க.ராசாராம் நூற்றாண்டு விழாவில், ஒளிப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

12 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தந்தை பெரியாரின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல!
க.ராசாராம் அவர்களுக்குத் தெரியாத தலைவர்களே கிடையாது; அவரைத் தெரியாத தலைவர்களே கிடையாது!
எங்களிடையே நிகழ்ந்தது – பண்பு சார்ந்த நட்பாகும்!

சென்னை, ஆக.27  தந்தை பெரியாரின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல! க.ராசாராம் அவர்களுக்குத் தெரியாத தலைவர்களே கிடையாது; அவரைத் தெரியாத தலைவர்களே கிடையாது. எங்களிடையே நிகழ்ந்தது – பண்பு சார்ந்த நட்பாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

க.ராசாராம் நூற்றாண்டு விழாவில் ஒளிப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை!

நேற்று (26.8.2026) மாலை  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற க.ராசாராம் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், க.ராசாராம் அவர்கள் குறித்த ஒளிப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மிகுந்த பெருமையோடும், சிறப்போடும், தமிழ்நாட்டிலே, ஏன் இந்தியத் திருநாட்டில் என்று கூட சொல்லலாம், அப்படிப்பட்ட வகையில் இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய பலரையும் அறிந்தவர், பலருக்கும் அறிமுகமானவர் என்ற பெருமையோடுத் திகழ்பவரை இன்றைக்கு ஒருவரை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும், பொது வாழ்க்கையிலே, குறிப்பாக அரசியலிலே என்று சொன்னால், அத்தகைய பெருமைக்குரிய நூற்றாண்டு விழா நாயகராக இன்றைக்கு நாம் அனைவரும் போற்றிப் பாராட்டி,  அவருடைய நினைவுகளைப் போற்றி, அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தக்கூடிய அந்த வாய்ப்பை தந்திருக்கக்கூடியவர்தான் இந்த சிறப்பான
நூற்றாண்டு விழா நாயகர் அய்யா அருமைத் திரு. ராசாராம் அவர்கள்.

அனைவராலும்
நேசிக்கப்படக்கூடிய ஒருவர்!

அவர் இறுதிவரையிலே அரசியலிலே இருந்தார் என்று சொன்னாலும், அதனைக் கடந்து அனைவராலும் நேசிக்கப்படக்கூடிய ஒருவராக, இந்தியாவிலே அவர் கருதப்பட்டவர். தமிழ்நாட்டில் தனிச் சிறப்போடு இருக்கக்கூடியவர். என்றைக்கும் அவர் மறையவில்லை, நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கிறார் என்ற பெரு மையோடு நடைபெறக்கூடிய இந்த நூற்றாண்டு விழாவில், நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ. மனோகரன் அவர்களே, இந்த நிகழ்ச்சிக்கு விழாக்குழுத் தலைவராக, பொதுவாக இருக்கக்கூடிய ஒரு மாமனிதர்  வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினுடைய ஒப்பற்றத் தலைவராக இருக்கக்கூடிய நம்முடைய  அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் பெருமைக்குரிய வேந்தர் திரு.கோ.விசுவநாதன் அவர்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பாக இங்கே அடுத்து படத்தைத் திறந்துவைக்க இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய சிறப்புமிகு மாண்புமிகு பேரவைத் தலைவராக இருக்கக்கூடிய பெருமைக்குரிய அருமை திரு.ஜே.சி.டி.பிரபாகரன் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்பாக இங்கே  வாழ்த்துரை வழங்க இருக்கக்கூடிய  வருவாய்த் துறை அமைச்சர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களே, நூற்றாண்டைத் தாண்டி,  நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இதே மேடையிலே சென்ற ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கண்டது மட்டுமல்ல, இன்னொரு நூற்றாண்டுக்கும் நான் இருந்து வாழ்த்துவேன் என்று சொல்லக்கூடிய பெரு மைக்குரிய திராவிட இயக்கத்தினுடைய மூத்த முன்னோடிகளிலே ஒருவரான அன்பிற்குரிய அய்யா விவிஎஸ் என்று அழைக்கப்படக்கூடிய வி.வி.சாமிநாதன் அவர்களே,

