பிரித்தானிய கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் நாளில் இந்திய பிரதமர் நரேந்திரர் என்ன உரை நிகழ்த்தினார் என்று ஆகஸ்ட் 16 ஆம் நாளில் வெளி வந்த ஏடுகளைப் புரட்டினால் அதிர்ச்சி தான் மேலோங்கியது.
80 ஆம் ஆண்டு விடுதலை நாளில் உத்தமர் காந்தி முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போசு, கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி., இளம் வயதில் பெரும் தியாகம் செய்து தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத்சிங் போன்றோர் ஆற்றிய அருந்தொண்டு களை அர்ப்பணிப்புகளைச் சில வரிகளிலாவது நினைவுகூராதது பிரதமர் நரேந்திரரின் அறியாமையா? ஆணவமா? அலட்சியமா? என்பதை எந்த ஏடும் குறிப்பிடவில்லை.
ஏனென்றால் 80 ஆண்டுகள் என்பது ஒரு நாட்டில் வரலாற்றுப் பதிவில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். பிரதமர் நரேந்திரர் அணிந்து வந்த வண்ண வண்ண 13 தலைப்பாகைகளை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருந்தன.
மன்னர் ஆட்சிக் காலத்தின் அரசாள்வோரின் தோற்றம். ஊடகங்களுக்குப் புதுடில்லி பிறப்பித்த ஆணையோ! கடந்த 13 ஆண்டுகளில் பாஜக ஒன்றிய ஆட்சி நாட்டிற்குச் செய்தது என்ன?
வரும் ஆண்டுகளில் செய்யப் போவது என்ன? என்று குறிப்பிட்டிருக்கலாம். ‘திமாகி நக்ஸல்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இட்லர்வழி மிரட்டலை நாடாளும் நரேந்திரர் உதிர்த்துள்ளார். அறிவார்ந்த நக்ஸல் என்பது தான் அதன் பொருள். விடுதலைப் போராட்டத்திலும் எண்ணற்ற திமாகி நக்ஸல்கள் பங்கு பெற்றுள்ளனரே!
நேதாஜி, பகத்சிங் போன்ற எண்ணற்ற விடுதலை களத்தில் உயிரிழந்த போராளிகளை நாம் எப்படி அழைக்க முடியும். மாவோயிசக் கொள்கையைப் பின்பற்றியவர்களைத்தான் நக்ஸல்கள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு விடுதலைப் பெற்றது. சீனா 1949 ஆம் ஆண்டில் விடுதலைப் பெற்றது.

மாவோ தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்டு கட்சி தான் இன்றும் ஆட்சியில் உள்ளது. கொள்கை களில் மாற்றங்கள் இருக்கலாம். இன்றும் மாவோ நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து போகின்றனர்.
ஆனால் பிரதமர் நரேந்திரரின் ஆர்.எஸ்.எஸ் குருமார்கள் துணையோடுதானே விடுதலைப் பெற்ற ஒரே ஆண்டில் உத்தமர் காந்தியை நாதுராம் கோட்சே சுட்டு வீழ்த்தினார்.
ஆனால் பிரதமராகிய நீங்களோ, ஊர் புறத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும், கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த காந்தியின் பெயரை நீக்கிவிட்டுக் கொடி ஏற்றுகிறீர்கள்.
ஒன்றிய அரசு – மாநிலங்களுக்கு இத்திட்டத்திற்கு வழங்கிய நிதியின் அளவையும் குறைத்துவிட்டீர்கள்.
காந்தியின் மீது எத்தகைய வன்மம்; ஆனால் பெரும் முதலாளிகள் மீது எத்தகைய பாசம் இந்தியாவில் நாட்டைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள் கடந்த 13 ஆண்டுகளில் பெற்ற வரிச் சலுகைகள் கடன் தள்ளுபடிகள் கணக்கிட்டால் பல பல லட்சம் கோடிகளைத் தாண்டுகிறது.
விலை ஏற்றம் விண்வெளி நோக்கிச் செல்கிறது. ஏழைகள் நடுத்தரப் பிரிவினர் செலுத்தும் மறைமுக வரி எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு உயர்த்தப்படுகிறது. வரிக்கொடுமை, குறைந்த வருமானப் பிரிவினரின் வாழ்க்கையை வாட்டி வதைக்கிறது.
நுழைவுத் தேர்வில் நடைபெற்று வருகிற ஊழல் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்து வருகிறது. மக்களுக்குஉணவு வழங்கும் வேளாண் குடியினர் வாடி வதங்கி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது. நீதித் துறையும் நிர்வாகத் துறையும் மக்கள் பக்கம், ஜனநாயகத்தின் பக்கம் நடுநிலையோடு இயங்குகிறதா என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது.
உங்களின் ஆர்.எஸ்.எஸ் சுப்பிரமணிய சாமி இந்தியப் பொருளாதாரம் இறந்துவருகிறது என்கிறார். அவரும் திமாகி நக்ஸலாகி விட்டாரா? நடப்பது என்ன?
மாவோ உருவாக்கிய சீனா இன்று செயற்கை நுண்ணறிவு முதல் குவாண்டம் தொழில்நுட்பம் வரை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை முறியடித்து முன்னேறி கொண்டு இருக்கிறது.
உலகிற்குத் தேவையான 30 விழுக்காடு பொருட்கள் உற்பத்தியை சீன நாட்டின் மக்கள் செய்து வருகின்றனர்.
