சுயமரியாதை இயக்கச் சுடரொளிகளின் தொண்டு வரிசை – 1 – கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

கருத்தியல் வல்லுநர் சாமி கைவல்யம் நினைவுநாள் இன்று (22.4.1953)

முகவுரை

“புத்தகங்களுக்கு முகவுரை எழுதுவது என்பது புத்தக ஆசிரியரை அறிமுகப்படுத்தவும், அதிலுள்ள விஷயங்களின் மேன்மையை ஒருவாறு சுருக்கமாக எடுத்துக்காட்டவும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்பது எனதபிப்பிராயம்.

அந்த முறையில் முதலாவதான அறிமுகப்படுத்தும் விஷயத்தில், இப்புத்தகத்தில் காணும் கட்டுரைகளை எழுதிய ஆசிரியராகிய தோழர் கைவல்ய சுவாமியாரவர் களைத் தமிழ்நாட்டுக்கு இனி, புதியதாய் ஏதும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த 10 வருஷ காலமாக ‘குடிஅரசு’வில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் மூலமாக அவரைப் பற்றி அறியாதார் யாரும் இருக்க மாட்டார்கள். இரண்டாவது விஷயமான இப்புத்தகத்தில் கண்டுள்ள கட்டுரைகளின் மேன்மையைப் பற்றி எடுத்துக் கூறுவது என்பதிலோ அதற்கும் நான் தகுதி யுடையவனல்ல. ஏனெனில், எந்த விஷயங்களுக்கு யார் முகவுரை எழுதுகிறார்களோ. அவர்கள் அப்புத்தக ஆசிரியருக்கு எவ்வளவு ஞானமும், பயிற்சியும், ஆராய்ச்சியும் இருக்கின்றதோ, அதைவிடச் சற்றாவது அதிகமாகவோ அல்லது கிட்டத்தட்டவோவுள்ள ஞான மும் பயிற்சியும் ஆராய்ச்சியுமுள்ளவர்களே அவ்விஷ யங்களின் மேன்மையை எடுத்துக்காட்ட அருகரா வார்கள். அந்தப்படிப் பார்த்தால் நான் அதற்கு ஒரு சிறிதும் அருகனல்லன் என்பதை மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பின் எந்த நிலையில் நான் இந்தப் புத்தகத்திற்கு ஒரு முகவுரை எழுத முன்வந்தே னென்றால், தோழர் கைவல்ய சுவாமியாரவர்களுடைய சரித்திரச் சுருக்கத்தைப் பற்றிச் சிலருக்குத் தெரியாத சில விஷயங்களையும் இப்புத்தகத்தில் கண்ட விஷயங் களாகிய அவரது கட்டுரைகளை நான் என் ‘குடிஅரசு’ பத்திரிகை மூலம் பிரசுரித்து, பொது ஜனங்களறியும்படிச் செய்து வந்தேன் என்பதையும் எடுத்துக்காட்டுவதற்குச் சிறிது உபயோகித்துக் கொள்ளலாம் என்று கருதியே முகவுரையென்னும் பெயரால் சில வரிகள் எழுத முற்பட்டேன்.

தோழர் கைவல்ய சுவாமியார் அவர்கள், சோழிய வேளாள ஜாதி என்பதைச் சேர்ந்தவர்கள். அவரது முன் னோர்கள் பட்டாளத்தில் இருந்தவர்கள். தந்தையாரும், சகோதரர்களும் சுகஜீவிகளாயும், வேதாந்த விசாரணைப் பாண்டித்தியம் முதலியவைகளில் மிக்க பரிச்சயமுடைய வர்களாகவும் இருந்தவர்கள். தோழர் கைவல்ய சுவாமியார் ஈஸ்வர வருஷம், ஆவணி மாதம், எட்டாந் தேதி மலையாளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர். அவர் தமது அய்ந்தாம் வருஷம் வரை கள்ளிக்கோட்டையிலிருந்து, பிறகு அய்ந்து முதல் பதினோராம் வருஷம் வரை பாலக்காட்டிலும், பதி னொன்று முதல் பதினான்கு வரை மதுரையிலும், பதி னான்கு முதல் பதினெட்டு வரை திருச்சியிலுமிருந்தவர். திருச்சியில் இரண்டாவது பாரம் வரையில் படித்துவிட்டுப் பள்ளிக்கூடம் விட்டு விரக்தியின்மீது கோயமுத்தூர் ஜில்லாவுக்கு வந்துவிட்டார். இந்த நிலை வரையில் அவருடைய பெயர் பொன்னுசாமி என்றும், செல்லப் பெயர் பொன்னு என்பதாகவும் அழைக்கப்பட்டது. இதன்பிறகு இந்தியா முழுவதும் சாமியாராய் யாத்திரை செய்தார்.