நூற்றாண்டைக் கண்டவர்களும்,
நூற்றாண்டைக் காண இருக்கிறவர்களும்…

கட்சிகள் ஒரு பக்கம் இருக்கலாம், அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பொதுவாழ்க்கையிலே எல்லோருடைய நட்பு, எல்லோருடையும் கவனம், எல்லோருக்கும் உரிய மரியாதை, இவை அத்தனையும் தரக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர்தான் பெருமைக்குரிய டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்கள். அவரும், நூற்றாண்டைக் கண்டவர்களும், நூற்றாண்டைக் காண இருக்கிறவர்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்த நூற்றாண்டு விழாவிலே கலந்து கொள்ளக்கூடிய அற்புதமான பெரியதொரு காட்சி இங்கே அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றாக  நாங்கள் பாராட்டுவோம்!

இங்கே காந்தன் சொன்னதைப் போல, இது ஒரு வித்தியாசமான ஒரு விழா. இன்றைக்கு நிலவக் கூடிய அரசியல் நெடியில், அதே நேரத்தில், அரசியல் வாடை இல்லாமல்,  கொடைக்கானலில் குளுகுளு இருக்கிற மாதிரி, குற்றாலத்தில் குளிக்கிற மாதிரி, மிக அழகாக இங்கே அத்தனைத் தலைவர்களும், தங்களுடைய கட்சி அடையாளத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பொது வாழ்க்கையில் யார் சிறந்தார்களோ, அவர்களுக்கு நூற்றாண்டு விழா என்றால். தமிழ்நாட்டில் உள்ள வர்கள் எல்லோரும் ஒன்றாக  நாங்கள் பாராட்டு வோம், பெருமைப்படுத்துவோம் என்ற அந்தக் கடமையாற்றக்கூடிய  சிறப்போடு வந்திருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, அருமை நண்பர் அய்யா மூத்த அரசியல்வாதி, மேனாள் ஒன்றிய அமைச்சர் என்று சொல்வதை விட, எந்நாளும் பண்பாளரான அன்பிற்குரிய திரு. ஜி.கே.வாசன் அவர்களே,

அனைவரிடமும் நன்கு பழகக்கூடியவருமான
கெழுதகை நண்பர்!

அதேபோல ஒரு நீதியரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக என்னென்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கிற எங்கள் பெருமைக்குரிய நீதியரசர் ஜஸ்டிஸ் ஜெகதீசன் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற மேனாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய அருமைச் சகோதரர்  எஸ்.திருநாவுக்கரசு அவர்களே, அருமைத் திரு. நல்லியார் அவர்களே, என்றைக்கும் பெருமைக்குரியச் சிறப்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதேபோல அனைவரிடமும் நன்கு பழகக்கூடியவருமான கெழுதகை நண்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களிலே ஒருவரான டி.கே.ரங்கராஜன் அவர்களே, அதுபோலவே திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயலாளரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அருமைச் சகோதரர் மதிப்பிற்குரிய மானமிகு ஆர்.எஸ்.பாரதி அவர்களே. இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற அனைவருக்கும் வணக்கம்.

க.ராசாராம் அவர்கள்
ஒரு கட்சிக்குச் சொந்தமல்ல!