இந்தியா 2026 ஆம் ஆண்டில் 132 பில்லியன் டாலர் தொகை மதிப்பில் மின் – மின்னணு பொருட்களை மருத்துவ உயிர் வேதி பொருட்களை சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் என்றும் இல்லாத வகையில் 79.41 பில்லியன் டாலர் அளவிற்கு சீன இறக்குமதி பெருகி வருகிறது. இந்தியாவிற்கான கடன் அளவு 2025 ஆம் ஆண்டில் 214 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்காக 2025 ஆம் ஆண்டில் இந்தியா செலுத்திய வட்டி 12 இலட்சம் கோடியாகும். இதைத் தவிர இந்தியாவின் அந்நியச் செலாவணி கணக்கில் 30 இலட்சம் கோடி டாலர் அளவிற்குப் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணம் பல இலட்சம் கோடி ருபாய் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து 2020 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றன.
சீன நாடு, உள்நாட்டு உற்பத்தி காரணிகளை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதாரக் கட்டமைப்பைத் தொடர்ந்து கவனத்துடன் உருவாக்கி வருகிறது. 2026 ஆம் ஆண்டின் அய்க்கிய நாடுகளின் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் சீனா 193 நாடுகளின் பட்டியலில் 70 வது பட்டியலில் உள்ளது.
வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, பெண்கள் உரிமை ஆகிய குறியீடுகளில் சீனா பல வளர்ந்த நாடுகளை விட உயர்ந்து வருகிறது.
இந்தியா 2026 ஆம் ஆண்டில் மானுட மேம் பாட்டுக் குறியீடுகளில் 193 நாடுகளின் பட்டியலில் 130 ஆவது இடத்தில் உள்ளது.
குறிப்பாக, வளர்ச்சி அடையாத குழந்தைகளின் எண்ணிக்கை (Stunted Children) பீகார், உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிறக்கும் குழந்தைகளில் 38 விழுக்காடு அளவிற்கு உள்ளது. நேரு காலத்தில் உள்நாட்டு உற்பத்தி காரணிகளைப் பயன்படுத்தி வளர்ச்சியைப் பெருக்கத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பொதுத் துறையில் இயங்கிய பல முதன்மையான தொழில்களும் தனியாருக்குக் கண்மூடிதனமாகத் தாரை வார்க்கப்பட்டன. பாஜக ஒன்றிய அரசு பாதுகாப்புத் துறை, காப்பீடு, வங்கிகள் துறைகளையும் விட்டு வைக்கவில்லை.
ஆளும் கட்சிக்கு நெருக்கமான சில தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துத் தரப்பட்டு வருகின்றன. அதானி, அம்பானி நிறுவனங்கள் போன்ற பல தனியார் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு, நிதி மோசடிகளை அச்சமின்றிச் செய்து வருகின்றன. ஆனால் மாவோ அடித்தளம் அமைத்த இன்று பெரும் வளர்ச்சியைப் பெற்று வரும் சீனாவைக் கண்டு அமெரிக்கா அஞ்சுகிறது.
ஆனால் அமெரிக்கா டிரம்ப் இந்தியா மீதும் வர்த்தகப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் உலக அளவில் கேலிக்குரியவராகச் சித்தரித்துப் பேசியும் ஏசியும் வருகிறார். ‘விசுவ குரு’ வாய் மூடிய ‘மெளன குரு’வாக மாறி வருகிறார். தான் அடைந்து வரும் தொடர் தோல்வி பயத்தால் புதுடில்லி கோட்டையில் கொடி ஏற்றும் நிகழ்வின்போது பிரதமர் நரேந்திரர் கோட்டில் தேசியக் கொடியின் வண்ணம் மாற்றி வைக்கப்பட்டதை சமூக ஊடகங்கள் பெரும் அளவில் பரப்பி வருகின்றன. பிரதமர் நரேந்திரரின் பதட்டம் வெளிப்பட்டுவிட்டது.
அறிஞர் அண்ணா 1967 ஆம் ஆண்டில் முதன் முதலாக முதலமைச்சராகக் கோட்டையில் உரையாற்றும்போது, ஆகஸ்ட் 15 நாளில் பிரித்தானிய ஆட்சி முடிவுற்றதைக் குறிப்பிட்டு “கணக்குத் தீர்த்த நாள்” என்றும் 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு நமது ஆட்சியாளர்கள் செய்த, செய்யத் தவறிய திட்டங்களை ஆண்டுதோறும் கணக்கிடும் நாளாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதால் “கணக்குப் பார்க்கும் நாள்” என்று குறிப்பிட்டார்.
(அப்போது கொடி ஏற்றும் உரிமை முதலமைச் சருக்கு வழங்கப்படவில்லை. முதலமைச்சர் கலைஞர்தான் அந்த உரிமையைப் பெற்று தந்தார்)
அறிஞர் அண்ணாவின் கருத்துப்படி விடுதலை நாள் எப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறதல்லவா?
புது டில்லி கண்டது வண்ண வண்ணத் தலைப் பாகையோடு நரேந்திரர் நடிப்பு உரை “திமாகி நக்ஸல் “வசனம்.
தமிழ்நாட்டில் நடந்தேறியதோ நடிகர் ஆட்சியின் நாயக நாடகம்.
