ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதோ, அப்பெண்ணின் உயிர், உடல் உறுப்புக்கோ, ஆரோக்கியத்திற்கோ, மன அல்லது உடல்ரீதியாக கடுமையான காயம் ஏற்படுத்துவதோ, ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடைய – வேண்டுமென்றே செய்யப்படும் எந்தவொரு நடத்தையோ கொடுமை என்று கருதப்பட்டு, அப் பெண்ணைக் கொடுமைக்கு உள்ளாக்கும் கணவன் அல்லது கணவனின் உறவினர் எவராயினும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனையும், அபராதமும் வழங்கி தண்டிக்க வகை செய்வதே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ (அல்லது புதிய பாரத் நியாய சன்ஹிதா பிரிவு 85) ஆகும்.
இப்பிரிவு (498ஏ) பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட கணவருக்கு மட்டுமே பொருந்தும் என்று இவ்வளவு காலம் சொல்லப்பட்டு வந்தது. சட்டமும் அதன் வார்த்தைகளின்படி, அப்படியே வியாக்கியானம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கே.சிங் அடங்கிய அமர்வு நிராகரித்துள்ளது.
“ஒரு சமூகப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பிரிவு, பெண்களுக்கான சமத்துவத்தை உறுதி செய்வதையும், கடந்த காலத்திலிருந்து தொடரும் ஆண்களின் மேலாதிக்க மனப்பான்மையிலிருந்து விலகிச் செல்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது; எனவே, இப்பிரிவை விளக்குவதிலும் செயல்படுத்துவதிலும் இந்த விரிவான நோக்கமே அடிப்படையாக இருக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
“கொடுமை என்பது, தான் நுழையும் வீடு திருமணமான பெண்ணுடையதா, இல்லையா என்று வாசலிலேயே பார்ப்ப தில்லை. அது உள்ளே நுழைந்ததும், அழிவை ஏற்படுத்தும் அதன் போக்கு மேலும் தீவிரமடைகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆண் – பெண் இடையேயான உறவு என்றால் அதில், ‘ஆண் உயர்ந்தவர், அவரே எதையும் நிர்வகிக்கத் தகுந்தவர், அவருக்கே முன்னுரிமை, முற்றுரிமை எல்லாம் உண்டு’ என்பதே காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் நிலைப்பாடு. அதிலும் திருமணம் ஆன இணையர் என்றால், ‘ஓர் ஆண், தன் மனைவியை அடிப்பதற்கு உரிமை உண்டு’ என்பதே ‘பாரத’ப் பண்பாடாகச் சொல்லப்பட்டு வந்தது. அதில் எந்தத் தவறும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியான முத்துசுவாமி அய்யர் தீர்ப்பு வழங்கிய வரலாறெல்லாம் இங்குண்டு.
இந்நிலையில், 2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதும், ‘திருமணமான பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும் குற்றம்’ என்று நிலை நிறுத்தப் பட்டதேகூட இந்தியாவில் பெரும் மாற்றம் தான். அதன் அடுத்த கட்டமாக, வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே நேற்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகும்.
இந்தியாவில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் முறை (‘லிவ்-இன்’) பெருகி வருகிறது. இருவரும் மனம் ஒப்பி, இணைந்து வாழ விரும்பும் வரை வாழவும், பிரியநேரும் சூழல் எழுந்தால், இயல்பாகப் பிரிவதும் இந்த உறவின் உலகளாவியப் பண்பாகும். அது வரவேற்கப்பட வேண்டிய முற்போக்கான ஒரு வாழ்க்கை முறையே ஆகும். எனினும், இந்தியாவின் இயல்பான ஆணாதிக்க மனநிலை, இதையும் குடும்ப உறவின் தன்மையுடனே நடந்துகொள்ள வைக்கிறது. அதனால், குடும்பங்களில் கணவன் – மனைவியின் மனநிலையிலேயே இதையும் அணுகுவதும், அதனால் சிக்கல்கள் எழுவதும் நடப்பாக இருக்கிறது. அந்தச் சிக்கல்களைக் களைவது குறித்து, உச்சநீதிமன்றம் பல முறை வழிகாட்டும் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.
தனி மனித சுதந்திரத்திற்கு வாய்ப்புத் தரும் ‘லிவ்-இன்’ முறையில், குடும்ப வன்முறை போன்ற தாக்குதல்களும், கொடுமைகளும் நடப்பது அவலமும் அது தடுக்கப்பட வேண்டியதும் ஆகும். ஆனால், லிவ்–இன் முறையைத் தப்பிக்கும் வழியாகப் பயன்படுத்தி ‘நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, இதை 498ஏ பிரிவின் கீழ் கொண்டுவரக் கூடாது’ என்பது ஏற்கத்தக்க வாதம் அல்ல! அது சட்டப்படி தப்பித்துக் கொள்வதற்கான குதர்க்கவாதமாகும். எனவேதான் அதை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
“எந்தவொரு நபரும் தங்களுக்குக் கொடுமை இழைக்கப் படலாம் என்பதை அறிந்தோ அல்லது எதிர்பார்த்தோ ஓர் உறவில் நுழைவதில்லை. ஓர் இணை, தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும்போது, எப்போதும் நல்ல நோக்கங்களுடனும் மகிழ்ச்சியைத் தேடியுமே அதைத் தொடங்குகிறார்கள். இருப்பினும், காலப்போக்கில் சில உறவுகள் இத்தகைய சிக்கலான பாதையில் செல்லக்கூடும். சட்டம் இதற்கான ஏற்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும். பிரிவு 498ஏ-வின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ‘திருமணமானவர்களுக்கும் ‘திருமணத்தைப் போன்ற தன்மையிலான இணைந்து வாழும் உறவுகளுக்கும்’ வேறுபாடு காட்டுவது குடும்ப வன்முறையைத் தடுக்கும் நோக்கத்துடனானது அல்ல. எனவே, இது அரசியலமைப்பின் 14-ஆவது பிரிவுக்கு முரணானதாக உள்ளது’’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
‘நகர்ப்புறங்களில் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் முறை (‘லிவ்-இன்’ உறவுகள்) யதார்த்தமாகிவிட்ட நிலையில், இத்தகைய உறவைத் தேர்ந்தெடுப்பவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவும், துன்புறுத்தும் இணையிடமிருந்து அவர்களைக் காக்கவும் சட்டங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று இதன் மூலம் மீண்டும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சமூகத்தின் போக்கின் பின்னால் சட்டம் தத்தித் தத்தித்தான் வரும் என்றாலும், அதை நோக்கி விரைவுபடுத்தல் அவசியம்.