இந்த நேரத்திலே ஒன்றைச் சொல்ல வேண்டும். முதற்கண் இப்படி ஒரு நிகழ்ச்சியை – நூற்றாண்டு விழாவை க.ராசாராம் அவர்களுக்கு எடுப்பதற்குப் பெரிய துணையாக இருந்தவர் பாராட்டுதலுக்குரிய ஒரு குழு இருக்கிறது; நம்முடைய வேந்தர் அவர்கள் அந்தக் குழுவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்று அவரே இவ்வளவு சிறப்பாக இதை நடத்துவதற்குக் காரணமாக இருக்கிறார்.  அதேபோல அவருடைய மகன் ராஜசேகர் அவர்கள்; ராசாராம் அவர்களுடைய மருமகள் சரோஜினி அவர்கள். இவர்கள் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், அப்பாவைப் பற்றி பிள்ளைக்கு இவ்வளவு அக்கறையா? என்றால், அவர் அனைவருக்கும் சேர்த்து நடத்துகிறார். காரணம், ராசாராம் அவர்கள் ஒரு கட்சிக்குச் சொந்தமல்ல; அவர் பல கட்சிகளுக்கும் சொந்தம். எல்லோரிடத்திலேயும் அதே உறவு என்பதுதான் முக்கியம். அந்த உறவு என்பது கூட உரிமையோடு இருக்கக்கூடிய உறவு. ‘‘என்னங்க’’ என்று உறவோடு பேசுவார் யாரிடத்திலும்.

பகுத்தறிவுப் பகலவன் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களிடத்தில் இருந்துதான் தொடங்கியது!

அது மட்டுமல்ல, தந்தை பெரியார் அவர்களிடத்திலே அவர் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பண்பாடு அது என்பதை  அவரே பதிவு செய்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு சிறப்பாக நடைபெறக்கூடிய இந்த விழாவிலே, கண்காட்சியைத் திறந்து வைப்பதற்கான வாய்ப்பை எனக்கு இங்கே தந்து, சிறப்பு செய்திருக்கிறார்கள். இது ஒரு கடமை என்று கருதுகிறோம். ஏனென்றால், அவருடைய பொது வாழ்க்கை பகுத்தறிவுப் பகலவன் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களிடத்தில் இருந்துதான் தொடங்கியது. அவருடைய  பொது வாழ்க்கையே சிறப்பானது.

அவருக்குத் தெரியாத தலைவர்களே கிடையாது; அவரைத் தெரியாத தலைவர்களே கிடையாது!

நான் நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு சில செய்திகளை சொல்கிறேன். முதல் சிறப்பு இந்த மேடை – இவ்வளவு தூரம் வேறு யாரும் இத்தனைக் கருத்துள்ளவர்கள் ஒன்று சேர மாட்டார்கள்; சேர்ந்தாலும், அது ஒரு விழாவாக இருக்காது. மிகப்பெரிய அளவுக்கு இந்த விழா மிகச் சிறப்பானதாகும். அப்படிப்பட்ட இந்த விழாவில், ஏ.சி.சண்முகம் அவர்கள் இருக்கிறார்கள்; ஒரு பக்கம் கல்வியாளர்கள், இன்னொரு பக்கத்திலே கட்சித் தலைவர்கள். எல்லாவற்றையும் தாண்டி ஒரு மாமனிதர் க.ராசாராம் அவர்கள். நூற்றாண்டு விழா நாயகராய் இருக்கிறார்; அவருடைய  பொது வாழ்க்கையில் எத்தனையோ செய்திகள். இன்னுங்கேட்டால் ஓர் அதிசய மனிதர் என்று சொல்ல வேண்டும் – அரசியல் உலகிலே! ஏனென்றால், அவருக்குத் தெரியாத தலைவர்களே கிடையாது. அவரைத் தெரியாத தலைவர்களே கிடையாது. இரண்டும் மிக முக்கியம். ஏனென்றால், சில பேருக்கு தலைவர்களைத் தெரிந்திருக்கும்; அவரைப் பல தலைவர்களுக்குத் தெரியாது. அதே போலத்தான் ஒவ்வொரு துறையிலும்; நம்முடைய அமிர்தலிங்கனார் ஈழத்ததமிழர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். அவருடைய திருமகனார் லண்டனில் இருக்கிற டாக்டர்  பகீரதன் அமிர்தலிங்கம் அவர்கள், இங்கே படித்து சிறப்பாக மிகப்பெரிய அளவுக்கு வாழ்கிறவர். இன்றைக்கு, இவ்விழாவிற்காக அவர் லண்டனிலிருந்து வந்திருக்கிறார்.

திராவிட இயக்கத்திலே தந்தை பெரியாரிடத்திலே இருந்து வந்த குடும்பம்!

மனோகரன் அவர்கள் அழகாக, சுருக்கமாகச் சொன்னார்கள். இது ஒரு குடும்ப விழாவாக இருக்கி றது. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம். இதுவே, ஒரு பல்கலைக் கழகம் போன்றதுதான். பல்கலைத் தலைவர்கள், பல சிந்தனையாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆகவே, இது ஓர் அற்புதமான  நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியிலே, பல கருத்துள்ளவர்கள் இருக்கிறோம்; ஒருவர் கொள்கையை, இன்னொருவர் ஏற்காதவர் இருக்கிறோம். அதுதான் மிக முக்கியம். ஆனாலும், மய்யப்புள்ளி க.ராசாராம். காரணம்  அவர் குடும்பமே திராவிட இயக்கத்திலே தந்தை பெரியாரிடத்திலே இருந்து வந்த குடும்பம். அத னால்தான் திராவிடர் கழகத்திற்கு முதன்மை இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தந்தை பெரியார் அவர்களிடத்திலே அவர்கள் கற்றுக்கொண்டது, பெற்றுக்கொண்டது என்பவை சாதாரணமானவை அல்ல. எங்களிடையே நிலவியது – பண்பு சார்ந்த நட்பு!

தந்தை பெரியாருடைய நம்பிக்கையை
கடைசி வரையிலே பெற்றவர்!

தந்தை பெரியார் அவர்கள், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பதைப் பதிவு செய்து, ஓர் அறக்கட்டளையாக்கினார். முதல் முறையாக, அந்த அறக்கட்டளையில், திரு.ராசாராம் அவர்களை இடம்பெறச் செய்தார். அது ஒன்றே போதும், பெரியாருடைய நம்பிக்கையைப் பெறுவது, அறிவாசானுடைய நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அந்த நம்பிக்கையை அவர் கடைசிவரையிலும், அவர் எந்த நிலை எடுத்தாலும், கடைசி வரையிலே அதைக் காப்பாற்றினார்கள். தந்தை பெரியார் அவர்கள்  பர்மாவிலே (இப்போது மியான்மா) – ரங்கூனில் நடக்கக்கூடிய  உலக புத்தக மாநாட்டிற்குச் சென்றபோது அங்கே டாக்டர் அம்பேத்கர் வந்திருந்தார்; பெரியாரையும் அழைத்திருந்தார்கள். இருவரும் சந்திக்கும் போது,  தந்தை பெரியாரோடு, அன்னை மணியம்மையாரோடு அங்கு உடன் இருந்த பெருமை ராசாராம் அவர்களுக்கு உண்டு.

தந்தை பெரியாரின் பர்மா பயணமும் –
ராசாராம் அவர்களின் விடாமுயற்சியும்!

ஒரே ஒரு நிகழ்வைச் சொல்லுகிறேன். அவர்  எதையும் துணிந்து சாதிப்பார். அவர் அருகில் இருந்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.  என்ன அந்த சம்பவம் என்று சொன்னால், பர்மாவிற்கு அம்பேத்கர் அழைப்பு, எல்லோரும் செல்வதற்குத் தயாராகிவிட்டார்கள். விசா வரவில்லை. திங்கள்கிழமைக்கு தந்தை பெரியார் அவர்கள் கப்பல் ஏற வேண்டும். நிகழ்வுக்குப் போய்ச் சேர வேண்டும். அதற்கு என்ன செய்வது? தந்தை பெரியாருக்கு அதுகுறித்தச் செய்தி, அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை. அவருடன் இருக்கிறவர்களாகிய நாங்கள்தான்  அதுபோன்ற பணியை மேற்கொண்டு செய்வோம். அப்போது, அன்னை மணியம்மையார் அவர்கள் ராசாராம் அவர்களைக் கூப்பிட்டு, ‘‘என்னப்பா, பயணம் இல்லையா?’’ என்று கேட்டார்.

முதலமைச்சர் காமராஜரின் முன்னெடுப்பு!

‘‘அதைப் பற்றிக் கவலைப்படாதீங்க. நான் பார்த்துக் கொள்கிறேன். கடைசி வரைக்கும் முயற்சி செய்யலாம். அதெல்லாம் திட்டப்படிச் செல்லலாம்’’ என்றார். அந்தத் தைரியம் இருக்கிறது பாருங்கள், அது எல்லா இடத்திலும் அவரிடத்தில் இருந்தது. அவர் தட்டாத கதவுகள் கிடையாது. அதற்குத் திறக்காத கதவுகளும் கிடையாது. இதுதான் ராசாராம். அவர் என்ன செய்தார் என்றால், அன்றைய  முதலமைச்சர் காமராஜர் இல்லம் இருக்கும் திருமலைப்பிள்ளை சாலைக்குச் சென்றார், ‘‘அய்யா,  பெரியார் அவர்கள்,  பர்மாவுக்குச்  செல்வதற்காக நாளை மறுநாள் கப்பல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.  ஆனால், இன்னும் விசா வரவில்லை’’ என்று அவரிடத்தில் சொன்னார். அன்றைக்கு சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்,  உடனே வேகமாக தனது அலுவலகத்திலிருந்து, அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் காமராஜரே பேசுகிறார். ‘‘அதற்கு உடனடியாக உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’’ என்றும், ‘‘ஒரு நாள், இரண்டு நாள்களுக்குள் விசா வர வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டார். உடனே அன்றைக்கு இரவே அதிகாரிகளை அழைத்து, அலுவலகத்தைத்  திறக்க வைத்து, ராசாராம் அவர்கள் விசாவை ஏற்பாடு செய்து விட்டார்.  ஆனால், அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால், முறைப்படி அதை வாங்க முடியாத
சிக்கல்.

உடனே என்ன செய்தார் ராசாராம் என்றால், அடுத்தபடியாக நேராக மீண்டும் முதலமைச்சர் காமராஜரைச் சந்திக்கச் சென்றார். அப்போது, முதலமைச்சர் காமராஜர் அவர்கள்,  ‘‘என்னய்யா விசா வந்ததா?’’ என்று  கேட்டார். அன்றைய முதலமைச்சரும் அவ்வளவு வேகமாக செய்யக்கூடிய முதலமைச்சர். ‘‘அய்யா விசா தயாராகிவிட்டது. ஆனால், நாளைக்கு காலை 8 மணிக்குக் கப்பலில் பயணம் செய்யவேண்டும். அதற்குள் ‘விசா’  கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.  காரணம், இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை; ஆகவே, விசா கையில் கிடைத்தால்தான் செல்வதற்கு வசதியாக இருக்கும்’’ என்றார் ராசாராம் அவர்கள்.

எந்தக் கப்பலில் செல்லவிருக்கிறார்’’ என்று கேட்டார் முதலமைச்சர் காமராஜர்.

‘‘ரஜூலா கப்பலில் போகிறார்’’ என்றார் ராசாராம்.

‘‘ஹாஜா ெஷரீப் தான் அந்தக் கப்பல் கம்பெனிக்கு மிக முக்கியமானவர். அவர்  காங்கிரஸ், சட்டமன்ற உறுப்பினர்,  உங்களுக்கும் தெரியும்’’ என்றார்.