இப்படியிருக்கையில், இவருக்கு கைவல்ய சாமியார் என்று பெயர் வந்த விதம் எப்படி என்றால், இவரது சுற்றுப்பிரயாண யாத்திரையில் கரூருக்குச் சென்றிருந்த சமயம் அங்குள்ள மவுனசாமி மடத்திற்குப் போயிருந்தார். அந்த மடத்திலுள்ள சாமியாரிடம் பலர் வேதாந்த விசாரணைக்கு வந்து, பல விஷயங்கள் தெரிந்து போவதில் கைவல்ய நூலைப் பற்றியும் பலர் பேசுவ துண்டு. அப்பொழுது தோழர் கைவல்ய சாமியார் அதில் முக்கியப் பங்கெடுத்துக் கொண்டு சற்று அதிகமான தர்க்கம் புரிவார். அந்தக் காரணத்தால் இவரை இவர் இல்லாத சமயத்தில் அங்கு வந்தவர்களில் ஒருவர், “கைவல்ய சாமியார் எங்கே?” என்று கேட்டார். அந்தச் சமயம் இவரும் அங்குவர, அங்கிருந்த பலர், “இதோ கைவல்ய சாமியார் வந்துவிட்டார்” என்றார்கள். அதுமுதல் அவருக்கு அந்தப் பெயர் வழங்கி வந்ததாகும். எந்தக் காரணத்தாலேயோ அவருக்குத் தர்க்க உணர்ச்சி ஏற்பட்டது முதல், பார்ப்பன மதக் கொள்கைகளை வெறுப்பதும், அது சம்பந்தமான ஆதாரங்களைப் பற்றித் தர்க்கித்து வருவதும் அவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு ஊக்கமுள்ள பழக்கமாகிவிட்டது. அந்தக் காலத்தில் சங்கராச்சாரியார் கோயமுத்தூர் ஜில்லாவில் சுற்றுப்பிர யாணம் செல்லுமிடங்களிலெல்லாம் சென்று அவருக்கு எதிரிடையாகப் பிரசாரம் செய்வதும், அவர் மதக் கொள்கையைக் கண்டிப்பதும் முக்கியமாய் பராசுர ஸ்மிருதிக்கும் மனுதர்ம சாஸ்திரத்திற்கும் விரோதமாகப் பேசுவதுமான வேலைதான், அவர் முதன்முதல் வெளி யிறங்கிப் பிரசாரம் செய்த வேலையாகும்.

இந்த நிலையில் கோயமுத்தூர் ஜில்லாவிலுள்ள பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களும், சற்று எழுத்து வாசனையும் நகரப் பழக்கமுமுள்ள மிராஸ்தாரர்களும் சுவாமியாருக்கு ரொம்பவும் பழக்கம் ஏற்பட்டு, இவரிடம் பேசிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கொரு திருப்தியும் சந்தோஷமும் உண்டாகி, யாரும் வெகு கிராக்கியாய் சுவாமியாரைத் தேடுவதும். கூடவழைத்துக் கொண்டு போவதும், நன்மை தீமைகளுக்கு அழைப்பதுமான நிலைமை ஏற்பட்டது. இதோடு சற்று வைத்தியமும் வைத்திய ஆராய்ச்சியும் நன்றாய்த் தெரிந்திருந்ததனால் சாதாரண மக்களும் சுவாமியாரைத் தேடித் திரிவதாயிற்று. இவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்த ஜில்லாவில் வந்து மிராசுதாரர்களிடம் கவி பாடிக் கவுரவ யாசகம் வாங்கும் பண்டிதர்கள். புலவர்கள், வித்துவான்கள், புராண இதிகாசப் பிரசங்கிகள் முதலியவர்களும் சுவாமி யாரைக் கண்டால் சற்று பயப்பட வேண்டியதாகவும் ஏற்பட்டது. ஏனெனில், ஜில்லாவிலுள்ள எல்லாப் பெரிய மனிதர்களும், மிராசுதாரர்களும் சாமியாரைச் சிநேகிதர் போல் பாவித்து, மிக்க நெருக்கமாகவும், மரியாதை யாகவும் பழகினதால், மேல்படி பண்டிதர்கள் இவர் தயவில்லாவிட்டால் சரியானபடி பிச்சை கிடைக்காதே என்கின்ற பயத்தால், இவருக்கு அதிக மரியாதை செய்வார்கள். புராணப் பிரசங்கங்கள். புராணப் படங்கள் நடக்கும் இடத்திற்கு கைவல்ய சுவாமியார் போய் விட்டால், எல்லோரும் சுவாமியாரையே பார்ப்பார்கள். புராணப் பிரசங்கப் பண்டிதருக்கும் நாக்கில் ஜலம் வற்றிப் போகும்; தொண்டை வறண்டு போகும். இந்த நிலையில் சுவாமியார் தானாகவே மிக்க பிரக்கியாதியாய் விட்டதோடு, தானாகவே மறுபடியும் அநேக சாஸ் திரங்கள் பார்த்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

இது இப்படியிருக்க, அந்தக் காலத்தில் ஈரோட்டில் நம் வீடானது வித்வான்களுக்கும். பாகவதர்களுக்கும் சற்றுத் தாராளமாய் வந்து போகக்கூடியதான வீடாய் இருந்ததாலும் அவர்களை நம் வீட்டார்களும் பிரியமாய் வரவேற்று, சற்று மரியாதை செய்து, பக்தி காட்டுகின்ற வழக்கமாயிருந்ததாலும் நம் வீட்டிலும் நான் அடிக்கடி பல வித்வான்களையும், பாகவதர்களையும் சந்திப்பதும் அவர்களிடம் சற்று வாய்த்துடுக்காய் ஏதாவது பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதுமான ஒரு குணம் நமக்கு எப்படியோ பழக்கத்தில் வந்துவிட்டது. நான் எங்கள் கடையில் எனது தகப்பனாருக்கு அடங்கிய காரியஸ்தனாயிருந்தாலும் சாயந்திரமானால் பலருடன் சேர்ந்து அரட்டையடிப்பதும், அந்த அரட்டை முழு வதும் புராணங்களைப் பற்றித் தர்க்கம் பண்ணுவதும் மற்றவர்கள் சிரிப்பதுமாகவேயிருந்தது. இந்தக் கூட்டத் தில் ஒருநாள் கைவல்ய சுவாமியார். அவர்கள், எனக்கும் அவருக்கும் பொதுவான சில நண்பர்களோடு விஜயம் செய்தார். அது 1903ஆம் வருஷம் – அந்தக் காலத்தில் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பே எம்மிருவருக்குள்ளும் தர்க்கமேற்படத் தக்கதாயிருந்தது அந்தத் தர்க்கம் ஒருவருக்கொருவர் அதிருப்தியோடு கலைய வேண்டியதானாலும் பிறகு அடிக்கடி பொது இடங்களில் இருவரும் சந்திக்க ஏற்பட்டதனாலும் ஜாதி மத சாஸ்திர சம்பந்தமான அபிப்பிராய ஒற்றுமையி னாலும் இருவருக்கும் அதிக சிநேகமாகி ஒன்றிரண்டு வருஷங்களுக்குள் ஈரோட்டிற்கு வந்தால், நம் வீட்டிற்கே வரும்படியான நிலைமையும், நெருங்கிய சிநேகமும் ஏற்பட்டு விட்டது.

பிறகு காலம் நேரமில்லாமல் எப்போது பார்த்தாலும் இந்த விஷயங்களிலேயே அதிக நேரம் செலவழிக்க நேர்ந்தது. 15, 20 வருஷத்திற்கு முன் ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக்கும்போது, சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது. அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடளே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப் பானைப் பார்த்து, என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்’ என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையா லேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து, ‘யாரடா சூத்திரன்?” என்று கேட்டார். அப் போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி இன்னும் பல சம்பவங்களில் நாங்கள் கலந்திருந்ததுண்டு.

