காத்மாண்டு, ஆக. 10- நேபாளத்தில் 8 அரசியல் கட்சிகள் சேர்ந்து ‘முன்னேற்றக் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
நேபாள தலைநகர் காத்மாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனதா சமாஜ்வாதி கட்சி, ஜனாமத் கட்சி, ஆம் ஜனதா கட்சி, நாகரிக் உன்முக்தி கட்சி நேபாளம், பிரகதிஷீல் லோக்தந்திரிக் கட்சி, நேபாள சங்கியா சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி நேபாளம், கம்புவன் ராஷ்ட்ரீய மோர்ச்சா கட்சி ஆகியன சேர்ந்து புதிய கூட்டணி தொடா்பான அறிவிப்பை 8.8.2026 அன்று வெளியிட்டன.
பின்னா், முன்னேற்றக் கூட்டணி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பொதுவான பிரச்சினைகள், பொதுவான திட்டங்களில் இணைந்து செயல்பட முடிவெடுத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதேசி இன சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் இடையே அரசியல் கூட்டணி ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடைபெற்றன. அதன் தொடா்ச்சியாகவே 8 கட்சிகள் புதிய கூட்டணியை அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து வெளியேற மாட்டோம் நெதன்யாகு திட்டவட்டம்
ஜெருசலேம், ஆக. 10- கடந்த மாதம் டிரம்ப் அறிவித்த காசா தொடர்பான ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து வெளியேற மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று (9.8.2026) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “கடந்த மாதம் காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது. முதலில் ஹமாஸ் அமைப்பு உண்மையாகவே தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அது ஏதோ ஒரு ‘போலி ஆயுதக் களைப்பாக’ இருக்கக்கூடாது. அதுவரை இஸ்ரேலிய ராணுவம் எந்தவொரு வெளியேற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளாது; அதேநேரத்தில் எங்கள் படைகள் மற்றும் மக்கள் மீதான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து முறியடிக்கும்” என்று கூறினார்.
மேலும், “உண்மையில், ஆயுதங்களைக் கைவிடுதல் மற்றும் இஸ்ரேலியப் படைகளை விலக்கிக்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டமாகவே மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்” என்றும், காசாவுக்கான திட்டங்கள் குறித்து வாசிங்டனுடன் தொடர்ந்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இஸ்ரேலின் இந்த நிராகரிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட டிரம்ப்பின் காசா அமைதித் திட்டத்திற்கு மற்றொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும், பெருமளவில் சிதைந்துபோன பாலஸ்தீனியப் பகுதியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை இஸ்ரேலிய படைகள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
