மதுரை, ஆக.16 சொத்து பத்திரத்தில் குறிப்பிட்டால்தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரம்மாள். இவர் மதுரை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது:- என் 4ஆவது மகன் ராம்குமாருக்கு என் சொத்தை செட்டில்மென்ட் மூலம் பத்திரம் எழுதி கொடுத்தேன். ஆனால் அவர் என்னை முறையாக கவனித்துக்கொள்ளவில்லை. இது குறித்து பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தேன்.
அதன்பேரில் நான் ராம்குமாருக்கு எழுதிக்கொடுத்த பத்திரத்தை வருவாய் அதிகாரி ரத்து செய்தார்.இதற்கு எதிராக ராம்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, “என்னை பராமரிக்க வேண்டும்” என்ற நிபந்தனையின்பேரில் பத்திரம் எழுதி கொடுக்கப்படவில்லை.
அதனால் ராம்குமார் தனது தாயாரை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.
நிபந்தனையின்றி அன்பளிப்பு
மகன் மீதான அன்பு, பாசம் காரண மாகவே இந்த சொத்தை அவருக்கு எழுதி வைத்தேன். அதன்மூலம் அவர் என்னை முறையாக கவனித்துக்கொள்வார் எனவும் நம்பினேன். மூத்த மகன், தனது சொத்தை அன்பளிப்பாக கொடுக்கும்போது அந்த மூத்த குடிமகனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை கட்டாயமாக சேர்க்கப்படுவதில்லை. இத்தகைய பரிமாற்றங்கள் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அன்பு மற்றும் பாசத்தின் காரணமாகவே செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தில் தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு ஏற்புடைய தல்ல. அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப் பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சந்திரவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்குரைஞர் ஆர்.வெங்கடேஷ் ஆஜராகி, “இந்த விவகாரத்தை பொறுத்தவரை மூத்த குடிமக்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் தங்களை பராமரித்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சொத்துகளை கொடையாக வழங்குகிறார்கள். இது தொடர்பான நிபந்தனையை எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க தேவையில்லை என்பதை ஏற்ெகனவே உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
அந்த உத்தரவுக்கு எதிராக தனிநீதிபதி உத்தரவு அமைந்து உள்ளது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.
ஏற்புடையதல்ல
இதையடுத்து நீதிபதிகள், “முதியவர்கள் தங்கள் பாசத்துக்கு உரிய வாரிசுகளுக்கு சொத்துகளை நிபந்தனை இன்றி கொடுக்கின்றனர். அவர்களும் அதை அவர் அன்பு, பாசம் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் கொடுக்கிறார்கள். இதனை பத்திரத்தில் நிபந்தனையாக தெரிவிக்க தேவையில்லை. ஆனால், பத்திரத்தில் குறிப்பிட்டால்தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என கூறுவது ஏற்புடையதல்ல” என அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி வழங்கிய தீர்புக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப் பட்டவர்கள் பதில் அளிக்க அறிவிக்கை அனுப்ப வேண்டும். இந்த விசாரணை 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