மற்றும் சுவாமியாரவர்கள் எப்போது பார்த்தாலும் தேர்த் திருவிழா, கோயில் செலவு, விக்கிரக பூசை, சமுதாய் வாழ்க்கையில் உள்ள பல சடங்குகள் ஆகிய இவைகளே இந்த நாட்டுக்குப் பெரும் க்ஷயரோகம் போன்ற வியாதி என்று சதா சொல்லி வருவார் பார்ப்பனியச் சடங்குகளின் புரட்டுகளைச் சிறிதும் தாட்சண்யமில்லாமல் எப்பேர்ப்பட்டவர்களுடனும் தர்க்க ரீதியாய் எடுத்துச் சொல்லிக் கண்டித்து வருவார் – இவ்வளவு செய்தும் இவருக்குப் பொதுமக்களிடம் மதிப்பும், பக்தியும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அவர் தனக்கென்று இடுப்பு வேஷ்டி யைத் தவிர, சாப்பாட்டைத் தவிர, வேறு ஒரு சாதனத்தையும் விரும்பியதுமில்லை வைத்துக் கொண்டிருந்ததுமில்லை ஆதலால், அவரைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாமற் போயிற்று.
இதுவே அவரைப் பற்றி நமக்குத் தெரிந்த சேதிகளா கும். மற்றப்படி அவர் எழுதி வந்த சாஸ்திர ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களை நாம் வெளிப்படுத்தி வந்ததற்குக் காரணம் என்னவென்றால், நாம் எடுத்துக் கொண்ட முயற்சியில் நம்மால் பேசப்பட்டும். எழுதப் பட்டும் வரும் விஷயங்கள் எல்லாம் சற்று ஏறக்குறைய நமது சொந்த அனுபவமும் பொது பகுத்தறிவுக்குட் பட்டவையுமாகவே இருப்பதால், அவை முழுதும் யுக்தி அனுபவக்காரர்களுக்குப் போதியதாகவோ, அல்லது விவரிக்கக் கூடியதாகவோ இருந்தாலும் வேதம், சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணங்கள் என்பவைகளைப் பிரமாதமாய் எண்ணிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கும், அதில் ஊறிப் பிழைக்கின்ற மக்களுக்கும், அதன் மூலமா கவும் உண்மை வெளியாகட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலேயே புராண, சாஸ்திர, இதிகாசங்களிலுள்ள விஷயங்களையும் வெளியாக்கி, அந்த முறையிலும் நமது கொள்கைகளை மெய்ப்பிக்க இவற்றை உபயோ கப்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசை கொண்டே அவற்றை வெளியிட்டு வந்தோம். சுவாமியார் அவர்களும் அந்தக் கருத்தின்மீதே எழுதி வந்தார்.
இப்போது அவைகளைத் தொகுத்துத் தொகுத்துச் சிறுசிறு புத்தகங்களாக ஆக்கி வெளியிட்டால், பிற்காலத் திற்கு ஒரு ஆதாரமாயிருக்கலாமென்கிற எண்ணத்தின் மீதே தொகுத்துப் புத்தகமாக ஆக்கி, கைவல்யம் அல்லது கலைக்கியானம் (இப்பொழுது கலைக்கியானம் அல்லது கைவல்ய சாமியார் கட்டுரை என்று திருத்தி யிருக்கிறது) என்று பெயர் கொடுத்து வரிசையாய் வெளி யிட உத்தேசித்துள்ளோம். இதில் அவரது பாஷையானது சற்று நீண்ட வாக்கியங்களாயிருக்கலாம். ஆனால், பின்னால் வரவர படிப்பவர்களுக்குச் சுலபமாய் விளங் கும் என்பதோடு, பாஷையும் மிகத் தெளிவாக இருக்கு மென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”

ஈரோடு, ஈ.வெ. ராமசாமி
7.12.1936

(இது 6-1-1931இல் வெளியிட்ட கைவல்யம் அல்லது கலைக்கியானம் என்னும் இப்புத்தகத்தின் முதற்பாகத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் எழுதிய முகவுரையாகும்.)
சாமி கைவல்யம் அவர்கள் சுயமரியாதை இயக்கத் தைத் தந்தை பெரியார் அமைத்தபோது, அதன் சிந்தனை ஊற்றாகவும் பெரியார் என்ற ஜீவநதியில் கலந்த முக்கொம்பு போன்ற மூதறிஞர்களில் முக் கியமானவரும் ஆவார்.