உடனே முதலமைச்சர் காமராஜர் அவர்கள்,  ஹாஜா ெஷரிப்பைத் தொடர்புகொண்டு, ‘‘பெரியார்  கப்பலில் பயணம் செய்யவிருக்கிறார்.  இரண்டு மணி நேரம் தாமதமாக எடுங்கள் கப்பலை’’ என்று சொன்னார்.

இவ்வளவையும் யார் செய்து முடித்தார்கள் என்றால், இதோ படமாக மட்டுமல்ல, பாடமாக இருக்கக்கூடிய நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர்தான் இந்தச் சாதனையை செய்தவர்.

‘‘ஒரு சாமானியனின்
நினைவுகள்!’’

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நாயகர் அவர்கள், இந்தப் புத்தகத்தில் சிறப்பாக ஒன்றைச் சொல்கிறார்;  ஏனென்றால், பொது வாழ்க்கை என்பது மிக மிக முக்கியம். நாங்கள் எல்லாம் நீண்ட காலமாகப் பொது வாழ்க்கையில் இருக்கக்கூடியவர்கள்.  பொதுப் பண்பு வரவேண்டும். ஆகவே, ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும்; அவருடையப் படத்தை பார்க்கும்போது, வெறும் படத்திறப்பு மட்டுமல்ல, பாடம் பெற வேண்டும் நாம். அதற்கு ஒரு சிறப்பான வகை யிலே சொல்லுகிற போது, இங்கே ஒரு கருத்தைச் சொல்லுகிறார். அவர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்; ‘‘ஒரு சாமானியனின் நினைவுகள்’’ என்று. இந்தப் புத்தகம் பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கக்கூடியது. அந்தப் புத்தகத்திலே அவர்கள் சொல்லுகிறார்கள், எப்படி இருக்க வேண்டும் பொதுவாழ்க்கையில் இருக்கிறவர்கள் என்று சொல்லுகிற போது, தந்தை பெரியாரைச் சொல்லுகிறார்.

‘‘நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டவை மிக முக்கியமானவை; நான் அவரிடத்தில் கேட்டேன், அய்யா, பொதுவாழ்க்கையிலேயே கருத்து வேறுபாடு உள்ளவர்கள் எல்லாம் இருக்கிறார்களே;  இருந்தும்  பொதுவாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்?’’ என்று தந்தை பெரியாரிடத்தில் கேட்கிறார்.

பொதுவாழ்வுக்கு வருகிறவர்கள் எல்லோரும் கவ னிக்க வேண்டிய ஒரு பொதுப்பாடம்; அதற்காகத்தான் இந்த நிகழ்வை, இந்த நேரத்தைப் பயன்படுத்தி, இந்த அரங்கத்திற்குச் சொல்கிறேன், இது அறிவார்ந்த அரங்கம், அப்படிப்பட்ட இந்த அரங்கத்திற்குச் சொல்கிறேன்.

பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்குத்
தந்தை பெரியாரின் அறவுரை!

உடனே தந்தை பெரியார் அவருக்கு ஓர் அறிவுரை சொல்கிறார்; அது என்னவென்றால்  ‘‘பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் எவரும், தன் சொந்த வசதிக்கு மேல் வாழாமல், ஊரான் உழைப்பில் வாழும் சுகத்தை விரும்பாமல் இருக்க வேண்டும். பொதுவாக மற்றவர்கள் பார்த்து, பொறாமை கொள்ளும்படி வாழக்கூடாது’’ என்று சொல்லிவிட்டு, ‘‘என்னைப் பொறுத்தவரையில், நான் பாரத்தினால், மூட்டைத் தூக்குவதில் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒருபோதும் நான் ஒதுங்கி இருக்க மாட்டேன்’’ என்று அய்யா சொன்னதைச் சொல்லி, அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

இதுதான் பெரியாரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன் என்கிறார். அவர் கற்றுக் கொண்டதை நாம் கற்றுக் கொள்வோமாக!

இதுதான் மிக முக்கியமான செய்தி! அனைவருக்கும் வணக்கம்! நன்றி!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *