சென்னை, ஆக 21- ‘பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என முத்திரை குத்தி வெளியேற்றக் கூடாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திட வேண்டும்’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களைப் புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே அடியாக வெளியேற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு ஆழ்ந்த கவலைக்குரியது.
மே 29, 2026 தீர்ப்பில், மேகமலைப் பகுதியில் 4,601 ஆக்கிரமிப்புகள் 5,072.653 எக்டேர் பரப்பில் இருப்பதாக நீதிமன்றப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 1,595 பேருக்கு நிரந்தர வீடும், காட்டைச் சார்ந்த வாழ்வாதாரமும்; 233 பேருக்கு தற்காலிக வீடும், காட்டைச் சார்ந்த வாழ்வாதாரமும்; 2,773 பேர் காட்டில் விவசாயத்தை மட்டுமே சார்ந்தவர்களுமாக தமிழ்நாடு அரசு வகைப்படுத்தியுள்ளது.
இவர்கள் வெறும் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ அல்ல; வறுமையிலும் வாழ்வாதாரப் பாதுகாப்பின்றியும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் ஆவர். பல பத்தாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக காடுகளில் வாழும் மக்கள் ஆவர். வன உரிமைகள் சட்டம், 2006 (எஃப்ஆர்ஏ) வழங்கியுள்ள உரிமைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக மக்களை வெளியேற்றுவது சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே புறக்கணிப்பதாகும்.
குறிப்பாக எஃப்ஆர்ஏ-வின் பிரிவு 4(5), உரிமைகள் அங்கீகரிப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறை முடிவடையும் முன் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான முக்கியமான பாதுகாப்பை வழங்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல..
நீதிமன்றப் பதிவுகளிலேயே அரசு அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சமீபத்திய அணுகுமுறை தமிழ்நாடு அரசுக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாகும்.
அங்கு 2026 ஜூலை 30-ஆம் தேதி பழங்குடியினர் விவகாரத் துறை, எஃப்ஆர்ஏ-வின் கீழ் உரிமைகள் பெறும் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என்றும், மாவட்ட நிர்வாகங்கள் மூன்று அடுக்கு சட்ட நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அவகாசம் கேட்பது பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் கடமையிலிருந்து தவறும் செயலாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