கைவல்யம் அல்லது கலைக்கியனம் என்ற பிரபல தத்துவங்களினைக் கரைத்துக் குடித்து சிக்கலான அதன் தத்துவாதாரத்தை எளிமையாக விளங்கிய காரணத்தால், இவரது இயற் பெயர் மறைந்து கைவல் யமாகவே மக்களால் அறியப்பட்டவர்; அழைக்கப் பட்டவர்.

தந்தை பெரியாருக்கு உள்ள கொள்கைப் பயனாளி – சுயமரியாதை இயக்கத்தை செப்பனிட்ட கட்டட எழிற் கலைஞர்களில் முதற்வரிசைத் தத்துவவாளர்! போதகாசிரியர்!
பச்சை அட்டைக் குடிஅரசின் காலத்தை வென்ற கருத்துப் பேழைகளில் அதன் அணிமணிகளில் முதன்மையானவர்!

ஈரோடு கச்சேரி வீதி ‘குடிஅரசு’ அவலுலகத்தின் முன்புறத் திண்ணையில், நரைத்த தாடியுடன், ஒரு வேட்டி, வெள்ளை ஜிப்பா போன்ற சட்டை- கணக்குப் பிள்ளை கீழே அமர்ந்து எழுதுவதை – ஈரோட்டு பயிற்சிப் பாசறை திராவிட மாணவர்களாகிய நாங்கள் கண்டு மரியாதை செலுத்திய பேறு பெற்றவர்கள்.

பெரியாரைத் துணை கொண்டவர் என்பதுடன் தந்தை பெரியாருக்கும் துணையாக நின்றவர்; வென்றவர்!

1949இல் தந்தை பெரியார் – அன்னை மணியம் மையார் “திருமண ஏற்பாட்டினை”க் குறைக் கூறியவர் களுக்கு இவர் தந்த விளக்கம் ஆணித்தரமானது என்பதுடன் கழக வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்று என்ற தனித் தகுதியைப் பெற்றதுமாகும்!

தளபதி அழகிரி, பூவாளூர் பொன்னம்பலனார், அறிஞர் அண்ணா, பழையக்கோட்டை பட்டயக்காரர் தளபதி அர்ஜூனன், குருசாமி, ஈ.வி.கே.சம்பத், கலைஞர், நாவலர் போன்ற பலரும் அவரிடம் உரையாடிய அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள்.

இந்த ‘சாமியார்’ குடும்ப சாமியார்தான். துறந்து ‘குடிஅரசு’ குருகுலத்தில் கண்காணிப்பாளராக கருத்தளிக்கும் விருந்தாளியாகவும், தமது இறுதிக் காலத்தை முடித்தவர் என்ற தனிப் பெருமைக்குரியவர்.

கோவை – சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள குடும்பத்தில் இவரது அருமை மகன் நம் நினைவிற்குரிய வாதத் திறமைமிக்க நகைச்சுவையாளரான ‘உ.க.’ என்ற உ.கந்தசாமி அவர்கள். திராவிட இயக்க பிரச்சார பீரங்கி திவாகர் கைவல்யம் போன்ற விழுதுகள் உண்டு!
கைவல்யம் அவர்களது பெயரில்தான் திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், முதலில் தொடங்கப் பெற்ற சாமி கைவல்யம் முதியோர் (காப்பு) இல்லம் சிறப்பாக இன்றும் இயங்குகிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு துவங்கவிருக்கும் இக்காலகட்டத்தில், கைவல்யத்தின் கலங்கரை வெளிச்சத்தை நினைவூட்டி அவரது அருங்கருத்தியல் திராவிடர் இயக்கப் பாடங்களாக இன்று அனை வருக்கும் வழிகாட்டட்டும். வாழ்க கைவல்யம்!

கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்

இன்று (22.04.1946) திராவிடர் கழகக் கொடி உருவாக்கம்

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *