சென்னை, ஆக. 27–- தமிழ்நாட்டில் 1,558 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று (26.8.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் எச்-1என்-1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் அச்சப்படும் அளவுக்கு அதிகமாக இல்லை. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இந்தக்ாய்ச்சலால் 1,288 பேர் பாதிக்கப் பட்டனர். இந்த ஆண்டு 1,558 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இதுகுறித்து பயப்பட தேவையில்லை. செயற்கை கருத்தரித்தல் மய்யம் பல்வேறு மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கான கீமோதெரபி மருந்துகளின் தட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலம் தொடங்குவதால் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் கொசு ஒழிப்பு பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு 25 ஆயிரமாக இருந்தது. 12 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், இந்த ஆண்டு பாதிப்பு பாதியாகக் குறைந்துள்ளது. மேலும், உயிரி ழப்பு 4 ஆக குறைந்தது. அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு மருத்துவ உள்ளொதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பன்றிக்காய்ச்சல் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் இந்த காய்ச்சல் தொடர்பாக அச்சப்பட தேவையில்லை. மருத்துவர்களின் ஆலோசனை இன்றி மருந்துகள் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.
