முனைவர் க. அன்பழகன்
தந்தை பெரியாரின் பெரும் பணி இறுதிவரை எதிர் நீச்சல் பணியாகவே அமைந்தது. ஈரோட்டுப் பாய்ச்சல் என்றுமே எதிர்நீச்சல்! யாருக்குப் பின்னும் செல்லாதவர் – யாரானாலும் தனக்குப்பின்னே அணி வகுக்க வேண்டும் என்று உறுதி கொண்டவர். அவர்தாம் பெரியார்! இவருக்கு இணை உலகினில் வேறு யார்?
கடல் நீரில் மீன் மிதப்பது போல் மக்கள் கடலில் மிதந்திட்டார். பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் என ஓயாமல் களப் பணி மேற்கொண்டார்.
அய்யாவின் பேச்சைக் கேட்கப் ேபாகக் கூடாது என்று ஊரே கட்டுப்பாடு போட்டது. மீறிப் போனால் ஊரையே பகைக்கும் நிலை ஏற்பட்டது.
கல்வீச்சு – தடியடி சகிதம் நடத்தப்பட்டது. பாம்பும் – மலமும் வீசப்பட்டது.
கத்தி – கட்டாரி– அரிவாள் எனக் கொலை ஆயுதங்கள் ஆளை மிரட்டின. பெரியார் கிஞ்சிற்றும் அஞ்சாது எரிமலைக்கிடையே எதிர்நீச்சல் போட்டார். உலக நெருப்பில் நீந்தி முந்திச் செல்லும் – வெற்றிப்பாதையில் முன்னேறிச் செல்லும் பெரியாரை உலகம் வியந்து பார்த்தது.
அந்த வரிசையில் மற்றொரு நிகழ்வுதான் இராஜபாளையத்தில் ஈரோட்டுச் சிங்கம் நடத்திய எதிர்நீச்சலானது மற்ற எதிர்ப்பினைக் காட்டிலும் வித்தியாசமானது.
காவல்துறையானது பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்து விட்டது. மாலைக்குள் கட்டாயம் நடத்திவிட்டு, இருட்டுவதற்கு முன்பே இராஜபாளையத்தை கடந்திட வேண்டும் என்ற கட்டுப்பாட்டோடு அனுமதித்தது.
அதன்படி தந்தை பெரியாரும் – தோழர்களும் இராஜபாளையத்தின் எதிர்ப்பு எரிமலைக் களுக்கிடையே பிரச்சார எதிர் நீச்சல் போட்டார்.
அதே இராஜபாளையத்தில் இன்று எதிர்ப்பு எரிமலையை வென்ற பெரியாரின் வீர வரலாற்றை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் எழுச்சி உரையாற்றுகிறார். இருட்டுவதற்குள் அல்ல – இரவில் நடக்கும் கூட்டம். பெரியாரின் பேருழைப்பு வென்றிட்ட இன்றைய நாளில் தமிழர் தலைவர், தத்துவத் தலைவர் தந்தை பெரியாரின் எரிமலைக்கிடையே நடத்திய எதிர்நீச்சலை விளக்கி விரிவுரையாற்றவுள்ளார்.
தந்தை பெரியார் காலத்தில் மட்டுமன்றி தொடர்ந்து அன்னை மணியம்மையார் இன்று தமிழர் தலைவர் காலத்தில் அதே பணி, எரிமலைக்கிடையேயான எதிர்நீச்சல் பணி.
கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களும் தந்தை பெரியார் விட்டுச் சென்ற எதிர் நீச்சல் பணியை – அதே நெருப்பாற்றில் நீந்தும் பணியை தொடர்ந்து செய்தார் – செய்கிறார்.
1982ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் (20.7.1982) மம்சாபுரத்தில் மருத்துவமனை ஒன்றினை திறப்பதற்கு ஆசிரியர் அவர்கள் அம்பாசிடர் காரில் சென்று கொண்டிருக்கும்போது, இராஜபாளையம் மெயின் ரோட்டில் மம்சாபுரம் அருகிலுள்ள புதுப்பட்டி பிரியும் வழியில் கார் வந்தபோது, தி.மு.க.வின் கொடியை இளைஞர்கள் தடியில் கட்டி உயர்த்திப் பிடித்துக் கொண்டு ‘கலைஞர் வாழ்க’ என்று முழக்கமிட்டனர். காரை நிறுத்தி அவர்களிடம் வரவேற்பைப் பெற்றிட முனைந்தபோது, ‘‘அடிடா! என்று சத்தம் போட்டு தாக்கினர். கல்லாலும் தாக்கினர். ஆசிரியர் அவரது மூக்கிலும், தோளிலும் அடிபட்டு இரத்தம் கொட்டியது.
மருத்துவ சிகிச்சை பெற்று அன்று இரவு 12 மணிவரை மம்சாரபுரத்தில் உரையாற்றி, விடை பெற்று, திருவில்லிபுத்தூர் கூட்டத்திற்கு 12.30க்கு வந்துஇரவு 2.30 மணிவரை உரையாற்றி விட்டு மதுரை வழியாக திருச்சி வந்தடைந்தார்.
அன்று நடைபெற்ற காலிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் – கொலை வெறித் தாக்குதலில் தப்பி, இன்று 93 வயதில் அதே இராஜபாளையத்தில் எரிமலை எதிர்ப்புக்கிடையே வென்ற பெரியாரின் வீர வரலாற்றையும் – தனக்கு ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பின் வாங்காது உரையாற்றி விடைபெற்ற வெற்றி வரலாற்றை இன்று நேரில் சென்று தமிழர் தலைவர் இராஜபாளையத்தில் முழக்கமிட்டவுள்ளார்.
