சென்னை, ஆக. 12- கோயில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் தொடங்குவதற்காக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் கொளத் தூரிலும், திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயில் நிதியில் திருச்செங்கோட்டிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிதியில் விளாத்திகுளத்திலும் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து உயர்கல்வித் துறைச் செயலர் அரசாணை பிறப்பித்திருந்தார்.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், கோயில் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்குத் தடை விதிக்கக் கோரியும் டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பரணீதரன், “கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அதில் இந்து சமயப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் 3 ஆண்டு படிப்பையும் நிறைவு செய்துவிட்டனர். திருச்செங்கோடு மற்றும் விளாத்திகுளத்தில் இன்னும் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
கோயில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் கட்டுவதற்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் “கோயில் நிதியை கல்விக்காகப் பயன்படுத்தலாம்” என்று கூறி, மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
விளாத்திகுளம் மற்றும் திருச் செங்கோட்டில் கல்லூரிகள் கட்டுவதற்குக் கூடுதல் நிதி தேவைப் பட்டால் அரசின் உதவியை நாடலாம் என்றும், கல்லூரிகள் கட்டுவது தொடர்பாக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தினர்.
