும்” என்றார் தந்தை பெரியார் (‘குடிஅரசு’ – 30.05.1947). இன்று (ஆகஸ்ட் 27) திராவிடர் கழகம் தொடங்கி 82 ஆண்டுகள் முடிந்து 83 ஆம் ஆண்டு தொடங்குகிறது. சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், அதன் பெயரையும், போக்கையும் மாற்றி திராவிடர் கழகம் ஆக்கினார் தந்தை பெரியார். அது தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் சமூகப் புரட்சி மைல்கல். தேர்தல் வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கவலைப்படும் அமைப்பாக அல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் மேன்மைக்காகப் பாடுபடும் இயக்கமாக, அவருடைய சொற்களிலேயே சொல்ல வேண்டுமானால், “சமுதாயப் புரட்சி இயக்கமாக”, “அறிவு விடுதலை இயக்கமாக” இதனை உருவாக்கினார்.

“மக்களுடைய ஆதரவுக்காக நாம் கவலைப்பட மாட்டோம். மக்கள் ஏற்றாலும் வைதாலும் கவலைப்படாமல் இருப்போம். நம்மைப் பொறுத்தவரையில், நம் பின்னாலே மக்கள் வரவேண்டுமே தவிர, பாமர மக்கள் பின்னாலே ஓடுவது இல்லை. கல்லடிபட்டாலும் சரி, வெற்றியடைந்தாலும் சரி, நமக்குப் பட்டதைச் சொல்லியே தீருவோம். அப்படி நாங்கள் எங்களுடைய பின்னாலேயே மக்கள் பின் தொடரவேண்டும் என்று வேலை செய்ததனாலேயே தான், இப்பொழுது எங்களுக்கு ஓரளவு வெற்றி கிடைத்து வருகிறது” என்ற அவரது தொலைநோக்குதான் இன்றைக்கும் வெற்றிகளை ஈட்டி வருகிறது.

தனியொரு மனிதராக அல்லாமல், தனி மனித ராணுவமாகப் போர்புரிந்தவர் தந்தை பெரியார்; அதன் வெற்றியைத் தன் காலத்திலேயே கண்ணாரக் கண்டவர். என்றாலும், தனக்குப் பிறகும் தன்னுடைய கொள்கைகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர் உருவாக்கிய இயக்கம், அந்தப் பாதையில் கொஞ்சமும் பிசகாமல் பயணித்துக் கொண்டே இருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த நாட்டின் மக்களுக்காக மட்டுமல்லாமல், உலக மக்கள் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் சுயமரியாதைக் கொள்கைகள் போய்ச் சேர வேண்டும், போய்ச் சேரும் என்ற பெரியாரின் முன்னோக்கும் பெருவிருப்பமும் இன்று திராவிடர் கழகத்தின் பணியால் நனவாகிக் கொண்டிருக்கிறது. பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியாருக்குப் பிறகு, தலைமைப் பொறுப்பேற்ற அன்னை மணியம்மையார் காலத்தில், இயக்கத்தை முடக்கிப் போட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் அன்றைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்துகொண்டு பார்ப்பனர்களும், இனத் துரோகிகளும் செய்த அத்தனை தடைகளையும், சூழ்ச்சிகளையும் துணிச்சலோடு தூள்தூளாக்கினார் அன்னையார். அவர் தலைமையேற்றது 51 மாதங்கள் தான் எனினும், இயக்க வரலாற்றில் உச்சபட்ச நெருக்கடியைச் சந்தித்த காலம் அது!

1944-ஆம் ஆண்டு இதே நாளில், திராவிடர் கழகம் உருவான சேலம் மாநாட்டில் 11 வயதுச் சிறுவனாக உரையாற்றியவர்; அதற்கு முன்பு, அது நீதிக்கட்சியாக இருந்த காலத்தில், 1943-ஆம் ஆண்டு முதலே, ஒரு கையில் தராசு பொறித்த செங்கொடியும், மறு கையில் புலி,வில், கயல் பொறித்த தமிழ்க் கொடியும் தாங்கி, 9 வயதுச் சிறுவனாகப் பேரணிகளில் முழங்கியவர். 9 வயது முதல் இயக்க மேடைகளில் ஏறியவர்; 27 வயதில் இயக்கத்தில் கூட்டுச் செயலாளராகப் பெரியாரால் நியமிக்கப்பட்டவர்; 29 வயதில் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர் பொறுப்புக்குத் தந்தை பெரியாரால் அமர்த்தப்பட்டவரான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, 1978-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொறுப்பேற்றார். எத்தனையோ சவால்கள், எண்ணற்ற போராட்டங்களில் வெல்கிறது; எவராலும் சாதிக்க முடியாத சரித்திரச் சாதனைகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது திராவிடர் கழகம். தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில், எவ்விதச் சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்று ஏற்றுக் கொண்ட உறுதி மொழியில் இருந்து வழுவாமல் வீறுநடை போடுகிறது.

திராவிடர் கழகத்திற்கு உள்ளே வரும் வழியும் (Way In) உண்டு, வெளியே செல்லும் வழியும் (Way Out) உண்டு என்பார் தந்தை பெரியார். இந்த இயக்கத்தின் கொள்கைகளில், நிலைப்பாடுகளில், அணுகுமுறைகளில் உடன்பாடு இருப்போர் உள்ளே வருவர்; அவர்களுக்குக் கருத்து மாறுபட்டாலோ, இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு மாறாக நடந்து கொண்டாலோ, தானாக அவர்களே வெளியேறும் வகையில் இந்த இயக்கத்தின் தன்மை உருவாகியிருக்கிறது. களைகள் தோன்றுவது இயற்கைதானே! அதைக் களைந்து பயிரைக் காக்கும் வேலைதானே ஓர் உழவரின் உயரிய பணி! திராவிடர் கழகம் என்ற களம் அப்படித்தான் பாதுகாக்கப்படுகிறது. இன்னும் சொன்னால், இது ஒரு நாற்றாங்கால்! இதில் சில நாற்றுகள் வேறு களங்களில் வளர்வதும் உண்டு. அதைக் கண்டு இயக்கம் மகிழ்ந்திருக்கிறது. சில நேரங்களில் நாற்றுகள் திருடப்படுவதும் உண்டு. அதைப் பற்றி ஒருபோதும் கலங்கியது இல்லை. அன்றாடம் இளைஞர்களை, மாணவர்களை உருவாக்கும் பணியில் தளராமல் பணியாற்றிக் கொண்டேயிருக்கிறது கழகம்!

இயக்கம் என்றால் இயங்கிக் கொண்டேயிருப்பது என்று எப்போதும் எடுத்துரைக்கும் தமிழர் தலைவர் அவர்கள், இயக்கத்திற்கு எல்லாக் காலத்திலும் இளமை ரத்தம் பாய்ச்சியிருக்கிறார்;  அடுத்தடுத்த தலைமுறைகளையும் அந்தப் பாதையில் உருவாக்கியிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக, இளைஞர்களும், மாணவர்களும், மகளிரும் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட “நீட் நுழைவுத் தேர்வு – உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு  ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி பரப்புரைப் பயணம்” இயக்கத்தின் இளமையை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. ‘ஆயிரம் இளைஞர்கள் போராட்டக் களத்திற்குத் தயாரா?’ என்றால் அதற்கும் அதிகமாகப் பட்டியலைக் குவிக்கின்றனர் தோழர்கள்! ஆதிக்கவாதிகளும், ஆரியச் சூழ்ச்சிகளும் முறியடிக்க முடியாத வலிமை மிகுந்த இயக்கமாக, இதன் பணி நாளும் நாளும் தொடர்கிறது!

அடிமைத்தனமும், மூடநம்பிக்கைகளும் ஒழியும் வரை தொடரும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *