நீதித்துறையில் சமூகநீதி எப்போது?

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்தும் ‘உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026’-க்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இம்மாற்றத்தின் மூலம், தலைமை நீதிபதியைத் தவிர்த்த ஏனைய நீதிபதிகளின் எண்ணிக்கை 33-லிருந்து 37-ஆக உயர்கிறது.

இவ்வாண்டு ஏப்ரல் 30 நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 92,823 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, தேசிய நீதித்துறை தரவுகள் (National Judicial Data Grid) தெரிவிக்கின்றன. தேங்கிக் கிடக்கும் இவ் வழக்குகளைத் தீர்க்க, அதிக நீதிபதிகள் வேண்டும் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது புதிது அல்ல. 2019-ஆம் ஆண்டு கூட, இதே போல 31-லிருந்து, 34 ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
1950-ஆம் ஆண்டு 8 நீதிபதிகள் என்ற அளவில் தொடங்கியது. பின்னர் படிப்படியாக 11 (1956), 14 (1960), 18 (1978), 26 (1986), 31 (2009) என்று உயர்த்தப்பட்டு இன்றைய நிலையை எட்டியுள்ளது.

வெறும் நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு மட்டும் போதாது!

அரசியலமைப்பு விவகாரங்களுக்காக டில்லியில் ஓர் அரசியலமைப்பு அமர்வையும், உயர் நீதிமன்றங்களின் மேல்முறையீட்டு வழக்குகளைத் தீர்ப்பதற்காக டில்லி, சென்னை அல்லது அய்தராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் நான்கு பிராந்திய மேல்முறையீட்டு அமர்வு களையும் அமைக்கலாம் என்று பரிந்துரைத்து 2009-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி டாக்டர் ஏ.ஆர்.லெட்சுமணன், தலைமையிலான பதினெட் டாவது சட்ட ஆணையத்தின் 229-ஆவது அறிக்கை – இது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியது மட்டுமல்ல, நீதிமன்ற அணுகலில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குமானதாகும். ஆனாலும், அதை உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு 2010-இல் நிராகரித்தது. டெல்லிக்கு வெளியே அமர்வுகள் நடத்துவதற்கு “எந்த நியாயமும் இல்லை” என்று நீதிமன்றம் கூறியது. இதே போல தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு வழக்காக 2016-லிருந்து, இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. இவையெல்லாம் நீதிபதிகளின் எண்ணிக்கை, நீதிமன்றங்களின் எண்ணிக்கை தொடர்பானவை.

ஆனால், நீதித்துறைக்குள்ளே பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பெரிதும் அதிகார மட்டங்களில் இருந்து பதிலே வருவதில்லை. ‘நீதித் துறையில் சமூகநீதி வேண்டும்’ என்ற குரல் நீண்ட நெடுங்காலமாக நம்மால் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் அலுவலகப் பணியிடங்களில் கூட இடஒதுக்கீடு இல்லாமல் இருந்ததைக் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யாக இருந்த மாண்பமை பி.ஆர்.கவாய் அவர்கள் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் என்பதே ‘நீதித் துறையில் சமூகநீதி எப்படி இருக்கிறது’ என்பதற்கான சான்று ஆகும்.

உச்சநீதிமன்றத்தில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்து வெளிப்படையான தரவுகள் மிக அரிதாகவே உள்ளன. பொத்தாம்பொதுவாக சில பதில்களைத் தான் நாடாளுமன்றத்திலும் தருகிறார்கள். சட்ட அமைச்சகம் வழங்கிய தரவுகளை நேற்று (5.8.2026) தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், 26 பேர் (4.38%) பட்டியல் ஜாதியினராகவும், 14 பேர் (2.36%) பட்டியல் பழங்குடியினராகவும், 80 பேர் (13.49%) பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் உள்ளனர். அதே சமயம், 80% பேர் உயர் ஜாதியினராக உள்ளனர். எனவே, அங்கு பன்முகத்தன்மை குறைபாடு உள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதை கட்டாயமாக்கும் வகையில் ஒரு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்” என்ற குரலை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

இதுதான் கடைசியாக நாடாளுமன்றத்தில் தரப்பட்ட தரவு. ஆனால், இதில் கூட உச்சநீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் உயர்ஜாதியினர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் என்பதற்கு எந்தத் தெளிவான விவரமும் இல்லை. இதுவரை ஒரே ஒரு பட்டியல் பழங்குடியின நீதிபதிதான் (2002 முதல் 2008 வரை) உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார். அதற்கு முன்னும் இல்லை; பின்னும் இல்லை என்பது எவ்வளவு பெரிய அநீதி. இந்தியாவில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு பட்டியல் பழங்குடியினருக்கு (ST) வழங்கப்படுகிறது எனில், அவர்களின் மக்கள் தொகை எவ்வளவு என்பதை ஊகிக்க முடியும். (ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முடிந்து விவரங்கள் வரும் வரை ஊகிக்கத் தான் முடியும்)

பட்டியலின ஜாதிகளிலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு ஒருவர் செல்லும் கணக்கு முதன்முதலில் தமிழ்நாட்டிலிருந்து தான் தொடங்கியது. தந்தை பெரியாரின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக அமர்த்தப்பட்ட  மாண்பமை நீதியரசர் ஏ.வரதராஜன் தான் 1980-இல் முதல் ஒடுக்கப்பட்ட சமூகத்து உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். அவரையும் சேர்த்து இதுவரை 7 பேர் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர் என்றால், சமூகநீதி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கும் நீதிபதிகள் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு தான். இந்துமதம் அல்லாத பிற மதங்களிலிருந்து வந்திருப்போர் எண்ணிக்கை, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை என்று எதிலும் பன்மைத்தன்மை நிலைநிறுத்தப்படவில்லை. இப்போது கூட 34 பேரில் இருவர் மட்டுமே பெண்கள். 1989-இல் முதல் முறையாக மாண்பமை நீதிபதி பாத்திமா பீவி அவர்களில் தொடங்கி இதுவரை 12 மகளிர் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாகியுள்ளனர்.

பன்மைத்துவம் வேண்டும் என்று கொலீஜியமும் ஒரு முறை கூறியுள்ளது. ஆனால் அதற்கான நடைமுறை உருவாக வேண்டாமா?

எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் உயர்ஜாதியினரே அமர்த்தப்படுவார்கள் என்றால், அதனால் எந்தச் சமூகமாற்றமும் நிகழ்ந்துவிடாது. நீதித்துறையில் சமூகநீதி என்பது உறுதிசெய்யப்பட வேண்டும். அதற்கு நாம் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *