புதுச்சேரி, ஜூலை 30– புதுவையில் 9 நாட்கள் ஆகியும் இன்னும் இலாகா விவரம் வெளியிடப்படவில்லை. எனவே முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்று அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டபோதிலும், அவர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை.
புதுவை மாநில பட்ஜெட்டுக்காக ஒன்றிய அரசு ரூ.14,300 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஆகஸ்டு இறுதிக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். துறை வாரியான நிதியைப் பெற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அவசியமென்பதால், முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 20ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கைலாஷ்நாதனிடம் இலாகா பட்டியலை வழங்கினார். வழக்கமாக சில மணி நேரங்களில் வெளியிடப்படும். இதுதொடர்பான அரசாணை, 9 நாட்கள் ஆகியும் இன்னும் வெளியிடப்படவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சி சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் தங்கள் அமைச்சர்களுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட இலாகாக்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி அதனை கொடுக்க முன்வரவில்லை. முதலமைச்சர் ரங்கசாமி வழங்கியுள்ள பட்டியலில் பா.ஜனதா அமைச்சர்களுக்கு உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் இடம்பெறவில்லையெனத் தெரிகிறது.
இது குறித்து பா.ஜனதாவினர் கட்சித் தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் இதுவரை இலாகா அறிவிக்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜனதா நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து பேசினர். ஆனால் கடந்த ஒரு வாரமாக அவர்கள் முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசவில்லை.
இதற்கிடையே முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜனதா கட்சி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. பா.ஜனதா தலைமையும் நேரடியாகரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசவில்லை. இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் முற்றியுள்ளது. அண்மைக் காலமாக பா.ஜனதா அமைச்சர்கள் அரசு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர். எனவே என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
