‘ஆட்சி மொழிக் காவலர்’ கீ.இராமலிங்கனார் நினைவு நாள் இன்று (24.08.1986)
கீ. இராமலிங்கனார் எழுத்தாளர், மொழியியலாளர். ஆட்சி மொழியாகத் தமிழ் அரியாசனம் ஏற வேண்டும் என்ற முனைப்பில்
தமிழில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி செயற்கரிய பணி செய்தவர். தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் ‘ஆட்சி மொழிக் காவலர்’ என அழைக்கப்பட்டார்.
சென்னைக்கு அருகில் உள்ள கீழச்சேரியில் இரத்தின முதலியார் – பாக்கியத்தம்மாள் இணையருக்கு நவம்பர் 12, 1899 ஆம் ஆண்டு அன்று பிறந்தார். தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். சீயோன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும், வெஸ்லி கல்லூரியில் புதுமுகப் படிப்பும் முடித்தார். வெஸ்லி கல்லூரியில் பயின்றபோது திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ‘சைவப் பெரியார்’ சச்சிதானந்தம் பிள்ளை ஆகியோர் அவரது ஆசிரியர்களாக இருந்தனர். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் (பி.ஏ.) பட்டம் பெற்றார்.
படிப்புக்குப்பின் தமிழ்நாடு தலைமைச் செய லகத்தில் மேனிலை எழுத்தராக பணியாற்றினார். பின்பு, சார்-பதிவாளர், நகரவை ஆணையர், கல்லூரி முதல்வர், தொழிலாளர் நல அலுவலர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
ஆட்சிமொழிப்பணி
இந்திய விடுதலைக்குப்பின் தமிழ்நாட்டில் 1956 ஆம் ஆண்டுதான் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கீ. இராமலிங்கனார் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கி, அவ்வாறு தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை ஆட்சி சொல் என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, தான் சார்பதிவாளராகப் பணிபுரிந்த போது, மக்கள் தங்கள் சொத்துக்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கைமாற்றம் செய்யும் பத்திரங்களில் முழுவதுமாகத் தமிழிலேயே இடம் பெறத்தக்க வகையில் வழிமுறைகளைத் தெரிவித்து ஊக்குவித்தார். தமிழில் எழுதும் பத்திரங்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிவு செய்தார்.
சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடிநாயக்கனூர் முதலிய நகரங்களில் நகராட்சி ஆணையராகப் பணியாற்றியபோது, நகராட்சியின் தெருக்களுக்கு, ‘இளங்கோ தெரு’, ‘தொல்காப்பியர் தெரு’, ‘அப்பர் தெரு’, ‘கபிலர் தெரு’, ‘சிலப்பதிகாரத் தெரு’, ‘மணிமேகலை தெரு’ எனத் தூய தமிழில் தமிழிலக்கியங்கள் மற்றும் புலவர்கள் பெயர்களைச் சூட்டினார்.
நகரவைகளில் இயன்ற அளவு தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தினார் ‘நகராட்சி முறை’ எனும் நூலை 1954 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். சட்டத்துறை ஆட்சிமொழி ஆணை யத்திலும் கீ. இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார்.
ஆட்சிக்குரிய தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘தமிழ்நாடு’ நாளிதழில், அது வாரந்தோறும் வெளியிட்ட ஞாயிறு மலர்களில் தொடர்ந்து எழுதி வந்தார். ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் நூலை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார். ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
‘தமிழ் வளர்ச்சி இயக்கம்’ உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. கீழ்நீதி மன்றங்களில் (Lower bench) தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட்டன.
தமிழ்த் திருமணம், தமிழ் மணமுறை ஆகிய நூல்களையும் கீ. இராமலிங்கனார் இயற்றினார். வைதீக நெறிச் சடங்குகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை என்று இந்நூல்களில் விளக்கியுள்ளார்.
தமது இறுதி மூச்சுள்ளவரை தமிழின் செழு மைக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய அறிஞர் கீ.இராமலிங்கனார் 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாளில் இயற்கை எய்தினார். ஆட்சி மொழித் தமிழுக்குப் பாடுபட்ட அவரது பெயர் தமிழ் மொழி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் வகையில் இந்நினைவு நாளில் தமிழ்மொழி உணர்வுடன் நினைவு கூர்வோம்!

