கடல் இல்லா மதுரை கூடல் மாநகரில் கருப்புச் சட்டைப் படையின் கருங்கடல் மாநாடு -முனைவர் க. அன்பழகன்

சிறப்பு புத்தக சலுகைகள்

மதுரை மாநகர் சமுதாயம் – அரசியல் – மொழி – தொன்மைச் சிறப்பு எனும் பல வரலாற்று விழுமியங்களுக்கு சொந்தமான மண்.

பண்பாட்டுத் தளங்களை இன்றும் தாங்கி வாழும் வாழ்நிலைக்குரியவர்கள் மதுரை மக்கள்! கல்வி – செல்வம் – வீரம் என்ற அடிப்படைக் கட்டுமானங்களைத் தொன்றுதொட்டுப் பாதுகாக்கும் தொட்டில் தான் மதுரை என்றால் மிகையல்ல.

அம் மதுரை  கூடல் மாநகரில் கருஞ்சட்டைப் படையின் மாநாட்டை 1946இல் மே 11–12 ஆகிய இரு நாள்கள் நடத்திடத் தந்ைத பெரியார் ஆணையிட, பணிகள் திட்டமிட்டு அசுர வேகத்தில் நடைந்தேறின. 200 x 200 அடி பந்தல், பந்தலில் மேடை மட்டும்  40 x 60 அடி, மேடைக்குப் பின்புறம்   திரை 40 x 60 அடி என அமைக்கப்பட்டது. இதில் கருப்பு வண்ணத்தின் நடுவில் சிவப்பு வட்டம் அமைந்து காண்போரைக் கவர்ந்தது.

பந்தலில் ஆங்காங்கே இலட்சிய முழக்கங்கள் எழுதப்பட்டுக் கட்டப்பட்டிருந்தது. காகிதத்தாலான கழகக் கொடி சிறிய அளவில் பந்தலின் மேற்கூரையை அடைத்துக் கட்டப்பட்டுப் பறந்து கொண்டிருந்தது.

மாநாட்டிற்கு தந்தை பெரியார், தளபதி அண்ணாதுரை மற்றும் முக்கியமானோர் 11.5.1946 காலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரயில் வந்து இறங்கினர்.

ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைப் படையினர், திராவிடர்  இனத் தலைவரை வரவேற்று இடியென முழக்கமிட்டனர்.

ஸ்டேஷனுக்கு வெளியில் 20,000 தொண்டர்கள் வட்டமாக  அணி வகுத்து நின்றனர். கழகத்தின் கருஞ்சட்டைப்படை இராணுவத் தளபதிகளாக எம்.ஆர். ராதாவும், பாவலர் பாலசுந்தரமும் இராணுவக் கருப்புச்சட்டையில் குதிரையின்மீது ஏறி அமர்ந்து அணிவகுப்பை நடத்தினர்.

ஊர்வல அணிவகுப்பில் இரட்டைக் குதிரைச் சாரட்டில் தலைவர் பெரியார், தளபதி அண்ணா,தோழர்கள் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் என். அர்ச்சுனன், எஸ்.ஆ.காந்தி அம்மையார், இரா. நெடுஞ்செழியன் முதலியோர் அமர்ந்திருந்தனர். 20,000 தொண்டர்கள் அணி வகுப்பு, 20,000 இதர தோழர்கள், பொது மக்கள் அணியாகத் தொடர, மாநாட்டுப் பந்தலை ஊர்வலம் வந்தடைந்தது. மாநாட்டுப் பந்தலில் 10,000 பேர்கள் ஊர்வல வருகைக்கு முன்பே அமர்ந்திருந்து இசை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாநாடு தொடங்கி இரவு நிறைவுற்றது. இரண்டாம் நாள் மாநாடு 11.5.1946 காைல 9.30 மணிக்குத் தொடங்கியது.

காலை உரைவீச்சு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும், வேளையில் மதுரை நகருக்குள் காலிகள் கலவரம்! கழகத் தோழர்களை, கருஞ்சட்டைத் தோழர்களை தாக்குகிறார்கள். கருப்புச் சேலை அணித்திருக்கும் மகளிர்களை இழிவாகப் பேசுகிறார்கள் என்ற செய்தி வரத் தொடங்கி விட்டது.

