எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 641 இடங்கள் ஒதுக்கீடு!

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 11- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று (10.8.2026) வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) கலந்தாய்வு நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீடு) 7,157 எம்பிபிஎஸ் இடங்கள், 1,383 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 537 எம்பிபிஎஸ் இடங்கள், 104 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவை தவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,966 எம்பிபிஎஸ், 580 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இந்தப் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 35,926 பேர், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு இடங்களுக்கு 3,625 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,956 பேர் இடம் பெற்றுள்ளனர். விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12ஆவது இடத்தையும், தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பிடித்த அவர், தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

புதுக்கோட்டை மாணவி வி.சிறீனிகா 700 மதிப்பெண்களுடன் 2ஆம் இடத்தையும், விருதுநகர் மாணவர் ஏ.எம்.சுடர் 696 மதிப்பெண்களுடன் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 5 மாணவர்கள், 5 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், அரசு பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் நாகப்பட்டினம் மாணவர் எம்.தினேஷ் 599 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், சேலம் மாணவர் பி.எஸ்.தரனீஷ் 595 மதிப்பெண்களுடன் 2ஆம் இடத்தையும், புதுக்கோட்டை மாணவர் ஆர்.ராஜேஷ் 595 மதிப் பெண்களுடன் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆக.13ஆம் தேதி https://tnmedicalselection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் தொடங்குகிறது.

அதேநாளில், சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாகச் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.

தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *