தீபா ராஜ்மோகன்
பிறப்பும், இறப்பும் இவ்வுலகில் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. இதில் மற்ற உயிரினங்கள் யாவும் பிறப்பைக் கொண்டாடுவதில்லை; இறப்பையும் கொண்டாடுவதில்லை. மரணத்தைக் கூட அதனதன் இயல்பிலேயே அவை கடக்கின்றன. ஆனால், பிறப்பு – இறப்பு இரண்டையும் மனிதர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். கொண்டாட்டமோ கண்ணீரோ, எதுவுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இருப்பதில்லை. அதிலும் சாவு வீட்டில்கூட, ஆண், பெண் பாகுபாடு என்பது ஒவ்வொரு செயலிலும் கண்கூடாகத் தெரியும். அந்தப் பாகுபாட்டிற்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
இறப்பு வீடுகளில் ஆண்களின் செயல்பாடுகள் எப்படியானதாக இருக்கும் என்றால், இறந்த உடலைப் பார்ப்பார்கள்; பிறகு ஒரு மாலையை அணிவிப்பார்கள். ஓரமாய் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொள்வார்கள். கட்டிப்பிடித்து அழுவதோ, கத்துவதோ போன்ற செயல்கள் நெருங்கிய உறவைத் தவிர்த்து யாரிடத்திலும் இருக்காது. பெரும்பாலும் மரண வீடுகளில் ஆண்கள் அவர்களது இயல்பிலேயே இருந்துவிடுகிறார்கள். அது நல்லதுதான்.
ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லையே! நெருங்கிய உறவாக இருந்தால், இறந்த உடலைப் பார்த்தவுடன் கதற வேண்டும். ஒப்பாரி வைக்க வேண்டும்; இல்லையென்றால் நிச்சயமாகச் சிறிதளவு கண்ணீரையாவது சிந்தியாக வேண்டும். அழுகை என்பது எல்லோருக்கும் அனைத்து நேரத்திலும் வந்துவிடாது. உண்மையாகவே நாம் நேசித்த ஒருவருக்காக எந்தவொரு போலித்தனமும் இல்லாமல் வரும் கண்ணீரை, கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியுமா? இல்லை அழாமல் இருப்பதால் வருத்தம் இல்லையெனச் சொல்ல முடியுமா? ஆனால் வருத்தம், கவலை என்றாலே பெண்களுக்குக் கண்ணீர்தான் அடையாளமாகிவிட்டது. மரண வீடுகளில் பல பெண்கள் அழுதே ஆக வேண்டும். இல்லையென்றால் பார்ப்பவர்கள் அல்லது உறவுக்காரர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் என்ற பயத்திலேயே பல பெண்கள் போலியாக அழ வேண்டிய சூழல் உள்ளது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றபோது, அவரிடம் அந்த அளவிற்குப் பழக்கம் இல்லாததால் மாலையை அணிவித்துவிட்டு அமர்ந்தேன். அமர்வதில் கூட ஆண் – பெண் பாகுபாடு இருந்தது. ஆண்கள் அனைவரும் நாற்காலியிலும், பெண்கள் அனைவரும் தரையிலும் அமர்ந்திருந்தார்கள். அருகில் இருந்த எனது உறவுக்காரப் பெண், “என்ன அழாமல் அப்படியே உட்கார்ந்து இருக்கிறாய்?” என்றார்.
“எனக்கு அவ்வளவாகப் பழக்கம் இல்லை. நான் அவருடன் பேசியதே இல்லை. எனக்கு அழுகை வரவில்லை” என்றேன்.
அதற்கு அவர், “அப்படிச் சொல்லாதே! இங்கே இருக்கும் அனைவரும் உன்னை நோட்டமிடுவார்கள்” என்றார்.
“மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக அழ முடியுமா? அப்படி அழுதாலும் எப்படி கண்ணீர் வரும்?” என்றேன்.
“எனக்கும் தான் அழுகை வராது. ஏதாவது நமக்கு நடந்த கஷ்டத்த நினைச்சு அழ வேண்டியதுதான்” என்றார் அவர்.
“அப்படிப் பொய்யாக நடித்து அழுது எதை நிரூபிக்கப் போகிறோம்?” என்று கேட்டதற்கு, “நமக்கும் வருத்தம் இருக்குன்னு மத்தவங்களுக்கு தெரிய வேண்டாமா?” என்றார்.
“ஆண்கள் என்ன அழுது கொண்டுதான் இருக்கிறார்களா? அதற்காக அவர்களுக்கு வருத்தம் இல்லை எனச் சொல்ல முடியுமா?” என்றேன்.
“ஆம்பளைங்க அழ மாட்டாங்க, ஆம்பளைங்க அழவும் கூடாது. டவுன்ல அப்படி இருந்திருக்கலாம். இங்க கிராமத்துக்கு வந்தா இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்” என அவர் எனக்கு ஒரு வகுப்பே எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அருகில் இருந்தவர் அதற்கு ஒரு தீர்வைச் சொன்னார் பாருங்கள்! “இதுக்கு தான் நான் வாசல் கிட்ட வரப்பவே கண்ணு ஓரத்துல கோடாளி தைலத்த லேசா வச்சுப்பேன். எரிச்சல்ல கண்ணீர் வந்துடும்” என்றாள். அப்பொழுது அது சிரிப்பாக இருந்தாலும், துக்க வீடுகளில் பெண்கள் அழுதே ஆக வேண்டும், இல்லையென்றால் “இவளாம் ஒரு பொம்பளையா?” என்ற இழி சொல்லுக்கு ஆளாக நேரிடும். இதைத் தவிர்க்க இவ்வளவு முயற்சிகளையா செய்ய வேண்டும் என்று நினைத்தபோது வருத்தமாகவும் இருந்தது.
மேலும், சும்மா இருந்த சிரங்கைச் சொரிந்து விட்டதைப் போல, அந்த உறவினரின் பேச்சுக்குப் பிறகுதான் அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொன்றாகக் கவனிக்கத் தொடங்கினேன். பெண்கள் குழு குழுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். யாரேனும் புதிதாக ஒருவர் வந்து அழுதால், அனைவரும் ஒருசேரக் கட்டிக்கொண்டு அழுதார்கள். பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பி, மீண்டும் குழுவாக அமர்ந்து பேசத் தொடங்கி விடுவார்கள். ஒரு குழு துக்க நிகழ்விற்கு வரும் ஒவ்வொருவரைப் பற்றியும் குறை பேசிக் கொண்டிருந்தது.
“சாவு வீட்டுக்கு எப்படி வரா பாரு? எங்கேயோ விசேசத்துக்கு போற மாதிரில்ல வந்துருக்கா… ஜாக்கெட்டை பாரு எவ்வளவு டைட்டா போட்ருக்கா… இவ வயசுக்கு பின் கழுத்து இவ்வளவு இறக்கம் வைக்கணுமா?”
“தாலி செயின் புதுசு போலருக்கே… இவளுக்கெல்லாம் எங்க இருந்துதான் காசு வருமோ?” இப்படி ஒரு குழு புதிதாக வரும் ஒவ்வொரு பெண்ணையும் நோட்டமிட்டுக் குறை கூறிக்கொண்டே இருந்தது.
அடுத்த குழுவில் அழுகை வழிந்து ஓடிக்கொண் டிருந்தது. உண்மையாகவே பாசத்தில்தான் அழுது கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்வில் நடந்த துயரங்களையும் இழப்பையும் சொல்லி அழுது கொண்டிருந்தார்கள். எப்படியோ பெண்கள் தங்கள் மனதில் சுமக்கும் துயரத்தை இறக்கி வைக்கும் இடமாக அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே என்ற சிறு திருப்தி எனக்கு ஏற்பட்டது.
ஆண்கள் அமர்ந்திருக்கும் பக்கம் பார்த்தேன். சிலர் ஓரமாக மது அருந்திக்கொண்டும், சீட்டு விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். சிலரோ சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அப்போது புதிதாக ஒரு பெண் வர, அவர் இறந்த உடலுக்கு மாலையை அணிவித்துவிட்டு ஓரமாகப் போய் அமர்ந்தார். எனக்குப் பின்னால் இருந்த ஒரு வயதான பெண்மணி, “வந்த வேகத்துல போய் ஒய்யாரமா உட்காரதப் பாரு. ஒரு சொட்டு கண்ணீர் விட்டா என்ன?” என்று முணுமுணுத்தார். எனக்கும் இதே வசைதான் கிடைத்திருக்குமோ என்று அப்போது தோன்றியது! ஆனால் பாவம், அந்தப் புதிதாக வந்த பெண் வேறொருத்தி வரும் வரை இவர்களது வாயில் வறுபடப் போகிறாளே என்று நினைத்தபடி அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
சில மாதங்களுக்கு முன்பு, எனக்குத் தெரிந்த ஒருவர் உடலில் ஏற்பட்ட நோயின் காரணமாகப் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் மாறி மாறி, எந்த வேலையிலும் சரிவர ஈடுபட முடியாமல் மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருந்தார்கள். மனைவி எப்பொழுதும் அவருடன் தங்க வேண்டிய சூழலில் இருந்ததால், வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் அவர் இறந்துவிட, மதியம் போல் அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இரவு முழுவதும் தூங்காமல் அந்த மனைவி அழுது கொண்டே இருந்தார். மறுநாள் அவளையும் அறியாமல் தூக்கம் கண்ணைச் சொருக, சில நிமிடங்கள் உறங்கிவிட்டார்.
அதனை ஒரு பெரும் குற்றம்போல் மற்ற பெண்கள் பேசிக் குறை கூறியதும், சிரித்து நையாண்டி செய்ததும் ஊர் முழுக்கப் பரவிக் கிடந்தது. மாதக்கணக்கில் கணவரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்தபோதோ, அவர்கள் வறுமையில் வாடியபோதோ யாரும் அவர்களைப் பற்றிப் பேசியதே இல்லை. ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண் விடுபட்டிருக்கலாம். ஒரு நாள் முழுக்க உறங்காதவள் சில நிமிடங்கள் உறங்கினால்தான் என்ன? இதனை ஆண்கள் கவனிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால் பெண்களோ? பெண்களுக்கான பிரச்சினையின் போது எல்லோரும் குரல் எழுப்பாவிட்டாலும், முடிந்தவரை தடையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெண்களை வைத்தே பெண்களை வீழ்த்துகிறது பழைய சமூக கட்டமைப்பு.
சரி, அதோடுதான் முடிந்ததா என்றால், அந்தப் பெண் கணவன் இறந்த பிறகு நல்ல ஆடை உடுத்தினால், ஒரு சிறிய பொட்டு வைத்தால், மூன்று மாதத்திற்குள் நல்நிகழ்வுகளுக்குச் சென்றால், கொலுசு அணிந்தால் என ஆண்களை விட மற்ற பெண்கள் கூறும் குறைகளைத் தாங்க முடியவில்லை. மேலும், கணவர் இறந்தவுடன் 16 நாட்கள் வரை பெண்கள் ஒரு நாள் விடாமல் நாள்தோறும் தலையில் பூ, நிறைந்த குங்குமம், கை நிறைய வளையல் அணிந்து கொள்கிறார்கள். ஏனென்றால், அதன் பிறகு அவர்கள் அதை அணிந்து கொள்ள முடியாது என்பதால் ஆசை தீர அணிந்து கொள்ள வேண்டுமாம். கணவர் இறந்த 5ஆம் அல்லது 7ஆம் நாட்களில் தனது பிறந்த வீட்டு உறவுகளின் வீட்டிற்குச் சென்று தங்கி, உணவு உண்டுவிட்டு வர வேண்டும். அப்படிச் செய்யா விட்டால், அதன் பிறகு ஓர் ஆண்டு வரை செல்லக் கூடாதாம். ‘கருமாதி’ என்ற பெயரில் பல சடங்குகளையும் கட்டுப்பாடுகளையும் வைத்துப் பெண்களை வதம் செய்கிறது இந்தச் சமூகம். பொதுவாகக் கிராமப்புற இறப்பு வீடுகளில் தேநீர் தயாரிக்க, வருபவர்களுக்குத் தேநீர் கொடுக்க, அழுது கொண்டிருந்தாலும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பெண்கள்தான் கிளம்ப வேண்டும்.
“அவசரமா துக்க வீட்டுக்கு போகணும், இந்த புடவ வேற. இதக் கட்டுறதுக்குள்ள…” என்று அலுத்துக்கொண்டவளிடம், “ஏன் சுடிதார் போட வேண்டியதுதானே?” என்றால், “கல்யாணம் ஆகிட்டு, புள்ள பொறந்துட்டு ஊருக்குள்ள அப்டிலாம் போக முடியாது. உனக்குத் தெரியாது அதெல்லாம்” என்கிறாள்.
ஆக, பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் திருமணம் ஆகிவிட்டால் துக்க வீட்டிற்குப் போகும்போது சுடிதார் அணியக்கூடாது, சேலைதான் கட்ட வேண்டும் எனச் சொல்லும் சமூகத்தில்தான் இன்னமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் சரியா என ஒரு வயதான பெண்மணியிடம் கேட்டபோது அவர் சொல்லியது: “கணவர் இறந்தப்ப நான் வெள்ளப்புடவ தான் கட்டுனேன். பொட்டு வச்சுக்கவே மாட்டேன். நகை போட்டுக்க மாட்டேன். இப்பதான் தோடு மட்டும் போடுறேன். ஓர் ஆண்டுக்கு எந்த விசேசத்துலயும் கலந்துக்க மாட்டோம். நாங்க எல்லாம் அப்ப அப்படி இருந்தோம். ஆனா இப்போ உள்ள பொம்பளைங்க எங்க அதெல்லாம் பண்றாங்க? இதெல்லாம் பார்க்க நல்லாவா இருக்கு?” என்றார் மிகவும் ஆதங்கத்தோடு.
ஒருவேளை அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு இப்போதுள்ள பெண்களுக்குக் கிடைத்துவிட்ட ஏக்கம், கல்வியறிவின்மை, சமூகத் தொடர்பு இல்லாமை, பழைய நம்பிக்கைகள், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட கலாச்சாரம் போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம். இதெல்லாம் சரியா என ஓர் இளம் வயது பெண்மணியிடம் கேட்டபோது அவர், “இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இந்த நிலைமையெல்லாம் எப்பதான் முழுசா மாறுமோ?” என்றாள்.
பெரும்பாலும் ‘என்று மாறுமோ?’ என்பதை விட, ‘நம்மால் ஏன் மாறக்கூடாது?’ என்பதைப் பெண்கள் அனைவருமே சிந்திக்க வேண்டும். சடங்குகளையும் கட்டுப்பாடுகளையும் யார் உருவாக்கி இருந்தாலும், பெண்கள் அதை விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக் கொள்கிறார்கள். காரணம், அதற்குப் பின்னால் சொல்லப்பட்ட தீட்டு, தோசம், குடும்பம் பாதிக்கப்படும் போன்ற பய உணர்வால் அவை அரங்கேற்றப்படுகின்றன. மாற்றம் வேண்டும் என்றால், அதற்கு முதலில் மாற வேண்டியது பெண்கள்தான். நமக்கு ஒன்று வேண்டாம் அல்லது தேவையற்றது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, கீழே உள்ளவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், மேலே உள்ளவர்கள் அல்லது மூன்றாம் தரப்பினர் அந்தச் சண்டையைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான லாபத்தைத் தேடிக்கொள்வார்கள். அதைப்போலப் பெண்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல், ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டு, தங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தால், மாற்றம் என்பது கனவாகத்தான் இருக்கும்.