கழகத் தோழர்கள் 100க்கு மேற்பட்டோர் தோழர்களைப் பாதுகாக்க விரைந்தனர். தந்தை பெரியார் ‘‘யாரும் வெளியில் செல்லக் கூடாது; அமைதி, கட்டுப்பாடு காக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டு விட்டார்கள்.

தோழர்களைப் பாதுகாக்கச் சென்ற 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கட்டடம் ஒன்றில் அடைத்து விட்டனர். காலிகளைக் காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை. கழகக் கொடி கிழிக்கப்படுகிறது; எரிக்கப்படுகிறது; தோழர்கள் தாக்கப்படுகிறார்கள். கழகத்தின் மத்திய திராவிடர் கழகச் செயலாளர் ஆ. திராவிடமணி தாக்கப்படுகிறார்.

காங்கிரஸ்காரர்கள் காங்கிரஸ் கொடியை கருஞ்சட்டைப் படையினர் ெகாளுத்தியதாகப் புரளியைக் கிளப்பி காங்கிரஸ் காலிகளைக் கலவரத்திற்குக் கட்டவிழ்த்து விட்டனர். காவல்துறையினர் கண்டுங்காணாது நின்றனர். தோழர்கள் தாக்கப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட இருந்த நிலையில், காங்கிரஸ்காரர்கள் கலவரத்தில் ஒரு பக்கம் ஈடுபட்டுக் கொண்டே மறுபக்கம் மாநாட்டுப் பந்தலுக்கே தீ வைத்து விட்டனர்.

50,000க்கு மேற்பட்ட திராவிடர் கழகக் கருஞ்சட்டைப் படை மாநாட்டில் திரண்டதை பொறுக்க  முடியாத  மதுரை வைத்தியநாதய்யரும் எதிரிகளும், காங்கிரஸ் காலிகளும் சேர்ந்து காலிப் பாட்டாளத்தையும் வைத்துக் கொண்டு, மதுரை மாநாடு – கருஞ்சட்டைப் படை மாநாடு தீக்கு இறையாகிச் சாம்பலாக்கப்பட்டது. விடிய, விடிய தோழர்கள் பேருந்தில் காவல்துறையின் பாதுகாப்புடன் மதுரைக்கு வெளியே அனுப்பப்பட்டனர்.

‘‘கோயிலுக்குள் செருப்பு போட்டு சென்றனர்’’,  ‘‘கோயிலுக்குள் வரும் பெண்களை இழிவாக பேசினர்’’ என்பன போன்ற ெபாய்கள் பரப்பப்பட்டதால், இக்கொடுமை நடைபெற்றது. பார்ப்பனர்களும் –காங்கிரசும் பின்னே நின்று செயல்பட்டது. மேலும், தாக்கும்போது காலிகள் ‘‘வந்தே மாதரம்’’ ‘‘காந்திக்கு ஜே’’ என்ற முழக்கமிட்டதைக் குடிஅரசு சுட்டிக் காட்டுகிறது.

‘‘மதுரையில் நடந்தது என்ன?’’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு 16.5.1946 நடைபெற்ற கும்பகோணம் மாநாட்டில் விலாவாரியாகப் பேசி, இனி நாம் மிகக் கவலையோடு கவனிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று கழகத் தோழர்களுக்கு எச்சரிக்கை செய்து உரையாற்றி இருக்கிறார்.

1946இல் 50,000 பேர்கள் கலந்துகொண்ட மாநாடு, 20,000 பேர்கள் ஊர்வல அணிவகுப்பு, 6 மைல் நீளத்திற்கு ஊர்வலம் – காலை 9.30 தொடங்கிய மாநாட்டு மேடைக்கு மதியம் 1 மணிக்கு தலைவர்கள் சென்றடைந்தனர்.

எங்கே மாநாடு? ‘மதுரையில்!’

என்ன மாநாடு? ‘கருஞ்சட்டை மாநாடு’ எந்தக் கட்சி நடத்தியது? ‘‘திராவிடர் கழகம்!’’ இந்த வரலாற்று பிரளயத்திற்கு ஆணையிட்டத் தலைவர் யார்?

அவர்தான் தந்தை பெரியார்.

இது ஆரியத்திற்கு வயிற்றைக் கலக்கியது. காங்கிரசு,  காமாலை காட்சிகளைக் கண்டது. அதன் காரணமாகத்தான் மாநாட்டுப் பந்தல் தீக்கீரையானது.

மதுரை மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்த கலகக் கூட்டத்தின் வெறுப்புத் தீக்கு உரிய காரணத்தை அறிஞர் அண்ணா அவர்கள் 26.05.1946 ‘திராவிட நாடு’ இதழின் தலையங்கத்தில் தீட்டிய  ‘‘மரண சானத்தின்’’ ஒரு சிறு பகுதியைப் படியுங்கள்.

‘‘மதுரையில் இப்படி ஒரு மாநாடா? அதற்கு, நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுவதா? பெண்கள் இவ்வளவு பெருங்கூட்டமா கவா? ஊர்வலம், இவ்வளவு அழகாக, அமைதியாக, கட்டுப்பாடாக, நடப்பதா? பிரச்சாரத்தின் தன்மை இப்படி இருப்பதா, யாரையும் புண்படுத்தாமல், விஷய விளக்கமும், அறிவு வளர்ச்சியும் தருவதாக இருக்கிறதே, கலக உணர்ச்சியைக் கிளப்பிவிடவும் வழிகாணோமே, என்ன செய்வது? இரவெல்லாம், திருவிழாப்போல் திரள் திரளாகக் கூட்டம்? நீல நிறவானிலே நீந்தி விளையாடும் நிலவும், அதன் ஒளியால் ஒளிபெற்ற வெண்மணலும், அந்த மணற்பரப்பிலே, திராவிடத் தோழர்களும், அவர்கள் நெஞ்சிலே களிப்பும் இருப்பதா? அந்தக் காட்சியை கண்டும் நாம் சகிப்பதா?என்ற எண்ணம் கொண்டனர்; கூடினர், யாது பேசினரோ; என்ன திட்டம் வகுத்தனரோ நாம் அறியோம்; புன்னகைப் பூந்தோட்டத்தைப் புயல் அடிக்குமிடமாக்கினர் மறுநாள், களிப்பு நடமாடிய இடத்திலே கலக்கத்தை நடனமிடவிட்டனர். நாசவேலை செய்தனர்.’’ அண்ணாவின் படப்பிடிப்பு இது!

அதே மதுரையில் அதன்பின் பல நிகழ்வுகள், மாநாடுகள், போராட்டங்கள் கருஞ்சட்டைப் படையால் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இப்போதுஎதிர்ப்பு எரிமலையை எதிர்த்து வென்ற திறந்த வெளி மாநாடு. பெரியாரின் கொள்கைகள் பல வெற்றி பெற்று சட்டமாகியிருப்பது நம் வெற்றிச் சரித்திரத்தின் பதிவு!

தமிழர் தலைவர் ஆசிரியர் தந்தை பெரியார் எரிமலை  எதிர்ப்புகளை நின்று வென்றிட்ட  வரலாற்றை மதுரைக்கும், உலகின்  பிற பகுதிக்கும்  சென்றடைந்திட சங்கநாதமாய் முழங்கி  சரித்திரம் படைத்திட அதே மதுரையில்   ‘‘எரிமலையை வென்ற பெரியார்’’ என கர்ஜிக்க உள்ளார்.

95 வயது பெரியார் வாழ்க்கையின் ஈடற்ற வெற்றிச் சிறப்பை 93 வயது தமிழர் தலைவர் முரசொலிக்க இருக்கிறார். பெரியாரின் 150ஆவது பிறந்த நாளில் உலகம் காண உள்ள பெரியார் உலகம், பெரியார் எண்ணற்ற எரிமலையை எதிர்த்து வென்றிட்ட சாதனைச் சரித்திரத்தின் விளைவை உலகு காண உள்ளது.

மதுரை மாநாட்டில் கூடுவோம்! மாநாட்டை சாம்பலாக்கிய கயவர்க்கு திராவிடத்தின் வெற்றி வரலாற்றைப் புகட்டுவோம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *