பெரியோர்களே! தாய்மார்களே! அருமைத் தோழர்களே! ஓர் அரிய வாய்ப்பு. விருதுநகர் மாவட்டம், சிவகாசித் தோழர்கள் சுந்தரமூர்த்தி – சீனியம்மாள் இணையர்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு அழைத்திருக்கிறார்கள். என்னுடைய தலைமையில் தான் இவர்களுக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். (இருவரும் ஆமோதிக்கின்றனர்) தீவிரமான கொள்கைக் குடும்பம். அப்பேர்ப்பட்டவர்களின் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் எத்தனைவது குழந்தை என்று கேட்டேன். மூன்றாவது குழந்தை என்று சொன்னார்கள். சரி, ஆங்கிலத்தில் Full stop என்று பெயர் வைக்கட்டுமா என்று கேட்டேன் (வெடிச் சிரிப்பு). எப்படி இந்தக் கருத்து வந்தது என்றால், காஞ்சிபுரத்தில் ஒரு தோழர் ஆண்டுக்காண்டு அய்யா கூட்டத்துக்குப் போவார். ஆண்டு தவறாமல் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு, அய்யா பெயர் வைப்பார். தந்தை பெரியார் நல்ல நினைவாற்றல் கொண்டவர். பெயர்கள் வைப்பதை நினைவு வைத்திருப்பார். தந்தை பெரியார் அவர்களுக்கு நகைச்சுவை (Sense of humour) உணர்வும் அதிகம். இங்கே தெலுங்கு அறிந்தவர்கள் அதிகம் இருப்பீர்கள். பெரியார். சொன்னார், ‘நீங்க அதிக குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அடிக்கடி பெயர் வைக்கச் சொல்லி என்னைக் கேட்கிறீர்கள். அதனால், இந்தக் குழந்தைக்கு ‘‘சாலம்மா’’ என்று பெயர் வைக்கிறேன்’ என்றார். சாலம்மா என்றால், ‘‘போதும்’’மா என்று பொருள். அன்றைக்கு இப்படியே குழந்தைக்குப் பெயர் வைத்தார். அந்தப் பெயரை நான் வைக்க விரும்பவில்லை. சொன்னாலே இவர்கள் கேட்டுக் கொள்வார்கள். ஆகவே, இந்தக் குழந்தைக்கு ‘‘செம்மொழி’’ என்று பெயர் வைக்கிறேன். (பலத்த கைதட்டல்) செம்மொழி என்று ஏன் பெயர் வைக்கிறேன் என்றால், செம்மொழியைத் தாண்டி இன்னொன்று இல்லை!
(கழகத் தலைவர் உரையிலிருந்து, இராஜபாளையம் மாநாடு 20.08.2026)

* மறைந்த வானவில் மணி படத்திற்குத் தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார். உடன்: அவரது குடும்பத்தினர் வெற்றிசெல்வி, கதிரவன், சிவகுமார், இல. திருப்பதி, பேராசிரியர் ப. சுப்பிரமணியன் மற்றும் தோழர்கள் உள்ளனர். * பெரியார் பெருந்தொண்டர் வழக்குரைஞர் வைகுண்டம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: இணையர் ராஜேஸ்வரி, மற்றும் இல. திருப்பதி, பேராசிரியர் ப. சுப்பிரமணியன், கோவிந்தன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.
