பீகாரில் தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பாட்னா, ஆக. 26- 70ஆவது பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் பாட்னாவில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மக்கள் மாளிகையை நோக்கி அவர்கள் நடத்திய பேரணியின்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் உருவானது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் டில்லியில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டம் காரணமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகினார்.

இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) சார்பில் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி நடத்திய போட்டித் தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, இரு அமைப்புகளும் நடத்திய 22 போட்டித் தேர்வுகளை ஜார்க்கண்ட் அரசு கடந்த 17ஆம் தேதி ரத்து செய்தது. பின்னர், அந்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், மற்றொரு மாணவர் போராட்டம் பீகாரில் நடைபெற்று வருகிறது. 70ஆவது பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் பாட்னாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

70ஆவது பிபிஎஸ்சி தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும், இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டும் மாணவர்கள், இந்த தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், பிபிஎஸ்சி ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் முறையை நீக்க வேண்டும், பிபிஎஸ்சி இடைநிலை தேர்வுகளுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், பாட்னாவின் காந்தி மைதானத்தில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாகச் சென்றனர். அவர்கள் ‘டாக் பங்களா’ சந்திப்பை அடைந்தபோது அவர்களில் பலரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க காவல் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.

எனினும், ‘டாக் பங்களா’ சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் பேரணியைக் கருத்தில் கொண்டு பாட்னா முழுவதும் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ‘டாக் பங்களா’ சந்திப்பு, வருமான வரி அலுவலகம் உள்ளிட்ட ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் வழியில் உள்ள முக்கிய இடங்களில் கூடுதல் காவலர்களும், அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

முன்னதாக, கல்விச் செயலாளர் மற்றும் பாட்னா மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், மாணவர் பிரதிநிதிகளுடன் 24.8.2026 அன்று பேச்சுவார்த்தை நடத்தினர். பல விவகாரங்களில் உடன்பாடு எட்டப் பட்டாலும், தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கும் முறையை நீக்குதல், ஒரே கட்டத் தேர்வை நடத்துதல் போன்ற கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *