இஸ்ரேல் – காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு!
வாசிங்டன், ஜூலை 31– இஸ்ரேல் – காஸா போருக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
2023 அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு உலக நாடுகளில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும்கூட, காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தை காஸா அமைதி வாரியம் மேற்கொள்ளவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைப்பதால், காஸாவில் புதிய பாலஸ்தீன அரசு உருவாவதற்கான முக்கியமான முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய காஸா நிர்வாகக் குழுவிடம் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, காஸாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறும் என்றும், பன்னாட்டுப் படையும் புதிய பாலஸ்தீனத்தின் காவல்துறையும் காஸா மக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
காங்கோவில் 1,500-அய் கடந்த எபோலா பலி எண்ணிக்கை!
ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!
கிண்ஷாசா, ஜூலை 31– காங்கோவில், பரவி வரும் எபோலா பாதிப்புகளால் இதுவரை 1,500-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே 15 அன்று பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட புண்டிபுகியோ வைரஸ் தொடர்புடைய எபோலா பாதிப்புகளுக்கு இதுவரை எந்தவொரு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
காங்கோ முழுவதும் எபோலா பரவல் தீவிரமடைந் துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 50 சதவிகித பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வரை மட்டும் 3,442 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், காங்கோவில் 797 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,521 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ மாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உள்நாட்டு மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாக உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.
காங்கோவின் இடூரி மாகாணத்தில் மட்டும் அந்நாட்டில் கண்டறியப்பட்ட 90 சதவிகித எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் மதக் கலவரம்
சுன்சாரி, ஜூலை 31- இந்திய எல்லையை ஒட்டிய நேபாளத்தின் சில பகுதிகளில் மத ரீதியான பதற்றத்தைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான சுன்சாரி மாவட்டத்தில், மத ரீதியான வன்முறையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் நீடித்துள்ளது.
மாவட்டத்தின் கப்தன்கஞ்ச் பகுதியில் கடந்த 26.7.2026 அன்று இருவேறு மதச் சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சிகளின்போது ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் மதக் கொடிகளைக் கட்டுவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
இந்தப் பதற்றமான சூழலையடுத்து விதிக்கப்பட்ட ஊரடங்கை 28.7.2026 முதல் காலவரையற்று நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமை படிப்படியாகச் சீரடைந்து வருவதாக சுன்சாரி மாவட்டத்தின் உதவித் தலைமை அதிகாரி போஷன் லாம்மிச்சனே தெரிவித்தார்.
சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர, திங்களன்று முதன்முதலில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை உள்பட 10 பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவின் கீழ், மக்கள் நடமாட்டம், ஒன்று கூடுதல், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு முக்கிய பகு திகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், குறிப்பாக சுன்சாரி மாவட்டத்தின் நிலைமை குறித்தும் ஆய்வு செய்ய பிரதமர் பலேந்திர ஷா வியாழக்கிழமையன்று தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
