அபுஜா, ஆக. 21- வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
20.8.2026 அன்று காலையில், கரையோரமுள்ள வயல்வெளிகளில் நெல் நடும் பணிக்காக 70-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும், சிறுவர்-சிறுமிகளும் ஒரே படகில் பயணித்துள்ளனர். நதியின் நடுவே சென்று கொண்டிருந்தபோது, சுமை தாங்காமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது.
தகவலறிந்ததும் அப்பகுதி நீச்சல் வீரர்களும், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து அதிகாரிகளும் மீட்புப் பணியில் இறங்கினர். இதுவரை 40 குழந்தைகளின் உடல்கள் உட்பட 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலேயே 46 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போதிய பாதுகாப்பு உடைகள் இல்லாததும், பழமையான படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதுமே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நைஜீரியாவில் மோசமான சாலை வசதிகள் காரணமாக மக்கள் நீர்வழிப் பயணங்களையே அதிகம் நம்பியுள்ளனர். இதனால் இதுபோன்ற விபத்துகள் அங்கு தொடர்கதையாகி வருகின்றன. ஏற்கனவே 2025 ஆகஸ்ட் மாதத்தில் சோகோடோ பகுதியில் நடைபெற்ற படகு விபத்தில் 25 பேர் மாயமாகி உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரும் சோகம் அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் சவுதியில் மீன்பிடி
தொழில் செய்யும் தமிழர் உயிரிழப்பு!
ரியாத், ஆக. 21- சவுதி அரேபியா கடலில் ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் நேற்று உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் காந்திதெருவை சேர்ந்த மாவீரன் (40), கீழமூவர் கரையை சேர்ந்த சங்கர் (34), திருமுல்லைவாசலை சேர்ந்த பால்ராஜ், கடலூர் மாவட்டம் சொத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தனர். கடந்த 11ஆம்தேதி 4 பேரும் சவுதி அரேபியா நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் படகை சிறைபிடித்து மீன்களை பறித்ததோடு, மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தினர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மாவீரன் உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த மற்ற 3 மீனவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (20.8.2026) சங்கர் உயிரிழந்தார்.
மத்திய ஆப்பிரிக்காவில்
தங்கச் சுரங்கம் சரிந்த விபத்து
107 பேர் இடர்பாட்டில் சிக்கி உயிரிழப்பு!
ஜாம்போயி, ஆக. 21- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில், தங்கச் சுரங்கம் சரிந்ததில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாம்போயி நகரத்தில் உள்ள தங்கச் சுரங்கம் சரிந்ததைத் தொடர்ந்து, அங்கு கடந்த 2 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் மூலம் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பலியானது நேற்று (ஆக. 20) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதுமான பாதுகாப்பு வசதிகளின்றி சுரங்கத்தில் வேலை செய்து வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், மீட்பு கருவிகளின் பற்றாக்குறை மற்றும் வல்லுநர்களின் திட்டமின்மையால் மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாக உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை மட்டும் சுரங்கச் சரிவில் சிக்கி உயிரிழந்த 10-க்கும் அதிகமான தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் அங்கு பணிபுரிந்த கேமரூன் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர் களின் மொத்த எண்ணிக்கை தெரியவராததால், மீட்புப் பணிகள் மேற்கொள்வது சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கான காரணம், பலியான தொழிலாளர்களை அடையாளம் காணுதல் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய ஆப்பிரிக்க அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, மத்திய ஆப்பிரிக்க நாட்டில் சமமற்ற நிலப்பகுதிகளில் போதுமான பாதுகாப்பு கருவிகளின்றி கைகளால் தோண்டப்படும் சிறியளவிலான சுரங்கங்கள் சரிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த அவலம் தொடர் கதையாகி வருகிறது.
பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மக்கள் சாலைகளில் தஞ்சம்
அய்கா, ஆக. 21- தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 21, 2026) நள்ளிரவு 1 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பரினகொச்சோஸ் மாகாணம், உபஹசொ நகரில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில், பூமிக்கு அடியில் 66 கிலோமீட்டர் ஆழத்தில், அண்டெஸ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
அந்நாட்டின் அய்கா, ஆர்கியுபா ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டனவா என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. பெருவில் கடந்த 2007ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
